பாரிஜாதம் மலர் மருத்துவம்

பவளமல்லி என்ற பாரிஜாதம்

பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit

 
 

பவளமல்லிகை தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. ஆம், தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லி மரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும்.

பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும். இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்துதான் பறிக்கப்படும். பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால், இதற்கு பவள மல்லி விதிவிலக்காக உள்ளது. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன்படுத்துவார்கள். பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பவளமல்லி சிறுமரமாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம். 1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும். தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்றுநீண்டு முட்டைவடிவில் சொரசொரப்புடன் இருக்கும். பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்டவடிவில் உறைஅமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது. பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது. சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.

தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்று விளக்குவார்கள். பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது. பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள். தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லிமரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை
உதிர்த்தது என்று கூறப்படுகிறது.

இத்தகைய பவளமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டுபிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து. கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.

விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்! தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

வீட்டிலும் வளரக் கூடிய இந்த பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்யமானது; நம் உடல்நலத்தை பாதுகாக்கக் கூடியது.

நன்றி: தினகரன்

மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...  
To Buy the Herbals and also For Contact...