சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த கண்டங்கத்திரி மூலிகை

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த கண்டங்கத்திரி மூலிகை 

கிராமப்புறங்களில் காடுகளில் மற்றும் மணற்பாங்கான நிலங்களில் காணக் கிடைக்கும் கண்டங்கத்திரி மருத்துவ ரீதியாக பயன்களை தரவல்லது.

கண்டங்கத்திரி செடி வகையை சேர்ந்தது. இந்த தாவரம் முழுவதும் கூர்மையான முட்களை கொண்டது.

முட்கள் மஞ்சளாக, பளபளப்பாக ஒன்று புள்ளி ஐந்து சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கும். பூக்கள் நீல நிறமானவை. கண்டங்கத்திரி மஞ்சள் நிறத்தில் பழங்களையும், சிறிய கத்திரிக்காய் அளவில் காய்களையும் கொண்டது.

கண்டங்கத்திரி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவை. இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் சித்தா ஆயுர்வேத மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள் :

மழைக்கால நோய்கள் :

அடை மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் மிகவும் முக்கியமானது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான்.

இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டை கட்டு, சுரம் என்று பற்பல கப நோய்கள் பாதிக்கின்றன. இவை அனைத்திற்கும் மூலிகை மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன.

பக்க விளைவுகள் இல்லாமலும், அதே நேரம் உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கண்டங்கத்திரி.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகை செடிகள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை.

அந்த வகையில் கண்டங்கத்திரி ஒத்த குணமுடைய மூலிகைகளான இசங்கு, தூதுவளை ஆகிய அனைத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.

இந்த பொதுப் பண்பினை கொண்ட கண்டங்கத்திரி, அவலகம், சுதர்சன சூரணம், கனகாசவம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆஸ்துமா :

ஆஸ்துமா குணமாக கண்டங்கத்திரி இசங்கு, ஆடாதோடை, தூதுவளை, துளசி, வால் மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் ஒவ்வொன்றையும் இருபத்து ஐந்து கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியில் பத்து கிராம் எடுத்து இரண்டு கப் நீரில் கொதிக்க வைத்து, அரை கப் ஆக வற்ற காய்ச்சி வடிகட்டி ஒருவேளை அருந்த வேண்டும்.

இவ்வாறு காலை, மாலை என இருவேளை ஒரு வார காலம் அருந்தலாம். இது ஆஸ்துமாவினால் மூச்சு விடத் திணறுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை உடனடியாக அளிக்கும். நாளடைவில் ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

தொண்டை சளி :

கண்டங்கத்திரியின் முழு தாவரத்தையும் சேகரித்து வைத்து கொள்ளவும். அதனை நன்றாக உலர வைத்து தூள் செய்து வைத்து கொள்ளவும்.

அரை தேக்கரண்டி தூளுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து, உள்ளுக்கு சாப்பிட தொண்டைச் சளி குணமாகும்.

வேர்வை நாற்றம் :

வேர்வை நாற்றம் போக கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும்.

இதனை உடலில் வேர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசி வர நாற்றம் நீங்கும்.

வாத நோய்கள் :

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலை வலி, கீழ்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.

பாத வெடிப்பு :

காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்த சாற்றுடன் ஆல விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர மறையும்.

வெண்குட்டம் :

கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டு வர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும். பசியை தூண்டும்.

கண்டங்கத்திரி பழங்களை பறித்து, சட்டியில் இட்டு சிறிதளவு நீர் விட்டு வேகவைத்து, வடிகட்டிக்கொண்டு நான்கு பங்கு எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகள் :

சிறு குழந்தைகளுக்கு ஏற்பட கூடிய நீண்ட நாட்களாக இருக்க கூடிய இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தினை நன்றாக உலர்த்தி போடி செய்து வைத்து கொள்ளவும். அதனை தேனுடன் கலந்து இரண்டு வேலை கொடுக்கலாம்.