தினமும் இந்த மாதிரி 2 பூண்டு சாப்பிட்டால் மாரடைப்பு வராது...
தினமும் இந்த மாதிரி 2 பூண்டு சாப்பிட்டால் மாரடைப்பு வராது...
பழங்காலம் முதலாக தினசரி சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு உணவிற்கு நல்ல சுவையையும், மணத்தையும் தருவது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது. இப்படிப்பட்ட பூண்டை சமையலில் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர, பச்சையாகவும் சாப்பிடலாம்.
பூண்டினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க முக்கிய காரணமாக இருப்பது, அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான். தினமும் 2 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு கொடிய நோய்களின் அபாயத்தைத் தவிர்க்கலாம். குறிப்பாக ஆண்கள் தங்களின் உணவில் தினமும் பூண்டு சேர்த்து வருவது நல்லது. இதனால் ஆண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் தடுக்கப்பட்டு, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதுவும் ஆண்கள் பூண்டை வறுத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலன்களை அவர்களுக்கு வழங்கும். ஆயுர்வேதத்தில் கூட பூண்டு பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது வறுத்த பூண்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
கொலஸ்டிரால் குறையும் :
மருத்துவ குணம் வாய்ந்த பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதால், தினமும் பூண்டை வறுத்து சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. கொலஸ்ட்ரால் தான் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. எனவே பூண்டை வறுத்து சாப்பிடுவதால், மாரடைப்பின் அபாயமும் குறையும்.
நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும் :
வறுத்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் மற்றொரு நன்மை, அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் பூண்டில் இருக்கும் அல்லிசின், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளையும் கொண்டுள்ளன. எனவே தினமும் பூண்டை வறுத்து சாப்பிட்டு வர, நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களின் அபாயம் குறையும்.
இரத்தம் உறைவது தடுக்கப்படும் :
வறுத்த பூண்டானது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது. ஏனெனில் பூண்டில் க்யூயர்சிடின் மற்றும் கெம்ப்பெரால் போன்ற கலவைகள் உள்ளன. எனவே இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள நினைத்தால், வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுங்கள்.
இரத்த அழுத்தம் கட்டுப்படும் :
தற்போது நிறைய பேர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டுள்ளனர். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அதுவே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். வறுத்த பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.
உடல் சோர்வை போக்கும் :
நீங்கள் எந்நேரமும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? உடலில் ஆற்றல் குறைவாக இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் வறுத்த பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வாருங்கள். இது நாள் முழுவதும் உடலில் போதுமான ஆற்றலை நீடித்திருக்க வைக்கும்.
பாலியல் ஆரோக்கியம் மேம்படும் :
பாலியல் பிரச்சினைகளை சந்திக்கும் ஆண்கள் பூண்டு பற்களை வறுத்து உட்கொண்டு வந்தால், ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு மேம்பட்டு, பாலியல் ஆரோக்கியமும் மேம்படும். ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சினை, முன்கூட்டிய விந்து தள்ளல் மற்றும் பல பாலியல் தொடர்பான பிரச்சினைகள், பூண்டு பற்களை வறுத்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டு பற்களை எப்படி வறுத்து சாப்பிடுவது?
முதலில் பூண்டின் அதிகப்படியான தோலை மட்டும் நீக்கிட வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை அதன் தோல்டன் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின் அதை எடுத்து உறித்து ஒரு தட்டில் வைத்து தட்டி, ஒரு கருப்பட்டியுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
இப்படி தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், இரட்டிப்பு நன்மைகளைப் பெறலாம்.