Thyroid பிரச்சினையையும், தூக்கமின்மையையும் ஒரே நேரத்தில் சரி செய்ய...

Thyroid பிரச்சினையையும்,  தூக்கமின்மையையும் ஒரே நேரத்தில் சரி செய்ய...

தைராய்டு என்பது ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படக்கூடிய ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு என்பது நமக்குத் தெரியும். இந்த தைராய்டு பிரச்சினைகளால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அடிப்படையில் தூக்க சுழற்சி, உணவுமுறை ஆகியவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒருசேர தீர்க்கும் சில வழிமுறைகளை பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

தைராய்டு பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டு வர சில எளிமையான, நம்முடைய வீட்டிலுள்ள பொருள்களை எடுத்துக் கொண்டாலே போதும். குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பாக இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினையும் தைராய்டு பிரச்சினையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

தூக்கமின்மையும் தைராய்டும் :

இரவில் சரியாகத் தூங்க முடியாமல் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் தைராய்டு பிரச்சினையும் ஒன்று.

நம்முடைய தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யும்போது உணடாவது தான் தைராய்டு. இது ஹைப்போ தைராய்டு, ஹைபர் தைராய்டு என இரண்டு வகைகள் உண்டு.

இந்த தைராய்டு பிரச்சினை தூக்கமின்மைக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. 

வறுத்த பூசணி விதைகள் :

​பூசணி விதைகளில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்திருக்கிறது. இந்த ஜிங்க் சத்து தைராய்டு ஹார்மோன் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உடலில் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது.

மேலும் பூசணி விதையில் டிரிப்டோபான் எனப்படும் இயற்கையான அமினோ அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. இவை தூக்கத்தைத் தூண்ட உதவி செய்யும்.

அவற்றோடு தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தி நீண்ட நேரம் தூங்குவதற்கான தன்மையை அதிகரிக்கிறது.

அதனால் இரவில் தூங்குவதற்கு முன்பு வறுத்த பூசணி விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

ஊறவைத்த முந்திரி பருப்பு :

முந்திரி பருப்பில் செலினியம் அதிக அளவில் இருக்கின்றது. இது தைராய்டு சரப்பிகளைத் தூண்டி, தைராய்டு சுரப்பை மேம்படுத்துவதோடு உடலின் இயக்கத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

முந்திரி உடலின் தைராய்டு அளவுகளைச் சிறந்த முறையில் பராமரிப்பதோடு, தைராய்டு திசு ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து தடுக்கிறது.

4 - 5 முந்திரி பருப்புகளை ஊற வைத்து இரவு தூங்குவதற்கு முன்பு எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களுடைய தூக்கத்தையும் மேம்படுத்த முடியும். தைராய்டு சுரப்பையும் முறைப்படுத்தும்.

தேங்காய் துண்டுகள் :

​தேங்காய் சமைத்து சாப்பிடும்போது அதில் டிரான்ஸ் ஃபேட் கொஞ்சம் அதிகமாகிறது. ஆனால் பச்சை தேங்காயாக சாப்பிடும்போது அவற்றில் டிரான்ஸ் கொழுப்புகள் இருப்பதில்லை. உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மட்டுமே அதில் இருக்கின்றன.

சில தேங்காய் துண்டுகளை தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு தைராய்டு பிரச்சினையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

குறிப்பாக இரவு தூங்கச் செல்லும்போது தேங்காயை சிறிதளவு பச்சையாக சாப்பிட வேண்டும்.

ஊறவைத்த சியா விதைகள் :

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. அதோடு சியா விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம். ​

இந்த சியா விதைகளை ஊறவைத்து சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் அழற்சி ஆகியவற்றையும் தடுக்கச் செய்யும்.

அதனால் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் கொண்ட சியா விதைகளை நீரில் ஊற வைத்து அதை இரவு தூங்கச் செல்லும்முன் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வாருங்கள். தைராய்டு சுரப்பு சரியான அளவில் கட்டுக்குள் இருப்பதோடு நல்ல தூக்கமும் உண்டாகும்.