சாப்பிடுவதற்கு முன் இந்த பானத்தை குடித்தால்.. கெட்ட கொலஸ்டிரால் மெழுகு போல் கரையும்...!!

சாப்பிடுவதற்கு முன் இந்த பானத்தை குடித்தால்.. கெட்ட கொலஸ்டிரால் மெழுகு போல் கரையும்...!!

தற்போது மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற தூக்க முறைகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றை வரவழைக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மாரடைப்பால் ஏராளமானோர் தினமும் இறந்து வருகிறார்கள். மாரடைப்பு வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையான காரணமாக திகழ்வது உடலில் அதிகப்படியான கெட்ட கொலஸ்டிரால் இருப்பது தான்.

இயற்கையாகவே நமது உடல் கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும். இந்நிலையில் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொலஸ்டிராலும் உடலில் சேரும் போது, ஒரு கட்டத்தில் அந்த கொலஸ்டிரால் அதிகரித்து, இரத்தக்குழாய்களில் தேங்க ஆரம்பித்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் உடலில் கொலஸ்டிரால் தேங்கக்கூடாது என்று நினைத்தால், அந்த கொலஸ்டிராலைக் கரைக்கும் உணவுகள் மற்றும் பானங்களை அவ்வப்போது குடித்து வர வேண்டும்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் கரைக்கும் பல உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உள்ளன. அதில் இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கொண்டு தயாரிக்கும் பானம் மிகவும் சிறப்பான பலனைத் தரும். ஏனெனில் இந்த மூன்று உணவுப் பொருட்களுமே கொலஸ்டிராலை திறம்பட கரைக்கும் சக்தி கொண்டவை. இப்போது அந்த பானத்தை எப்படி தயாரிப்பது, எப்போது குடிக்க வேண்டும் மற்றும் அந்த பானம் எப்படி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது என்பதைக் காண்போம்.

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* பூண்டு - 4 பற்கள்

* இஞ்சி - 3 இன்ச் துண்டு

* எலுமிச்சை - 3 (பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

* தண்ணீர் - 5 கப்

* தேன் - சுவைக்கேற்ப

பூண்டின் நன்மைகள் :

பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது இரத்தம் உறைவதைத் தடுக்கிறது மற்றும் இது உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் கொலஸ்டிராலைக் குறைக்க பூண்டு சிறந்ததாக கூறுகின்றன.

இஞ்சியின் நன்மைகள் :

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து, நல்ல கொலஸ்டிராலை மேம்படுத்த உதவும் அற்புதமான உணவுப் பொருளாகும். ஆய்வுகளும், இஞ்சி உடலில் குறிப்பிட்ட நொதியை செயல்படுத்தி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகம் பயன்படுத்தச் செய்து, உடலில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதாக கூறுகின்றன.

எலுமிச்சையின் நன்மைகள் :

எலுமிச்சையில் நார்ச்சத்து மட்டுமின்றி, ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. தினமும் ஒருவர் எலுமிச்சையை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை சீராக பராமரிக்க உதவும், அதற்கு எலுமிச்சையை எந்த வடிவில் வேண்டுமானாலும் உணவில் சேர்க்கலாம்.

கெட்ட கொலஸ்டிராலைக் கரைக்கும் பானத்தை தயாரிப்பது எப்படி?

* முதலில் ஒரு பாத்திரத்தில் 5 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

* பின் அதில் 3 இன்ச் இஞ்சியை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு தட்டி பாத்திரத்தில் உள்ள நீரில் போட வேண்டும்.

* பின்பு அதில் 4 பூண்டு பல்லை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பின் இறக்க வேண்டும்.

* பிறகு அதில் 3 எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

* விருப்பமுள்ளவர்கள், அத்துடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொள்ளலாம்.

எப்போது குடிக்க வேண்டும்?

இந்த பானத்தை மதியம் அல்லது இரவு உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆனால் கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்கள், இந்த பானத்தை மட்டும் குடித்து வந்தால் போதாது. அத்துடன் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் சமநிலையான வாழ்க்கை முறையையும் மேற்கொண்டு வந்தால் மட்டுமே, இந்த பானத்தின் பலனை முழுமையாக பெற முடியும்.