குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண்களின் விந்தணு குறைபாடும் காரணமாக இருக்கலாம். இதற்கு என்னதான் தீர்வு?

குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண்களின் விந்தணு குறைபாடும் காரணமாக இருக்கலாம். இதற்கு என்னதான் தீர்வு?

இயல்பான கருத்தரிப்பு சற்று குறைந்துவருகிறது. கருப்பை பிரச்சினை மட்டுமல்லாமல் ஆண்களுக்கு இருக்க வேண்டிய விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் அதிக காரணமாக அமைகிறது.
    
விந்தணுக்கள் எண்ணிக்கை கோடி கணக்கில் இருந்தாலும் எல்லாமே கருப்பையை அடைவதில்லை.
விந்தின் தலை வட்டவடிவிலும் உடல் நீளமாகவும் இருப்பதோடு பலமானதாகவும் இருக்க வேண்டும்.
ஜங்க்ஃபுட் சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது என்கிறது ஆய்வு ஒன்று.


குழந்தையின்மை பிரச்சினைக்கு ஆண்களும் காரணமாகி வருவது அதிகரித்திருக்கிறது. ஆண் மலட்டுத்தன்மை, ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, வாழ்க்கை முறை போன்றவையும் இதற்கு காரணமாக அமைகிறது. சிறிய மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமாகவே விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைபாடின்றி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைப் பேறின்மைக்கு காரணம் பெண் தான் என்று சொல்லி வந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. திருமணத்துக்குப் பின் நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று பரிசோதனைக்கு செல்லும் போதே மருத்துவர்கள் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கைக்கான பரிசோதனைகளையும் வலியுறுத்துகிறார்கள்.

இதை உறுதி செய்யும் வகையில் குழந்தையின்மை பிரச்சினைக்கான மருத்துவமனைகள் பெருகி வருவதும், பெண்களுக்கு இணையாக ஆண்களும் பரிசோதனை செய்து கொள்வதையுமே ஆதாரமாக சொல்லலாம்.

விந்தணுக்களின் எண்ணிக்கை
ஒரு மில்லிமீட்டர் விந்துவில் 1.5 முதல் 3.9 மில்லியன் அளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை இருந்தால்தான் அவை இயல்பானது என்கிறது உலக சுகாதாரத்துறை. பலமான விந்தணுக்கள் கொண்டிருக்கும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை சாதாரணமாகவே 12 கோடி வரை கூட இருப்பதுண்டு.

அச்சுறுத்தும் குழந்தையின்மை

விந்தணுக்கள் கோடிக்கணக்கில் பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்துகின்றது. அதே நேரம் எல்லாமே கருப்பையை அடைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி செல்லும் விந்தணுக்களில் ஒன்று மட்டுமே அதனுடைய இலக்கை எட்டும். அதிகப்படியான விந்தணுக்கள் இருக்கும் போதே ஒரு விந்தணு மட்டுமே கருப்பையை அடைகிறது.

அதே நேரம் விந்தணுக்கள் எண்ணிக்கை கணிசமாகவும் வேகம் குறையும் போதும் அவை எப்படி கருப்பையை நீந்தி அடைய முடியும். அதனால் தான் இயல்பான குழந்தைப்பேறு பலருக்கும் சிகிச்சைக்குப் பிறகு என்றாகிறது.

இந்தக் குறைபாடுள்ள ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தான் ஆண்களின் விந்தணுக்கள் குறைந்து வருவதைத் தடுக்கும் வழிமுறையில் ஈடுபட வேண்டும் என்று ஆய்வுகள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றன. குழந்தையின்மைக்கு ஆண்களின் விந்தணுக்கள் குறைபாடு மட்டுமல்லாமல் விந்தணுக்கள் போதிய பலம் இல்லாமல் இருப்பதும் காரணமாகிறது.

இதற்கான விழிப்புணர்வும் தற்போது பரவலாக இருக்கிறது. குழந்தையின்மை சிகிச்சைக்கான பரிசோதனையில் விந்தணுக்கள் குறைபாட்டை உறுதி செய்ததும் இனி குழந்தைப் பேறு கேள்விக்குறிதான் என்ற அச்சம் வேண்டாம்.

சரியான மருத்துவ பரிசோதனையும் உரிய சிகிச்சைகளும் எடுத்துக்கொள்வதோடு விந்தணுக்களைப் பலப்படுத்தும் உணவுகளையும் எடுத்துக்கொள்வது விரைவில் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். குறிப்பாக இதனுடன் மன உளைச்சலையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவுக்கும் விந்துவுக்கும் தொடர்பு
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாவது மட்டும் முக்கியமல்ல. விந்தின் வடிவமும் சரியாக இருக்க வேண்டும். உரிய வடிவத்தில் விந்து இல்லையென்றால் அவை பெண்ணின் கருப்பையில் நீந்தி செல்ல முடியாது. வேகம் குறையும். அப்படியே சென்றாலும் அவற்றால் கருவுறுதலை உண்டாக்க முடியாது. விந்தின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். விந்தின் வடிவமும் துல்லியமாக இருக்க வேண்டும்.

தலை வட்டமாகவும் வால் நீளமாகவும் இருக்கும் விந்தணுக்களே துல்லியமானது என்றழைக்கப்படுகிறது. விந்தின் எண்ணிக்கையையும் வடிவத்தையும் சீராக்க உணவுகள் பெரிதும் உதவுகிறது.

ஆண்களின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் வடிவமும் தரமாக இருக்கும் என்கிறது ஆய்வு. மேலும் ஜங்க்ஃபுட் உணவுகளை அதிகம் எடுத்துகொள்ளும் போது விந்தணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் அவை பலவீனமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

விந்தணுக்கள் குறைபாட்டை சந்திக்காமல் இருக்கவும் விந்தணுக்களை பலமாக்கி வேகத்தை அதிகரிக்கவும் இந்த மாதிரியான உணவுகளை எல்லாம் தவிர்க்காமல் எடுத்துகொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள்.

முருங்கைக்கீரையும் பூவும் அவ்வபோது எடுத்துகொள்ளுங்கள்

வெந்தயம்
வெந்தயம் இது நீரிழிவுக்கு மட்டுமல்ல. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும். வெந்தயத்தைப் பொடித்து நீரில் கலந்து குடித்துவந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதி செய்யலாம். உணவுகளில் தாளிப்பின் போதும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.

முருங்கைக்கீரை
முருங்கைக்கீரை முதல் முருங்கை காம்பு வரை அனைத்துமே ஆரோக்கியமான இல்லற வாழ்க்கையிலும் குழந்தைப் பேறிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

முருங்கைப்பூவை சுத்தம் செய்து பசு நெய்யில் வதக்கி பசும்பாலில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். முருங்கை உணவுகள் இல்லற வாழ்விலும் ஈடுபாட்டை உண்டாக்கும். அதனால் தான் இதை இயற்கை வயாகரா என்று சொல்கிறார்கள். ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களின் கருப்பையையும் கருவளர்ச்சியையும் பலப்படுத்தும்.

பாதாம்பருப்பு
பாதாம்பருப்பில் ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் மட்டுமல்ல பலமான விந்தணுக்களைக் கொண்டிருக்கும் ஆண்களும் தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாமை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் பலம் கூடும். விந்து வடிவம் சீராகும்.

பாதாம் நல்ல கொழுப்புகள் நிறைந்த சத்துமிக்க பொருள் என்பதால் விலை கூடுதலாக இருந்தாலும் அவற்றை தவறாமல் எடுத்து கொள்வது பலனளிக்கும்.

விதைகள் உரமாகும்
பூசணி விதைகளில் துத்தநாகம் என்னும் தாதுப்பொருள் உள்ளடங்கியுள்ளது. நல்ல தரமான விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை காய்கறி சாலட்டில் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது விந்தணுக்களுக்கு பலத்தையும் வேகத்தையும் கொடுக்கும்.

இதே போன்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தாமரை விதையையும் வாங்கி பசும்பாலை சுண்டக்காய்ச்சி குடித்து வரலாம். ஆளி விதையையும் சாலட்டில் கலந்து சாப்பிடலாம். இரண்டுமே மருத்துவரது ஆலோசனையுடன் உரிய அளவு தகுந்த இடைவெளியில் எடுத்துகொள்வது முக்கியம்.

வெள்ளைபூண்டு
பூண்டு இயல்பாகவே பல்வேறு மருத்துவ குண நலன்களை உள்ளடக்கியது. இதிலிருக்கும் அசிலின் என்னும் பொருள் இயற் கையாகவே பாலியல் ஹார்மோன்களைத் தூண்டக்கூடியது. விந்தணுவின் சீரான இயக்கத்தைப் பூண்டில் இருக்கும் செலினியம் உதவுகிறது.

பூண்டை பச்சையாக மென்று சாப்பிட விரும்பாத ஆண்கள் வாரம் இருமுறை பசும்பாலில் பூண்டை வேகவைத்து குடித்து வரலாம். விந்தணுக்களின் ஆரோக்கியத்தைக் காப்பானாக பூண்டு சிறந்து விளங்கும் என்கிறது ஆய்வுகளும்.

கீரைகள்
கீரைகள் எப்போதுமே சத்துக்கள் மிகுந்தவையே. அதிலும் பசலைக்கீரையில் குறிப்பாக கொடி பசலை என்னும் கீரை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதில் இருக்கும் ஃபோலிக் ஆஸிட் விந்தணுக்களில் இருக்கும் டிஎன்ஏவை பாதுகாக்கிறது. கீரையை சாறாக்கி குடித்து வரலாம். அல்லது பொரியல், மசியல், கீரை தோசையாக செய்தும் சாப்பிட்டும் வரலாம். நல்ல பலன் கிடைக்கும். ப்ரக்கோலியும் எடுக்கலாம்.

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் கோழி இறைச்சி, வான் கோழி, கடல் உணவுகள் குறிப்பாக கானாங்கெளுத்தி, சால்மன் மீன்,இறால், நண்டு, கொழுப்பு குறைந்த பால், முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சியில் கல்லீரல், உலர்பழங்கள் (அத்திப்பழம், பிஸ்தா, முந்திரி..) தாவர எண்ணெய், பழங்கள் (சிட்ரஸ் நிறைந்த பழங்கள்) போன்றவற்றைத் தவிர்க்காமல் அன்றாடம் ஒன்று என்று பட்டியலிட்டு எடுத்துகொள்ளலாம்.

இவை தவிர அன்றாடம் காய்கறி சாலட், பழங்கள், தினமும் 8 மணி நேர தூக்கம். மன உளைச்சல் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை இவையெல்லாம் இணைந்த உரிய நேர சிகிச்சை உங்கள் இல்லறத்தையும் சிறப்பாக்கும்.

விந்தணுக்களின் உற்பத்தியைக் கணிசமாக உயர்த்தி வேகத்தையும் பலவீனத்தையும் கவலையின்றி பெறலாம். இல்லற வாழ்க்கையை சிறப்பாக்கலாம்.