இதயத்திற்கு நன்மை செய்யும் நல்ல எண்ணெய்!

இதயத்திற்கு நன்மை செய்யும் நல்ல எண்ணெய்!

 நல்லெண்ணெய் இவ்வளவு விஷயங்களை செய்யுமா? என்று  தெரிந்து கொள்ளாமல் போயிட்டோமே! 

இதயம் காக்கும் நல்லெண்ணெய் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தில் தொன்று தொட்டு இடம்பெற்று வந்து கொண்டிருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை அள்ளித் தரும் இந்த நல்லெண்ணெயை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் ஏராளமான பிரச்சினைகளில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம். அப்படியான இந்த நல்லெண்ணெய் தரும் நன்மைகள் நமக்குத் தெரியாத விஷயங்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆயில் புல்லிங்

தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்ததோடு சரி, அதை பலரும் கண்டுகொள்ளாமல் கூட இருக்கின்றனர். ஆனால் நல்லெண்ணெயில் இருக்கும் சத்துக்களும், அற்புதங்களும் தெரிந்தால் அதை அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள். ஆயில் புல்லிங் என்று சொல்லப்படும் ஒரு வைத்திய முறைக்கு நல்லெண்ணையை பயன்படுத்துகின்றனர். நல்லெண்ணெய்யை வாயில் வைத்து 20 நிமிடம் கொப்பளித்தால் இதயத்திற்கு நல்லது என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கொலஸ்டிராலை குறைக்க 

நல்லெண்ணெயில் இருக்கும் லெசித்தின் என்கிற மூலப்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், இதயம் பலப்படவும் உதவி செய்கிறது. இதயத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை படிய விடாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நல்லெண்ணெயில் இருக்கும் லினோலிக் அமிலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் செய்கிறது. 

ஒற்றைத் தலைவலிக்கு

எள்ளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் ஜிங்க் சத்து அதிகம் இருப்பதால் தோலில் ஜவ்வு தன்மையை நீட்டிக்கச் செய்கிறது. இதனால் எப்போதும் இளமையான தோற்றப் பொலிவு பெறுவதற்கு நல்லெண்ணையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நலம் தரும். சிலருக்கு ஒற்றைத் தலைவலியால் அதீதமான அவஸ்தை ஏற்படும். அந்த சமயத்தில் நல்லெண்ணெய்யில் கொஞ்சம் பூண்டு மற்றும் மிளகை தட்டி போட்டு காய்ச்சி ஆறிய பின்பு தலைக்கு தேய்த்து குளித்துப் பாருங்கள், நீண்ட நாள் ஒற்றை தலைவலியும் காணாமல் போய்விடும். குளிர்காலங்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு நல்லெண்ணெய் தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். 

அழகு பராமரிப்பிற்கு

முகத்தில் சுருக்கங்கள், பருக்கள் உடனடியாக மறைவதற்கு முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு டீஸ்பூன் பயத்தமாவு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு க்ரீம் போல அடித்து தடவி காய விட்டால் முகம் இறுக ஆரம்பித்து விடும். அதன் பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் சுருக்கங்கள், பருக்கள் விரைவாக மறையும். நல்லெண்ணெய்யை காய்ச்சி வெது வெதுப்பான சூட்டில் தலைக்கு மசாஜ் செய்வதால் நிறையவே நன்மைகள் உண்டு. இதை நம் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர நம் கண்களில் குளிர்ச்சி ஏற்பட்டு கண் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். 

எண்ணெய் குளியல்

உடல் சூடு தணியும், பொடுகு வரவே செய்யாது! தலை முடி நரை, தலை முடி நுனி வெடிப்பு இது போன்ற பிரச்சினைகள் எட்டிக்கூட பார்க்காது. குழந்தைப் பருவம் முதலே இதனைத் தொடர்ந்து கடைபிடித்து வருபவர்களுக்கு பிரச்சினை இல்லை ஆனால் திடீரென செய்யும் பொழுது உடல் உஷ்ணம் வெளியே தள்ளி, சளி பிடிக்க ஆரம்பித்துவிடும். எனவே முதன் முறையாக பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்க வேண்டும். ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகள் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அந்த அளவிற்கு குளிர்ச்சி மிகுந்த இந்த நல்ல எண்ணெய் தோல் பளபளப்புக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும், உடல் உறுப்புகள் நன்றாக செயல்படவும் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.