கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ.!

கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ.!

எப்படி எடுத்து கொள்ளலாம்?

ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் ஒரு சிறந்த மருந்து பொருளாக கருஞ்சீரகம் திகழ்கிறது.

வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், சோடியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதம், ஆல்கலாய்டுகள் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கருஞ்சீரகத்தில் நிரம்பியுள்ளன.

கருஞ்சீரகத்தை சாப்பிடுவதனால் நமது உடம்பிற்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக கருஞ்சீரக டீ கெட்ட கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

அந்த வகையில் தற்போது இந்த டீயை எப்படி தயாரிக்கலாம் என்று இங்கே பார்ப்போம். 

தேவையான பொருள்கள் :

கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

புதினா - 1 கைப்பிடியளவு

இஞ்சி - 1 துண்டு

தேன்- 2 ஸ்பூன்  

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.

கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள்.  

புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை. புதினாவைச் சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ ரெடி.

தயார் செய்து வைத்திருக்கும் டீயை குடிக்கும் பொழுது, அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கொண்டு குடிக்க வேண்டும். நீங்கள் பொதுவாக டீ குடிக்கும் நேரங்களில் இந்த டீயைக் குடிக்கலாம்.

ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இந்த கருஞ்சீரக டீ குடிப்பது தான் நல்ல பலன் தரும். உடலை சுத்தம் செய்து வேகமாக எடையைக் குறைக்க வேண்டுமென்றால் காலை குடிப்பது போலவே மாலையிலோ அல்லது இரவு தூங்கும் நேரத்திலோ ஒரு கப் குடித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு :

இந்த கருஞ்சீரக டீ குடித்து வரும் சமயங்களில் பால் சேர்த்த டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.