திரிபலா சூரணம் உடலுக்குள் செய்யும் மாயாஜாலங்கள்...

 திரிபலா சூரணம் உடலுக்குள் செய்யும் மாயாஜாலங்கள்...


சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது திரிபலா மருந்து. மூன்று முக்கியமான மூலிகைகளை கொண்ட ஒரு கூட்டு மருந்து தான் இந்த திரிபலா. திரிபலாவின் நன்மைகள் என்ன? யார் பயன்படுத்தலாம்? பயன்படுத்தக் கூடாது! என்பதை பார்ப்போம்.

சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பது திரிபலா. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றின் கூட்டு கலவை தான் திரிபலா. பொதுவாக இந்த மூன்று வகைக்குமே நிறைய மருத்துவ பலன்கள் உள்ளன. இவை மூன்றும் ஒன்று சேரும்பொழுது அபரீதமான பலன்களை நமக்கு அள்ளித் தருகின்றன.

* நமது ஜீரண மண்டலத்தில் நல்லதொரு ஆற்றலை கொடுக்கக் கூடியது இந்த திரிபலா கலவை. ஜீரணம், உறிஞ்சுதல், கழிவுகளை வெளியேற்றுதல், ஆகிய மூன்று செயல்களிலும் திரிபலாவில் உள்ள மூன்று மூலிகைகள் செயல் படுகின்றன. இந்த மூன்று வகை செயல்பாடுகள் சரிவர நிகழ்ந்தாலே நமது உடலில் பல்வேறு நோய்களை கட்டுக்குள் கொண்டு வரலாம். ஜீரண மண்டல செயல்பாடுகள் பாதிப்பில் இருந்தாலும் அதை சரி செய்வதும் இந்த திரிபலா கலவை.

* ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் குறிப்பாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த திரிபலாவை தினமும் இரவு படுக்கும் முன்பு 5 கிராம் எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமாகும். மலச்சிக்கலினால் ஏற்படும் வாயு தொந்தரவு, தோல் நோய்கள், வயிற்று வலி, போன்ற அனைத்தையும் சரி செய்யும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கிராம், திரிபலா ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரவு படுக்க முன் சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

* இது ஒரு கொழுப்பு அகற்றியாக செயல்படுகிறது. எல்லாருக்கும் எடை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிகமான கொழுப்பு உணவுகளை உட்கொள்வது, சரியான வேலை செய்யாதது, சரியான முறையில் ஜீரணம் ஆகாதது, போன்ற காரணங்களினால் கொழுப்பு உடலில் படியும். இவர்கள் 2 கிராம் அளவு திரிபலாவை காலை மற்றும் இரவு உணவிற்குப்பின் சாப்பிடுவது கொழுப்பை கரைப்பதற்கும் உடல் எடையை குறைக்கவும் உதவி செய்யும்.

* சுவாசம் தொடர்பான பிரச்சினைகளான ஆஸ்துமா, மூச்சுத் திணறல், சைனஸ், அழற்சி கோழை அதிகமாக சேர்தல், போன்ற பிரச்சினை உள்ளவர்கள் காலை மற்றும் இரவு உணவிற்கு பின் இரண்டு கிராம் திரிபலாவை வெந்நீரில் கலந்து உட்கொண்டு வரலாம்.

* மேலும் திரிபலாவிற்கு தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் முடியும் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஒழுங்கு படுத்துதல்,  லிவர் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்தல் ஆகிய எண்ணற்ற பலன்கள் திரிபலாவிற்கு உண்டு.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடத்தில் 90 நாட்களாவது திரிபலாவை உணவிற்குப்பின் பயன்படுத்தி வரலாம்.

பொடியாக எடுத்துக் கொள்வது சிரமமாக இருந்தால் இதை டீ போல் காய்ச்சி அருந்தலாம்.

திரிபலா அளவுக்கு அதிகமாக எடுத்து ஏதேனும் வயிற்றுப் போக்கு போன்று ஏற்பட்டால் அளவை சற்று குறைத்து தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். தேனுடன் சேரும்பொழுது அதன் விளைவுகள் சமநிலையில் இருக்கும்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2 கிராம் முதல் 5 கிராம் அளவிலும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஒரு கிராம் என்று அளவிலும் திரிபலாவை பயன்படுத்தலாம்.

பெரும்பாலும் திரிபலாவினால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. திரிபலாவை முதலில் ஆரம்பிப்பவர்களுக்கு சிறிது வயிற்று வலி ஏற்படலாம். இரண்டு அல்லது மூன்று முறை சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். லேசாக வயிற்று எரிச்சல் உண்டாகலாம். இந்த விளைவுகள் எல்லாருக்கும் உண்டாகாது. ஏதேனும் சில பேருக்கு மட்டுமே உருவாகும். இந்த மாதிரி சமயங்களில் அருகிலுள்ள சித்த மருத்துவரை அணுகி அவர் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே வருடம் முழுவதும் திரிபலாவை சாப்பிடலாம். மற்ற சாதாரணமாக பயன்படுத்துபவர்கள் ஒரு மூன்று மாதங்கள் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் திரிபலாவை பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் சர்க்கரையின் அளவு பெரும் அளவு குறைய வாய்ப்புகள் உள்ளன

* திரிபலாவை ஏற்கனவே உட்கொண்டு சேராதவர்கள் அதை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மற்றும் அடிக்கடி மலம் கழிக்கிற பிரச்சினை உள்ளவர்களும் திரிபலாவை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே இதய நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் திரிபலாவை எடுத்துக் கொள்ளக் கடாது.