பலவீனமானவர்களை பலசாலியாக்கும் பஞ்சமுட்டி கஞ்சி.

பலவீனமானவர்களை பலசாலியாக்கும் பஞ்சமுட்டி கஞ்சி.. எப்படி தயாரிப்பது.. பலன்கள் என்ன... யாருக்கு நல்லது?

பாரம்பரியமான உணவுகள் நோய்களை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மிகச்சிறப்பாக உதவும். அப்படியான ஒன்று பஞ்சமுட்டி கஞ்சி.

நோயுற்ற காலங்களில் என்றில்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு முறையில் மென்மையான திரவ உணவுகளை தான் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். இவை உடலுக்கு வலுவூட்டவும் உதவும். அதில் ஒன்று பஞ்சமுட்டி கஞ்சி. அதன் தயாரிப்பு மற்றும் பலன்கள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவ நிபுணர் மரு.வி.விக்ரம்குமார்.,MD(S).

பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையை குறிக்கும். ஐந்து வித மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் இது பஞ்சமுட்டி கஞ்சி என்றழைக்கப்படுகிறது. நவீன உணவுகள் வந்தாலும் கூட இன்றும் விட்டு பெரியோர்கள் இதை செய்கிறார்கள்.

பஞ்சமுட்டி கஞ்சி மிகுந்த ஊட்டத்தை கொடுக்கும். உடல் மெலிவு இருப்பவர்களுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து குறைபாடுகளால் அதாவது போதுமான அளவு ஊட்டம் இல்லாதவர்கள் இதை எடுத்துகொள்ளலாம். டிபி, புற்றுநோய் போன்ற நோய்களால் உடல் மெலிவு கொண்டிருப்பவர்களுக்கு போஷாக்கு அளிக்க இந்த பஞ்சமுட்டி உதவும்.

பஞ்சமுட்டி கஞ்சி தயாரிக்க :

உ.பருப்பு  - 10 கிராம்
து.பருப்பு  -10 கிராம்
பச்சரிசி     -10 கிராம்
சிறுபயிறு - 10 கிராம்
கடலை       - 10 கிராம்

இவை அனைத்தையும் எடுத்து மெல்லிய சுத்தமான வெள்ளைத்துணியில் முடிந்து கொள்ளவும். மண் பானையில் நீர் விட்டு, அதில் போடவும். ஒரு லிட்டர் தண்ணீர் விடவும். இதில் நீர் 250 மில்லி லிட்டர் அளவு சுண்டும் வரை வைத்திருக்கவும். அடுப்பு மிதமானதாக இருக்க வேண்டும். பிறகு இறக்கி சிறிது நேரம் கழித்து அந்த முடித்து வைத்த வெள்ளைத்துணியை வெளியேற்றி நீரை எடுக்கவும்.

இந்த நீரில் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். அல்லது மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். பருப்பு மற்றும் பயறு வகைகளில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் உடலுக்கு கிடைக்கும்.

இந்த கஞ்சியில் பச்சரிக்கு மாற்றாக சிறு தானியங்கள் சாமை, வரகு, தினை, குதிரைவாலி அரிசியையும் பயன்படுத்தலாம். இவை இன்னும் ஊட்டமளிக்கும். இந்த தானியங்களை கொண்டு கஞ்சி தயாரித்து அப்படியே பருகலாம். இது ஊட்டமளிக்க கூடியது. இதை நீரிழிவு நோயாளிகளும் எடுக்கலாம்.

இது உடலுக்கு ஊட்டமளிக்க உதவுவதில் முதன்மையானது. இதில் இருக்கும் பருப்பு வகைகள் பயறு வகைகள் எல்லாமே புரதம் நிறைந்தவை. புரதங்கள் தான் உடலை கட்டமைக்க கூடிய மிக முக்கியமானவை. அந்த வகையில் இந்த பஞ்சமுட்டி கஞ்சி புரதச்சத்து நிறைந்தவை. மேலும் இந்த பருப்பு மற்றும் பயறு வகைகளை முளைக்கட்டி பயன்படுத்தினால் புரதச்சத்து கூடுதலாக கிடைக்கும் என்பதை ஆய்வு நிரூபித்துள்ளது.

இந்த கஞ்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் நன்மை தரக்கூடியது. குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதே போல் வயதானவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த கஞ்சியை சேர்க்கும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த கஞ்சியை உணவாகவோ அல்லது நண்பகல் வேளையில் சூப் போன்று மிளகு சேர்த்தோ குடித்து வரலாம். சுவையும் மணமும் நன்றாக இருக்கும். இது பலவீனமானவர்களை பலசாலிகளாக ஆக்கும்.

இந்த பஞ்சமுட்டி கஞ்சி போன்று சிறு தானிய கஞ்சி, கொள்ளு கஞ்சி, அரிசிக்கஞ்சி, ராகி கஞ்சி என பாரம்பரிய உணவுகள் எடுத்துகொண்டாலே ஆரோக்கியம் காக்கலாம்.