குழந்தைகளின் மூளைவளர்ச்சியை அதிகப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கும் நீர் பிரம்மி !
குழந்தைகளின் மூளைவளர்ச்சியை அதிகப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கும் நீர் பிரம்மி !
மூலிகைகள் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் உடலில் ஏற்படக்கூடிய நோய்களையும் மிக வேகமாக குறைக்க கூடியது. இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த மூலிகைகள் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் அற்புதமான தீர்வாக அமைகிறது. இன்னும் ஒருபடி மேலே சொன்னால் இந்த மூலிகைகளை நாம் எடுத்துக்கொள்ளும்போது எந்தவிதமான பக்க விளைவுகளும் நமக்கு ஏற்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் உடலும் நல்ல ஆரோக்கியமாகவும் எந்த பிரச்சினைகள் இல்லாமலும் இருக்கும்.
ஏராளமான மூலிகை வகைகள் தொடர்ந்து நம்மிடமிருந்து மறைந்து கொண்டே வருகிறது. ஆனால் உலக நாடுகளில் இந்த மூலிகைகள் மிகப்பெரிய அளவில் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அப்படி மிக முக்கியமாக நினைவு திறனை அதிகரிக்க கூடிய அற்புதமான ஒரு மூலிகை நீர் பிரம்மி. இந்த நீர்பிரம்மி இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை கொண்டு குளிர்ச்சித் தன்மையை கொண்டது. இது நம்முடைய உடலில் உள்ள நரம்புகளை பலப்படுத்தும்.
சிறுநீரை கட்டுப்படுத்தக் கூடிய தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு மலத்தை இளக்கி மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும். மூட்டு நோய்க்கு அற்புதமான ஒரு மூலிகை இது. ஆஸ்துமாவுக்கு மருந்தாக பயன்படுகிறது. இருமல், காய்ச்சல், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. இது பாரம்பரியமாக ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும், மூளையை பலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நீர் பிரம்மி செடி நீர்நிலைகளில் கரையோரங்களில் வளரக்கூடிய சிறிய செடி வகை. பல கிளைகளாக பிரிந்து சதைப்பற்றான சிறு செடி வகை தாவரம். கணுக்கள், வேர்களுடன் கூடியதாக அடர்த்தியான தொகுப்பாக காணப்படும் இந்த நீர்பிரம்மி. இந்த தாவரம் முழுவதும் பச்சை நிறமாக காணப்படும். இதன் இலைகள் நீண்டு உருண்டு சதைப்பற்றாக இருக்கும். மலர் வெண்மை நிறத்தில் காணப்படும். செந்நிறமான திட்டுகள் இதழ்களில் காணப்படும். இதனுடைய மலர்கள் மிக விரைவாக வாடிவிடும் தன்மை கொண்டது. பார்ப்பதற்கு பருப்புக்கீரையைப் போல தோன்றக்கூடிய அதைவிட சற்று சிறிய தோற்றத்தில் இது இருக்கும். இதனுடைய இலைகள் அதிக அளவு நீர்ச்சத்து கொண்டதாக இருக்கும்.
இதனுடைய மருத்துவ குணங்களுக்காக தற்போது இது இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது. பலவிதமான மருந்து பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது இதனால் உலகம் முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நீர் பிரம்மி வேறு பல பெயர்களையும் கொண்டுள்ளது. சாம்பிராணி பூண்டு, பிரமிய வழுக்கை, நீர்பிரம்மி சப்தலை, வாடிகம், விவிதம், வாக்குபவம். விமலம், பிரமிய பூடு இப்படி பல மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. கிராமங்களில் இதற்கு இன்னும் வேறு பல பெயர்களும் உண்டு.
இந்த முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் வீக்கம், கட்டிகள் இருக்கக்கூடிய இடங்களில் அந்த வீக்கம் கட்டி குணமாக இந்த முழு தாவரத்தையும் ஆமணக்கு எண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் ஒற்றடம் இட்டு வீக்கம், கட்டி மீது வதக்கிய தாவரத்தை சிறிய சூட்டில் வைத்து கட்ட வேண்டும். தொடர்ந்து செய்யும் பொழுது வலி வீக்கம் கட்டிகள் குணமாகும்.
சிலருக்கு தொண்டை கரகரப்பு சரியாகாமல் இருக்கும். இவர்கள் முழு தாவரத்தை நீரில் கழுவி சுத்தம் செய்து அரைத்து அதை பிழிந்து அதில் இருந்து சாறு எடுத்து தினமும் ஒரு வேளை நான்கு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். அல்லது ஒரு பிடி அளவு தாவரத்தை எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு குணமாகும். கோழைக்கட்டு குணமாக இந்த முழு தாவரத்தையும் அரைத்து நல்ல பசையாக மாற்றி நெஞ்சுப்பகுதியில் பூசி வரவேண்டும்.
நீர்பிரம்மி இலைகளை பொடி செய்து இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பானமாக கொடுத்து வர குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக, புத்தியுடன் வளர்வார்கள்.
நீர்பிரம்மி ஞாபகசக்தி அதிகரிக்கும் பண்பு சமீபத்திய ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது நரம்புத்தளர்ச்சியை குணமாக்கக் கூடியது. ஏராளமான மருந்துத் தயாரிப்புகளில் நீர்பிரம்மி சேர்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் பல மருந்துகள் நீர்பிரம்மியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த மூலிகையை எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் மூளைக்கு பலத்தைக் கொடுத்து மறதியை போக்கக்கூடியது. மேலும் மன அழுத்தத்தையும் இது குறைக்கக்கூடியது. புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் இது குறைக்கிறது.
மூளைக்கு பலம் அளிக்கும், நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும், அதிக ஞாபக சக்தியை தரவும் இந்த நீர்பிரம்மி இலைகளை கொண்டு அற்புதமான ஒரு டானிக் தயாரிக்கப்படுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவு நெய்யை எடுத்து நெய் சூடானதும் ஒரு கைப்பிடி அளவு நீர் பிரம்மி இலைகளை எடுத்து அதை நன்றாக தண்ணீரில் கழுவி நெய்யில் சேர்த்து நன்றாக பொரிந்து வரும் வரை வதக்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு சிற்றரத்தை பொடி சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு தண்ணீர் விட்டு இதை கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்த பிறகு இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனை வடிகட்டி இதோடு தேன் சேர்த்து தேநீரை பருக வேண்டும்.
அஜீரணத்தால் ஏற்படக்கூடிய புளித்த ஏப்பத்தை இது கட்டுப்படுத்துகிறது. இதை தொடர்ந்து பருகுவதன் மூலம் நுரையீரலில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் விரைவில் குணமாகும். நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து அதோடு தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி அதை கசாயம் செய்து தொடர்ந்து அருந்தி வரும்பொழுது நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல் பிரச்சினைகள் விரைவில் தீரும். குளிர்ச்சியை கொடுத்து, நரம்புகளை சக்தியாகும் நீர் பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்கும் பொழுது வெப்ப காலத்தில் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரும். புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை தடுப்பதில் நீர் பிரம்மி முக்கிய பங்கு வகிப்பது சமீபத்திய ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.