Natural Rose Lip Balm

உங்களுடைய உதடு 24 மணி நேரமும் ரோஜா இதழ் போல இருக்கும்

இயற்கையான அழகைத் தரும் இந்த லிப்பாமை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

சாதாரணமாக பெண்கள் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்லும் போது லிப்ஸ்டிக் போடுவது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாமல் வெளியில் எங்கும் செல்வதே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு இந்த லிப்ஸ்டிக் பெருகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல இப்போதெல்லாம் பெண்கள் வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக லிப்ஸ்டிக் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் ஒரு படி மேலே போய் லிப் பாம் உபயோகப்படுத்த தொடங்கி விட்டார்கள். லிப் பாம் என்பது வெறும் அழகுக்கான சாதனமாக மட்டும் கருதக்கூடாது.

இது உதட்டின் வறட்சித் தன்மையை நீக்கி உதட்டை மென்மையாக வைத்திருக்க போடுவது. குளிர்காலம் தொடங்கி விட்டாலே உதடுகள் வறண்டு ஈரத்தன்மை இழந்து காணப்படும். இதுபோன்ற சமயங்களில் லிப் பாம் கட்டாயமாக உபயோகப்படுத்தலாம். உதடு வறட்சி இல்லாமல் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும் என்பதற்காக கெமிக்கல் கலந்த லிப் பாம்களை உபயோகப்படுத்துவதால் சிலருக்கு அலர்ஜி போன்றவைகளும் கூட ஏற்படும்.

 எனவே இது போன்ற சில பொருட்களையாவது நாம் வீட்டில் இருந்தபடியே தயாரித்து உபயோகப்படுத்தினால் காசும் விரயமாகாது, அதே நேரத்தில் எந்த பக்க விளைவும் இல்லாமல் இருக்கலாம். சரி வாங்க இந்த லிப் பாம் இப்போ வீட்டில் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் – 1 கப், வேசலின் – 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்.

முதலில் ஒரு கப்பில் ரோஜாவில் உள்ள காம்புகளை நீக்கி இதழ்களை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். நாம் எல்லோர் வீட்டிலும் சிறிய உரல், இஞ்சி, பூண்டு, நசுக்குவதற்காக பயன்படுத்துவோம் அல்லவா. அதை சுத்தமாக காரம் இல்லாமல் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த ரோஜா இதழ்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக இடித்து கொள்ளுங்கள். அம்மியில் கூட நசுக்கலாம், ஆனால் மிக்ஸியில் போடக்கூடாது.

அதன் பின்பு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து விடுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், வேஸ்லின் – 1 ஸ்பூன், இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற்றி, லேசாக சூடேற்றிய பிறகு, அதில் அரைத்து வைத்திருக்கும் இந்த ரோஜா இதழ்களை போட வேண்டும். ஐந்து நிமிடம் மிதமான தீயில் இதை சூடேற்றி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இது நன்றாக ஆறியவுடன் ஒரு வடிகட்டியில் ஊற்றி அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து ஒரு சின்ன சின்ன டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். சுலபமான முறையில் கெமிக்கல் இல்லாத லிப் பாம் தயாராகி விட்டது. இனி உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் எடுத்து இதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இதை ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை கூட போடலாம், இரவு உறங்க செல்லும் முன் இதை போட்டால் உதட்டின் வறட்சி தன்மை விரைவில் சரியாகி விடும்.