பயத்தங்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள் !!
அடிக்கடி பயத்தங்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள் !!
பயத்தங்காய் பீன்சை விட மெல்லியதாகவும், நீளமானதாகவும் இருக்கும். உள்ளே தட்டப்பயறை போல் இளம் பயிர்கள் இருக்கும். இதனை காராமணி' என்றும் கூறுவார்கள்.
புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த காய் அவசியமான ஒன்றாகும். முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட நினைப்பவர்களும் அடிக்கடி காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பயத்தங்காயில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் அதிகம். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும். இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இந்தக் காய் பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
பயத்தங்காய் வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்சினைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீரக நோய்களையும் சரியாக்குகிறது.
காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.