நீர்முள்ளி செடியின் மருத்துவப் பயன்கள்

நீர்முள்ளி செடியின் மருத்துவப் பயன்கள்

நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடர்ந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். 

விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம். 

இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.
இரத்தசோகை ஏற்படும்போது உடல் வீங்கும். அதிக சோர்வு தோன்றும். மேல் மூச்சு வாங்குதல் மற்றும் இளைப்பு ஏற்படும். அப்போது நீர்முள்ளி குடிநீர் தயாரித்து 100 மி.லி. வீதம் தினம் காலை, மாலை இருவேளை குடித்துவரவேண்டும். குடித்தால், வீக்கம் குறைந்து உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடல் பலமடையும். நீர் முள்ளி ரத்த சோகையை போக்கும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

உடலில் வாதத்தன்மை தோன்றும்போது மூட்டுவலி ஏற்படும். இந்த வலியை போக்கி, மூட்டுகளுக்கு அதிக உறுதியை கொடுக்கும் ஆற்றலும் நீர்முள்ளி குடிநீருக்கு உள்ளது. இது, உடல் உள் உறுப்பு வீக்கங்களையும் போக்கும்.

நீடித்த வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறவர்கள், அரை தேக்கரண்டி நீர்முள்ளி விதை பொடியை 200 மில்லி லிட்டர் மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் பருகினால் நோய் குணமாகும். நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது. 

சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள்கொண்டு வரும். உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளிலும் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது. விதை மட்டுமின்றி அதன் வேரும், இலையும்கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரக்கொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

குறிப்பு:- இந்த விதையை பயன்படுத்தி மணலிலும் கயிறு திரிக்கலாம்.