உணவா? விஷமா?

உணவா? விஷமா? 

சமையலுக்கு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால் என்ன நடக்கும் தெரியுமா?

சமையலுக்காக நீங்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது பல நோய்கள் பாதிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அடிக்கடி நாம் பூரி, பக்கோடா போன்ற எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிட விரும்புகிறோம். அப்போது மீந்த எண்ணெய்யை வீணாக்க மனமில்லாமல் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.

ஆனால் அவ்வாறு பயன்படுத்துவதால் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த பிரச்சினை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

தீமைகள்:-

சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவதால் நச்சுப் பொருள்களை வெளியிடுவதோடு உடலில் வீக்கம் மற்றும் பல்வேறு நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும். ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

அதிக வெப்பநிலையில், எண்ணெய்யில் உள்ள சில கொழுப்புகள் டிரான்ஸ்-கொழுப்புகளாக மாறும். டிரான்ஸ்-கொழுப்புகள் என்பது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளாகும். அவை நம் உடலில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

எண்ணெய்கள் மீண்டும் பயன்படுத்தப்படும்போது, டிரான்ஸ் கொழுப்புகளின் அளவு இன்னும் அதிகமாகிறது. சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது நம் உணவு ஆரோக்கியமற்றதாக மாறும் என்கின்றனர்.

கோழி, மீன் போன்ற அசைவ உணவுகளை பொறிக்கும்போது அந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் போது எண்ணெய்யில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியாவதால் எண்ணெய்யில் துர்நாற்றம் வீசும். அதோடு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.