இரவில் கால் எரிச்சலா? அப்ப இந்த முறைகளை முயற்சி பண்ணிப் பாருங்க...!

இரவில் கால் எரிச்சலா? அப்ப இந்த முறைகளை முயற்சி பண்ணிப் பாருங்க...!

நிறைய பேருக்கு இரவு நேரத்தில் நெருப்பில் கால்களை வைத்தது போன்று எரியும். நிச்சயம் இந்த பிரச்சினையை உங்கள் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி மற்றும் உங்கள் பெற்றோர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி கால்கள் எரிகிறது என்றால், உடலில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அது என்னவென்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை எடுக்க உடனே ஆரம்பிக்க வேண்டும்.

சரி, ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் நெருப்பில் கால்களை வைத்தது போன்று எரியும் என்று தெரியுமா? எப்போது ஒருவரது உடலில் பி வைட்டமின்கள் குறைவாக உள்ளதோ, அப்போது பாதங்களில் எரிச்சல் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரந்தாலும் பாதங்களில் எரிச்சலை சந்திக்க நேரிடும்.

இது தவிர பரம்பரையில் இம்மாதிரியான பிரச்சினையைக் கொண்டிருந்தாலும், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு பாதங்களில் எரிச்சல் ஏற்படக்கூடும். பாதங்களில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இப்போது அந்த வழிகள் என்னவென்பதைக் காண்போம்.

எப்சம் உப்பு :

எப்சம் உப்பில் மக்னீசியம் சல்பேட் உள்ளது. பாத எரிச்சலின் போது, இந்த எப்சம் உப்பை நீரில் போட்டு, அந்நீரில் பாதங்களை தினமும் சிறிது நேரம் ஊற வைக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் எப்சம் உப்பை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தினால், அது பாதங்களில் உள்ள நரம்புகளை அதிகம் சேதப்படுத்தும். எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த வழியை முயற்சிக்கும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஐஸ் தண்ணீர் :

இரவு நேரத்தில் கால்கள் நெருப்பில் வைத்து போன்று எரியும் போது, அதிலிருந்து உடனடி நிவாரணம் பெற, ஐஸ் தண்ணீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் கால் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி :

இஞ்சி ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. இந்த இஞ்சி சாறு நீர் மற்றும் எண்ணெயில் கரையக்கூடியது. இதை சருமத்தில் தடவினால், விரைவில் உறிஞ்சப்படும். முக்கியமாக இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் இதை வலியுள்ள இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் இது கால் எரிச்சலில் இருந்தும் விடுவிக்கும்.

கருஞ்சீரகம் :

சர்க்கரை நோயாளிகளுக்கு பாதங்களில் எரிச்சல் ஏற்பட காரணம், அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவு தான். ஆனால் கருஞ்சீரகம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுவதோடு, இன்சுலினை அதிகரிக்கிறது. முக்கியமாக இது பாதங்களில் உள்ள நரம்புகளுக்கு நல்லது. எனவே தினசரி உணவில் சிறிது கருஞ்சீரகத்தை சேர்ப்பதன் மூலம், பாத எரிச்சலைத் தடுக்கலாம்.

துளசி :

புனிதமான துளசியானது பழங்காலம் முதலாக பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வு ஒன்றில், துளசியில் உள்ள மருத்துவ பண்புகள் கால்களில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாதங்களில் ஏற்படும் எரிச்சலுக்கு மற்றொரு காரணமான புற நரம்பு சேதம் காரணமாக ஏற்படும் வலியைக் குறைப்பதில் சிறந்தது. எனவே துளசியை தினமும் சாப்பிடுவதன் மூலம், பாத எரிச்சலைக் குறைக்கலாம்.

மஞ்சள் :

மஞ்சளில் அழற்சி/வீக்கத்தை எதிர்த்துப் போராடும் பண்புகள், ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. முக்கியமாக மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் உள்ளது. ஆய்வுகளில் இந்த குர்குமின் நரம்புகள் மற்றும் நியூரான்களில் ஏற்படும் நோய்களை எதிர்த்துப் போராடுவதோடு, நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே பாதங்களில் எரிச்சலை சந்திப்பவர்கள் மஞ்சளை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவ நல்ல பலன் கிடைக்கும் மற்றும் மஞ்சளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :

ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அதில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைத்தால், பாத எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் இது மக்களால் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.