உடல் சூட்டை மட்டுமல்ல, மற்ற பிரச்சினைகளையும் சரி செய்யும் பாதாம் பிசின்...
உடல் சூட்டை மட்டுமல்ல, மற்ற பிரச்சினைகளையும் சரி செய்யும் பாதாம் பிசின்...
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு வாதுமை மெழுகு என்ற பெயரும் உண்டு. இந்த பாதாம் பிசினுக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இது சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இப்போது ஆரோக்கியம் குறித்த இந்த பதிவில் பாதாம் பிசினின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த பாதாம் பிசினில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, போன்ற எண்ணற்ற தாது சத்துக்கள் நிறைந்து உள்ளது.
இந்த பாதாம் பிசின் பெருமளவு உடல் சூட்டை தணிக்க பயன்படுத்தபடுகிறது. கோடை காலங்களில் உடல் வெப்பமாகி அதனால் பல்வேறு நம் உடலில் பிரச்சினைகள் உருவாகும். அது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க இந்த பாதாம் பிசினை கொஞ்சமாக எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் இதை சாப்பிட்டு வரும் போது உடல் உஷ்ணத்தால் ஏற்படும் எந்த வியாதியும் நெருங்காது. ஒரு சிலருக்கு உடல் எப்பொழுதுமே உஷ்ணமாக தான் இருக்கும். அப்படியானவர்கள் இந்த பாதாம் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதை சர்பத், ஜூஸ் போன்றவற்றின் கலந்தும் பருகலாம்.
இந்த பாதாம் பிசின் நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு போன்றவற்றை கூட சரி செய்யும். ஒரு சிலருக்கு எதை சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும், இன்னும் சிலருக்கு சரியான உணவு பழக்கமின்மை காரணமாகவோ அல்லது இயற்கையாகவே அவர்களுக்கு செரிமான கோளாறு பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பாதாம் பிசினை எடுத்துக் கொள்ளும் போது அது போன்ற பிரச்சினைகளும் சரியாகும். அதுமட்டுமின்றி இதில் உள்ள தாது பொருட்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவி செய்கிறது. இதை சாப்பிடும் போது தசைகளும் வலுவாகி உடல் வலி சோர்வு போன்றவற்றை கூட நீக்கி விடும்.
பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினையான வெள்ளைப்படுதல் போன்றவற்றை கூட இந்த பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஆண்களுக்கு விந்தணுக்கள் தொடர்பான பிரச்சினைகளும் இந்த பாதாம் பிசின் சாப்பிடும் போது சரியாகி விடும். இவை இரண்டுமே அதிகப்படியான உடல் சூட்டினால் வருபவை தான். பாதாம் பிசினை தொடர்ந்து சாப்பிடும் போது உடல் சூடு தணிந்து இந்த பிரச்சினைகள் சரியாகும்.
உடல் பருமனாக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பாதாம் பிசினை பாலில் கலந்து பருகி வர நல்ல முன்னேற்றம் தெரியும். ஒரு சிலர் உடலில் ஏற்படும் நோய்களின் காரணமாக உடல் இளைத்து காணப்பட்டால் அவர்களும் கூட இந்த பாதாம் பிசினை சாப்பிடும் பொழுது நல்ல முன்னேற்றம் தெரியும்.
இந்த பாதாம் பிசினை தொடர்ந்து சாப்பிடுவதால் சீக்கிரமே முதுமை அடையக் கூடிய பிரச்சினையில் இருந்தும் கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். முதுமையை விரைவில் வர செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் தன்மை இந்த பாதாம் பிசினுக்கு உண்டு.
இந்த பாதாம் பிசின் தோல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை கூட சரி செய்யும். பாதாம் பிசின் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி உடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. இந்த பாதாம் பிசின் பசைத் தன்மையுடன் இருப்பதால் ஐஸ்கிரீம் குளிர்பானம், ஜெல்லி போன்றவற்றின் தயாரிப்பில் கூட இதன் சேர்க்கை உண்டு.
பொதுவாகவே எளிதில் கிடைத்து விடும் பொருட்களின் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விடுகிறது இந்த பாதாம் பிசினும் அது போல தான் இது எல்லா நாட்டு மருந்து கடைகளும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் விலை குறைவாகவே கிடைக்கும் ஆனால் இதன் பயன்பாடு பெறும் அளவு யாருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் அதன் பயன்பாடுகளை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டால் கூட இன்னும் பாதாம் பிசினை நாமும் நம்முடைய உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொண்டு அதற்கான பலனை அனுபவிக்கலாம்.
இந்த பாதாம் பிசினில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் கூட நாம் இதை எடுத்துக் கொள்ளும் பொழுது சரியான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. எதுவும் அளவுக்கு மீறி எடுத்தால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.