உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?
உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?
"நீர் சூழ் உலகு" என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது. அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் "உப்பு". அந்த உப்பின் ஆன்மீக, தாந்திரீக ரீதியான பயன்களை பற்றி இங்கு சித்தர்களின் குரல் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
வீட்டில் பணப்புழக்கம் அதிகம் இருக்கவும், செல்வ நிலை உயரவும் நம் வீட்டிற்கு மாதா மாதம் வாங்கும் பொருட்களில் "மகாலட்சுமியின்" அம்சமான "கல் உப்பை" முதலில் வாங்கும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் வீட்டில் எப்போதும் இந்த உப்பு சுத்தமாக தீர்ந்து போகாமல் படி பார்த்து கொள்ள வேண்டும். எல்லா சமயங்களிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் உப்பை தரையில் சிந்தாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் கல்லுப்பை சிறிது எடுத்து வீட்டில் மகாலட்சுமியின் படத்திற்கு முன் வைத்து வணங்குவது அந்த தேவியின் அருளை பெற்று தரும். முற்காலத்தில் வீட்டிலிருந்த வயதான பெண்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலுள்ள அனைவரையும் வரவழைத்து, ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயையும் சிறிது கல்லுப்பையும் எடுத்துக்கொண்டு, அனைவர்க்கும் திரிஷ்டி சுற்றி அந்த உப்பையும் மிளகாயையும் தீயிட்டு கொளுத்துவர். அப்போது அவையிரண்டும் பொறித்துக்கொண்டு எரிந்தால் நம்மிடமிருந்த மிகுந்த தீய அதிர்வுகளை அது ஈர்த்துக்கொண்டுள்ளது என அறியலாம். எனவே ஒவ்வொருவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த திரிஷ்டி சுற்றல் முறையை செய்துகொள்வது நமது சக்தி உடல்களிலிருக்கும் தீய பாதிப்புகளை நீக்கும்.
நமது உடலை சுற்றி சாதாரண மனித கண்களுக்கு புலப்படாத சூட்சம சக்தி உடல்கள் இருக்கின்றன. இந்த சக்தி உடல்கள் நாம் தினமும் வெளியில் சென்று பல்வேறு இடங்களில் புழங்கும் போது அந்த இடங்களின் தீய அதிர்வுகளும், மேலும் நமக்கு நெருக்கமாக வரும் பல வகையான மனிதர்களின் எதிர்மறை அதிர்வுகளை நமது இந்த சக்தி உடல்கள் ஈர்த்துக்கொள்கின்றன. இந்த கீழான அதிர்வுகள் நமது சக்தி உடல்களில் தங்கி, நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இவற்றை நீக்குவதற்கு நாம் தினமும் குளிக்கும் போது பயன்படுத்தும் நீரில் சிறிது கல் உப்பை ஒரு தேக்கரண்டி அளவு கரைத்து கொண்டு அந்த நீரில் குளிக்க வேண்டும்.
அது போல் நம் வீட்டில் சேர்ந்திருக்கும் தீய அதிர்வுகள் மற்றும் சக்திகளை போக்குவதற்கு நாம் வாரம் ஒரு முறை, வீட்டின் தரை பகுதிகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அந்த நீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து அந்நீரை கொண்டு வீட்டை கழுவி சுத்தம் செய்வதால் வீட்டிலிருந்த தீய அதிர்வுகள் நீங்கும். மேலும் நமது வீட்டை துஷ்ட சக்திகள் எப்போதும் தாக்காத வகையில் இருக்க நான்கு சிறிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் குடுவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த குடுவைகளில் சிறிதளவு கல்லுப்பை இட்டு காற்று புகா வண்ணம் அந்த குடுவைகளை நன்கு மூடி, வீட்டின் வெளிப்புற சுற்று சுவற்றில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளில் நான்கு குடுவைகளை வைத்து விட வேண்டும். அந்த குடுவைகளை நாம் அடிக்கடி சோதித்து பார்க்கும் போது, எந்த திசை பக்கம் இருக்கும் குடுவையில் உப்பு விரைவாக கரைந்து போயுள்ளதோ, அந்த திசை வழியாக நமக்கு ஏற்பட இருந்த பாதிப்பை அந்த குடுவையிலுள்ள கல்லுப்பு ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். எனவே கரைந்து போன அந்த உப்பை நீக்கிவிட்டு புதிய கல்லுப்பை அதில் போட்டு மூடி மீண்டும் அதே திசையில் அதை வைத்து விட வேண்டும். இப்படி நமது வாழ்வில் ஆன்மீக ரீதியாக உப்பு நமக்கு பல வகையில் பயன்படுகிறது