மூட்டு வலி இல்லாத எலும்பு ஆரோக்கியத்துக்கு அஸ்வகந்தாவும் சித்தரத்தையும்!

மூட்டு வலி இல்லாத எலும்பு ஆரோக்கியத்துக்கு அஸ்வகந்தாவும் சித்தரத்தையும்! 

வயதான காலத்தில் முதுமை பருவத்தில் எலும்புகள் தேய்மானம், அடர்த்தி குறைவு, எலும்பு பலவீனம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். எலும்புகள் எளிதில் உடைந்து போகலாம். ஆஸ்டியோபொராசிஸ், சுருக்க முறிவுகள், தசை பலவீனம், கீல்வாதம் நடை மாற்றங்கள், உறுதியற்ற தன்மை, சமநிலை இழப்பு மற்றும் சோர்வு போன்ற தள்ளாட்டங்களை எலும்பு தேய்மானம் கொடுக்கும்.

ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தா மற்றும் சித்தரத்தை இரண்டுமே உங்கள் எலும்புகளை உறுதியாக வலுவாக வைத்திருக்கும். இது இளவயதில் இருப்பவர்களுக்கு எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு முதுமைகாலத்திலும் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்த செய்யும். இதனால் எலும்புகள் பலவீனமடைவது தடுக்கப்படும். இதை எப்படி எடுப்பது என்பதை பார்க்கலாம்.

தேவையானவை :

• சித்தரத்தை                  - 100 கிராம்
• அமுக்கிராங்கிழங்கு - 100 கிராம்

சித்தரத்தையை நுணுக்கி வெயிலில் உலரவைத்து காயவைத்து பொடியாக்கவும். அதே போன்று அமுக்கிராங்கிழங்கு பொடியாக்கவும் (அஸ்வகந்தா பொடியாகவும் கிடைக்கும்) இரண்டையும் கலந்து பொடியாக்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தி கொள்ளவும்.

தினமும் காலையிலும் இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் அரை டீஸ்பூன் பொடியை எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும். தொடர்ந்து ஒரு மண்டலம் வரை அதாவது 48 நாட்கள் எடுத்து வந்தால் எலும்புகள் வலுவாகும். எலும்பு உறுதியாக இருக்கும்.

நன்மைகள் :

எலும்பு முறிவு பிரச்சனை, எலும்பு தேய்மானம் கொண்டவர்கள் இதை எடுத்துகொண்டால் எலும்பு உறுதியாக இருக்கும். அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.

குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்தில் குறைந்த ஈஸ்ட்ரோஜன் சுரப்பை கொண்டிருப்பார்கள். இதனால் எலும்பு தேய்மானம் எதிர்கொள்ளலாம். ஆஸ்டியோபொராசிஸ் என்றழைக்கப்படும் இந்த நிலையை எதிர்கொள்ள இந்த மூலிகை பொடி உதவும்.

மன அழுத்தத்தால் மற்றும் வீக்கத்தால் உண்டாகும் எலும்பு தேய்மானத்தை தடுக்க அஸ்வகந்தா உதவும். இது உடலில் கார்டிசோல் அளவை குறைப்பதன் மூலம் எலும்பு தேய்மானத்தை சேதத்தை வீக்கத்தை தவிர்க்க செய்யும்.

அஸ்வகந்தா எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. எலும்பு திசுக்கள் உடைந்து இரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுக்கவும் செய்கிறது. இதில் இருக்கும் விதாஃபெரின் ஏ மற்ற புரதங்களை உடைக்கும் புரோட்டியோசோம்கள் அல்லது புரத வளாகங்களின் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் காயத்துக்கு பிறகு வேகமாக குணமாக ஊக்குவிக்கிறது.

சித்தரத்தை நன்மைகள் :

மூட்டுவலி எலும்புகளில் வலி உணர்வுக்கு உடலில் வாதம் அதிகரிப்பதால் ஏற்படலாம். வாதநீர் உடலில் அனைத்து பகுதியிலும் பரவி மூட்டுகளில் தேங்கி அந்த இடத்தில் விறைப்புத்தன்மை உண்டு செய்கிறது. இந்த அழற்சி பண்புகள் மூட்டு வலியை தீவிரப்படுத்துகிறது. சித்தரத்தை உடலில் இருக்கும் வாதத்தை வெளியேற்றும் தன்மை கொண்அது. இது மூட்டு வலிகளை நீக்கி உடலில் இருக்கும் வாதத்தை கட்டுக்குள் கொண்டு வரும்.

சித்தரத்தை உடலில் இருக்கும் கபத்தை வெளியேற்றுவதோடு வாதத்தையும் வெளியேற்றுகிறது. அஸ்வகந்தா மற்றும் சித்தரத்தை இரண்டுமே பக்கவிளைவுகள் இல்லாதது. இரண்டையும் சேர்த்து அளவாக எடுக்கும் போது அது உடலில் ஆரோக்கிய நன்மைகளை அளிப்பது போன்று எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எலும்புகளில் வலி, எலும்பு தேய்மானம், எலும்பு பலவீனம், மூட்டுகளில் வலி போன்ற உபாதையை பெரும் அளவு குறைக்கிறது.

குறிப்பு:

சித்தரத்தை மற்றும் அஸ்வகந்தா இரண்டுமே நன்மை தரக்கூடியவை. இதை மருத்துவ சிகிச்சைக்காக எடுக்கும் போது மருத்துவரின் ஆலோசனையுடன் எடுப்பது நல்லது.