முகம் பள்ளங்கள் இல்லாமல், பொலிவுடன் இருக்க...

முகம் பள்ளங்கள் இல்லாமல்,  பொலிவுடன் இருக்க...

ஒரு சிலருக்கு முகத்தில் தோன்றும் பருக்கள் காரணமாக சிறு சிறு குழிகள் உருவாகிவிடும். இவை முகத்தின் அழகை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் முகத்தில் கருப்பு திட்டுக்கள், எண்ணெய் பிசுக்குகள் போன்ற பிரச்சினையையும் கொடுத்து விடுகிறது. என்னதான் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள அடிக்கடி முகம் கழுவினாலும் கூட இந்த முகப்பள்ளங்களினால் உருவாகும் பிரச்சினைகள் நமது முகத்தை பொலிவுடன் வைத்திருக்க விடுவதில்லை. எப்பொழுதும் முகம் ஒருவித சோர்வுடன் இருக்கின்றது. எனவே பார்ப்பதற்கு நமது அழகை குறைத்து காட்டுகிறது. 

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க  இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய ஸ்கிரப்புகளை பயன்படுத்தி முகத்தை பொலிவுடன் மாற்ற முடியும். அத்துடன் முகத்தில் வரும் பருக்களை கிள்ளாமல் இருந்தால் இவ்வாறு முக பள்ளங்கள் வராமல் தவிர்க்கலாம்.

முகத்தில் இருக்கும் பள்ளங்கள் மறைய தினமும் ஐஸ் கட்டிகளை 5 நிமிடமாவது முகத்தில் தடவி வந்தால் முகப்பள்ளங்கள் விரைவாக மறையும். அடுத்ததாக தக்காளி சாறை அடிக்கடி முகத்தில் தடவி வரும் பொழுது முகத்தழம்புகள் மறைந்து முகம் அழகாக இருக்கும். தக்காளியிலுள்ள கொலாஜன் முகப்பொலிவிற்கு பெரிதும் துணை புரிகிறது.

ஒரு சிறிய பௌலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு ஸ்பூன் தக்காளி சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை சுத்தமாக கழுவிய பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து, 15 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் முகத்தழும்புகள் மறைந்துவிடும்.

ஒரு வெள்ளரிக்காயை முழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் உள்ள தோலை சீவி விட்டு, அவற்றை பொடியாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த வெள்ளரிக்காய் சாறை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு, அதன் பிறகு முகத்தை கழுவி விடவேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகப்பரு தழும்புகள் மறைந்துவிடும்.

அடுத்ததாக ஒரு பத்து பாதாம் பருப்புகளை இரவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். பின்னர் இவற்றை மறுநாள் காலை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பாதாம் பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு ஊறவைத்து, அதன் பிறகு ஸ்கரப் செய்து முகத்தை கழுவி விட வேண்டும். இதனையும் வாரம் இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிடும்.