நோய்கள் வராமல் தடுக்கும்…வந்தாலும் விரட்டும்! மருந்து கஞ்சி

நோய்கள் வராமல் தடுக்கும்…வந்தாலும் விரட்டும்! மருந்து கஞ்சி

ஆரோக்கியமாக வாழ்வது அத்தனை பெரிய சவாலான விஷயமெல்லாம் இல்லை என்று எளிமையான வழிகளைப் பின்பற்றியே அசாத்தியமாக வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர். அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் மருந்து கஞ்சியும்.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை ஒன்று சேர்த்தே, மருந்து கஞ்சியாக வைத்து அருந்தித் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணி வந்துள்ளனர். நோய்கள் அதிகரிக்கும் தற்போதைய சூழலுக்கு இந்த மருந்து கஞ்சி மிகவும் நல்லது’’ 

‘‘மருந்து கஞ்சி என்பது நோய் வந்த நிலையிலும், நோயில்லா நிலையிலும் உடலுக்கு எதிர்ப்புத் திறனை அளிக்கக் கூடிய  அமிர்தம் என்று சொன்னால் அது மிகையில்லை. நம் முன்னோர்கள் பாரம்பரியமாகவே வடித்த கஞ்சி, முடிச்சு கஞ்சி, வடிகஞ்சி, உறைகஞ்சி, சுடுகஞ்சி, கொள்ளுக்கஞ்சி, உளுந்தங்கஞ்சி, பொரி சேர்த்த கஞ்சி, வெந்தயக்கஞ்சி, நெற்பொரி கஞ்சி என பல வகையான கஞ்சிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் மருந்து கஞ்சி இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

மருந்து கஞ்சி என்பது அரிசி, உளுந்து, மிளகு, பூண்டு, வெந்தயம், சீரகம் போன்றவற்றால் தயாரான கஞ்சி ஆகும். குறிப்பாக, இதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மருத்துவப் பயன்களைத் தருபவை. அவை  ஒன்றாக சேரும்போது இன்னும் கூடுதலாக நம் உடலுக்கு ஆற்றல் தந்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள  உதவுகிறது.

மருந்து கஞ்சியில் சேர்க்கப்படும் பொருட்களின் மருத்துவ குணங்கள் :

வெந்தயம் :

நம் உடலின் ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள Ferrous compound நம்  ரத்தத்தில் நேரடியாக கலக்கிறது. நன்கு பக்குவப்படுத்தப்பட்ட இரும்புச்சத்து இதில் உள்ளது. வைட்டமின் B6, B1, B2, C, மக்னீசியம் போன்றவை நிறைந்து உள்ளது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை உண்டு பண்ணும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

உளுந்து :

உளுந்து ஒரு சிறந்த புரதச்சத்துப் பொருளாகும். பெண்களுக்கு நல்ல வலுவையும், இடுப்புக்கு உறுதியையும் கொடுக்கும். பசியை உண்டாக்கும். உளுந்தினால் இளைத்த உடல் பருக்கும். உளுந்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்த நீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் (Urinary tract infections) நீங்கும்.

சீரகம் :

சீர் + அகம் =  சீரகம் நம் உடலின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீர்படுத்தி நன்கு செரிமானத்துக்கு உதவுகிறது. சீரகத்தில் மிகுந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் சி, இ, கால்சியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

மிளகு :

நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் பெரும் சிறப்புடையது மிளகு. நன்கு பசி எடுப்பதற்கும், தொண்டை தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கவும் மிளகு உதவும். வைட்டமின் பி, மக்னீசியம் அதிகம் கொண்ட உணவுப்பொருள் என்ற சிறப்புடையது மிளகு.

புழுங்கல் அரிசி :

மருந்து உண்பவருக்கும், நோயாளிகளுக்கும் ஏற்றது புழுங்கல் அரிசி. கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

பூண்டு :

காயம் என்று அழைக்கப்படும் நம் உடம்பை அழியாமல் பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதால் பூண்டுக்குக் காயம் என்ற பெயரும் உண்டு. இதில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. பூண்டில் உள்ள Gallic acid சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகும். வேகவைத்த பூண்டு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.

100 கிராம் மருந்து கஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.

கார்போஹைட்ரேட்     –  60 கி
புரதம்         – 20 கி
வைட்டமின்கள்     – ஏ,பி, ஈ
நார்ச்சத்து         – 10 கி
இரும்புச்சத்து     – 5 கிராம்
மக்னீசியம்     – 3 மி.கி
கால்சியம்         – 2 கிராம்
சோடியம்         – 2 கிராம்
பொட்டாசியம்     – 2 கிராம்

மருந்து கஞ்சியின் மருத்துவ பயன்கள் :

பொதுவாக நம் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளின் வெளிப்பாடு சுரம். அந்த நிலையில் கோதுமை சார்ந்த உணவுகளான ரொட்டி, பிரெட் போன்ற உணவுகளைத் தவிர்த்து மருந்து கஞ்சியை உபயோகிக்கலாம். நம் அன்றாட வாழ்வில்  நன்றாக பசி எடுப்பதற்கும், செரிமானத்துக்கும் மருந்து கஞ்சி முக்கியமானதாகும்.

நம் வயிற்றில் தேவையான அமில சுரப்புக்கும் (Hydrochloric acid) நம்முடைய உடலின் குடலியக்கத்துக்கும், Irritable bowel syndrome என்று சொல்லக்கூடிய குடல் ஒவ்வாமை நோய்க்கும் மருந்து கஞ்சி ஒரு அரு மருந்தாகும்.

நம் உடலின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நம் உடலில் ஜீரண மண்டலம் சரியாக செயல்படாததே ஆகும். இந்த செரிமான கோளாறினால் வயிற்று வலி, வாந்தி, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் வருகிறது. இது உடலளவிலும் மனதளவிலும் நம்மை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. மருந்து கஞ்சி இந்த பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் பாதுகாத்து நம் உடலுக்கு அரணாக திகழ்கிறது.

இன்றைய நவீன உலகில் தவிர்க்க முடியாத ரசாயன உணவுகளை உண்ணும்போது ஏற்படும் குடல் ஒவ்வாமைக்கு மருந்து கஞ்சி சிறந்த நிவாரணமாகும்.

மருந்து கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொள்வது சிறந்தது. வெறும் வயிற்றில் உண்பது நல்ல பயனை அளிக்கும். நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டுக்கு சிறந்த மருந்து என்று கூறலாம்.

மருந்து கஞ்சி எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 200 கிராம்
உளுந்து – 50 கிராம்
சீரகம் – 5 கிராம்
மிளகு – 3 கிராம்
வெந்தயம் – 3 கிராம்
பூண்டு – 20 பல்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் புழுங்கல் அரிசியையும், உளுந்தையும் நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு, ஒரு  குக்கரில்  புழுங்கல் அரிசி, உளுந்து, மிளகு, வெந்தயம், சீரகம், பூண்டு, உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நீர் தேவையான அளவுவிட்டு ஐந்து விசில் கொடுத்து இறக்கவும். பிறகு விசிலை நீக்கி சூடான நீர்விட்டு கஞ்சி பதத்தில் கடைந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இளம் வயதினருக்கு 30 மி.லி., அளவிலும், பெரியவர்களுக்கு 100 மில்லி அளவிலும், கர்ப்பிணிகளுக்கு 60 மி.லி அளவிலும் கொடுக்கலாம்