குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தெரியுமா?

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தெரியுமா?

பெருந்தொற்று பெரியவர்கள் வாழ்க்கையை மட்டுமின்றி, குழந்தைகளின் வாழ்வியல் முறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

தினமும் காலையில் பள்ளிக்கு சென்று, உடன் படிப்பவர்களுடன் பழகி, ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை கற்றுக்கொண்டு மீண்டும் மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த குழந்தைகள் தற்போது மொபைலும் கையுமாக இருக்கின்றனர். வீட்டுக்கு அருகே உள்ள மற்ற குழந்தைகளுடன் கூட விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த துடிப்பற்ற வாழ்க்கை முறை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கிறது.

குழந்தைகளின் எலும்பானது தொடர்ந்து வளர்ச்சி அடையக் கூடியதாக உள்ளது. இந்த வளர்ச்சி காலகட்டத்தில் பழைய எலும்பு செல்களுக்கு மேல் புதிய செல்கள் வளர்ச்சி தோன்றுகின்றன. இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் துடிப்பாக ஓடியாடி இருக்கும்போது வளர்ச்சி சீராக இருக்கும். சோர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது வளர்ச்சி சீரற்றதாக மாறிவிடலாம்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது எலும்பு வளர்ச்சி தொடங்குகிறது. குழந்தை பிறந்து பாலூட்டும் காலகட்டத்தில் எலும்பு வளர்ச்சி வேகம் எடுக்கிறது. அதனால்தான் குழந்தைகளுக்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. குழந்தைகள் ஓடுவது, குதிப்பதன் மூலம் எலும்பு உருவாவது தூண்டப்படுகிறது. எலும்புகள் உறுதியாகின்றன.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது குழந்தைகளை நன்கு விளையாட விட வேண்டியதுதான். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டும்.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியத்துக்கு பால் பொருட்களை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 350 முதல் 375 மி.கி அளவுக்கு கால்சியம் உள்ளது என்பதால் தினசரி கேழ்வரகு உணவை அளியுங்கள். ராகி கிடைக்கவில்லை என்றால் ராஜ்மா, எள் போன்றவற்றை கொடுக்கலாம். எள்ளை நம்மால் அதிக அளவில் சாப்பிட முடியாது. ஆனால், 100 கிராம் எள்ளில் 800 மி.கி அளவுக்கு கால்சியம் உள்ளது. அதனால், எள் உருண்டை போல சிறிதளவு சாப்பிட்டாலே கூட போதும் மிக அதிகமான பலனைப் பெறலாம்.

குழந்தைகளுக்கு கோலா, சோடா, கார்பனேட்டட் பானங்களை அளிக்க வேண்டாம். இந்த பானங்களில் உள்ள ரசாயனம் கால்சியம், வைட்டமின் சி ஆகியவற்றை நம்முடைய உடல் கிரகிப்பதை தடுத்துவிடுகின்றன. இதற்கு பதில் பிரஷ் ஜூஸ் கொடுக்கலாம்.

குழந்தைகள் தொலைக்காட்சி, மொபைல் பார்க்கும் நேரத்தைக் குறைத்துவிட்டு, அவர்களை வெளியே விளையாட ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகள் அமரும் போது 90 - 90 - 90 டிகிரி விதியை பின்பற்ற வேண்டும். அதாவது அவர்கள் அமரும் போது அவர்கள் முழங்கை, இடுப்பு, கால் மூட்டு ஆகியவை 90 டிகிரி அளவில் இருக்கும் வகையில் அமர்வதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப அவர்கள் நாற்காலியை சரி செய்ய வேண்டும். இவை எல்லாம் குழந்தைகளின் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்யும்!