எளிய முறையில் ஆர்கானிக் ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

எளிய முறையில் ஆர்கானிக் ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

நாம் அன்றாட பயன்படுத்தும் முக்கிய பொருட்களுள் ஒன்று ஷாம்பூ. இதில் கெமிக்கல் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இந்த பதிவில் மிக எளியமுறையில் ஆர்கானிக் ஷாம்பூவை எப்படித் தயாரிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

பூந்திக் கொட்டை – இது தலையில் உள்ள அழுக்கையும் எண்ணெய் பிசுக்கையும் மென்மையாக நீக்குகிறது.

சிகைக்காய் – இது தலையில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சிறந்த மருந்து பொருளும் கூட. பூஞ்சைகளை நீக்குகிறது மற்றும் சருமத்தில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. இது சிகைக்கு ஏற்ற காய் என்பதால்தானோ என்னவோ இதன் பெயரே சிகைக்காய் ஆயிற்று.

வெந்தயம் – இதில் உள்ள எண்ணெய் பசை மற்றும் முடியைக் கருமையாக்கும் தன்மை கூந்தலுக்கு தேவையான பொலிவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

நெல்லி முள்ளி – இது தலைமுடி உதிராமல் நன்கு ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. மேலும் முடியின் கருமை நீங்காமல் காக்கிறது.

செம்பருத்தி பூக்கள் – இவை தலையில் உள்ள பொடுகு மற்றும் பேன்களை நீக்கும். தலைமுடிக்கு வழவழப்பு தன்மை தருவதில் சிறந்தது. மேலும் குளிர்ச்சியானது.

தேவையான அளவு:

பூந்திக் கொட்டை – 10, சிகைக்காய் – 1 கப், நெல்லிமுள்ளி – 1 கப், வெந்தயம் – 1 கப், செம்பருத்தி பூக்கள் – 3

செய்முறை:

முதலில் பூந்திக் கொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய பூந்திக் காய்களை போடுங்கள். அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள். கூடவே நெல்லி முள்ளியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சேருங்கள். அதனுடன் சிகைக்காய்கள் 6 எடுத்து சேர்த்திடுங்கள். இவைகளை ஒரு கப் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். அதன்பின்னர் மறுநாள் காலையில் தண்ணீர் பிரவுன் நிறமாக மாறியிருக்கும்.

ஒரு பாத்திரத்தில் இவைகளை மாற்றுங்கள். அதனை அடுப்பில் வையுங்கள். இவைகளோடு மூன்று செம்பருத்தி பூக்களை இதழ்களாக அதனுடன் சேருங்கள். அடுப்பை பற்ற வைத்து இந்தக் கலவையில் உள்ள நீர் கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சுங்கள். ஆறியபின் காய்ச்சிய நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். மேலும் இதனை நீங்கள் பிரிட்ஜில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.