காலையில் வெறும் வயிற்றில் ஓம ஊறல் நீர் குடித்தால் உடம்பிற்கு உண்டாகும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் ஓம ஊறல் நீர் குடித்தால் உடம்பிற்கு உண்டாகும் நன்மைகள்

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உள்ளுறுப்புக்கள் எவ்வித தடையுமின்றி ஆரோக்கியமாக செயல்பட வேண்டும். ஆனால் தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினால் நடது உடலில் நச்சுக்கள், கொழுப்புக்கள் அதிகம் தேங்கி பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கி, உடல் ஆரோக்கியத்தை நாசப்படுத்துகின்றன. ஆனால் நமது சமையலறையில் உள்ள பல பொருட்கள் நமது உடலில் பல மாயங்களை புரியக்கூடியவை. ஒவ்வொன்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியவை. அதில் ஒன்று தான் ஓமம்.

நல்ல வாசனை கொண்ட சிறிய விதைகளான ஓமம் ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பெரும்பாலானோருக்கு ஓமம் செரிமான பிரச்சினைகளைப் போக்கும் என்பது தான் தெரியும். ஆனால் அந்த ஓமமானது செரிமான பிரச்சினைகளைத் தவிர, எடை இழப்பு, சுவாச பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சினைகளைப் போக்கவும் உதவும் என்பது தெரியுமா? நம் முன்னோர்கள் அக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்ததற்கு இந்த ஓமமும் ஓர் முக்கிய காரணம். எனவே வரக்கூடிய 2023 புத்தாண்டில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்பினால், தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக ஒரு டம்ளர் ஒம நீரை குடித்து வாருங்கள். இப்போது ஓம நீரை தயாரிப்பது எப்படி மற்றும் ஓம நீரை தினமும் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

எடை இழப்பு :

உங்களுக்கு தொப்பை பெரிதாக உள்ளதா? அதை எளிய மற்றும் ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டுமா? அப்படியானால் ஓம நீரைக் குடியுங்கள். அதுவும் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் குடிக்கும் போது, ஜங்க் உணவுகளுக்கு குட்-பை சொல்லிவிட்டு, தினமும் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும் :

ஓம நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளது. இது செரிமான செயல்முறையை வேகப்படுத்துவதோடு, அஜீரண கோளாறைத் தடுக்கவும் உதவுகிறது. உடலின் மெட்டபாலிச செயல்முறை அதிகரிக்கும் போது, அது மலச்சிக்கல் மிற்றும் உடல் பருமன் பிரச்சினையையும் தடுக்கிறது.

குடல் ஆரோக்கியம் மேம்படும் :

செரிமான பிரச்சினைகளை தினமும் சந்திப்பவர்கள், ஓம நீரைக் குடிப்பது நல்லது. மேலும் இது செரிமான பிரச்சினையால் ஏற்படும் அடிவயிற்று வலி அல்லது பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. ஓம நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது குடலில் உள்ள நொதிகளை செயல்படத் தூண்டிவிட்டு, செரிமான பிரச்சினைகள் மற்றும் அசிடிட்டி பிரச்சினைளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது :

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஓம நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது சுவாசப்பாதையில் உள்ள தடைகளை நீக்கி, நன்றாக சுவாசிக்க உதவும். மேலும் ஓம நீர் நுரையீரல் மற்றும் குரல்வளையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சுவாச பிரச்சினைகள் இருந்தால், ஓம நீரை தினமும் குடித்து நன்மை பெறுங்கள்.

சரும அரிப்பு மற்றும் கொப்புளங்கள் :

உங்களுக்கு சருமத்தில் கொப்புளங்கள் மற்றும் அரிப்புகள் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து தடவுங்கள். இதனால் அவ்விடத்தில் ஏற்படும் அரிப்புக்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஓம ஊறல் நீரை தயாரிப்பது எப்படி?

* 25 கிராம் ஓம விதைகளை முதல் நாள் இரவே ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் அந்த விதைகளை ஸ்பூன் கொண்டு லேசாக நசுக்கி விட்டு, பின் வடிகட்ட வேண்டும். பின் வேண்டுமானால் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்.

* பின்பு அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.