கார்டியோ’ பயிற்சிகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் :

கார்டியோ’ பயிற்சிகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் :

கார்டியோ பயிற்சிகளை அதிகமாக செய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை ஒருசில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை குறித்து பார்ப்போம்.

கார்டியோ பயிற்சிகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் கார்டியோ பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்யும்போது பக்க விளைவுகளை அனுபவிக்கக்கூடும். கார்டியோ பயிற்சிகளை அதிகமாக செய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை ஒருசில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை குறித்து பார்ப்போம்.

வளர்சிதை மாற்றம்: 
உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு தவறாமல் உடற்பயிற்சி செய்வது சிறந்த வழிமுறையாகும். அதேவேளையில் உடற்பயிற்சிக்கான கால அளவு அதிகமாகும்போது தசைகள் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். அதனால் தசைகள் வேதனையை அனுபவிக்க நேரிடும். தசைகள் பலவீனமடையும்போது எரிக்கப்படும் கலோரிகளின் அளவும் குறைந்து போய்விடும். வளர்சிதை மாற்ற செயல்பாடும் பாதிப்படையும். அதிகப்படியான கார்டியோ பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். தொடர்ந்து கார்டியோ பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்யும்போது தசை இழப்பு ஏற்படும். கொழுப்பு அதிகரித்துவிடும்.

மாதவிடாய் சுழற்சி: 
மன அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தால் உடலாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலுக்கு தேவையான ஹார்மோன்களின் சமநிலையும் பாதிப்புக்குள்ளாகும். உடலின் அனைத்து வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளை பராமரிப்பதற்கு கார்டியோ பயிற்சிகளை மிதமாக செய்வது போதுமானது. அதிகம் செய்வது பிரச்சினையை அதிகப்படுத்திவிடும்.

காயம்: 
கார்டியோ பயிற்சிகளை அதிகம் செய்யும்போது உடலில் அதிக அழுத்தம் உண்டாகும். ஆரம்ப நாட்களில் வழக்கத்துக்கு மாறாக மூட்டுகள், தசைகளில் அதிக வலியை உணரக்கூடும். நாட்கள் அதிகரித்தாலும் அதே வேதனையை அனுபவிக்கக்கூடும். பயிற்சி செய்யும் நேரம் தவிர மற்ற சமயங்களிலும் வலியை உணர்ந்தால் கார்டியோ பயிற்சிகளை அதிகம் செய்வதாக அர்த்தம். எவ்வளவு நேரம் வலியை உணர்கிறீர்கள், எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தூக்கம் எந்த அளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சோம்பல்: 
அதிகப்படியான கார்டியோ பயிற்சிகளை செய்யும் போது அடுத்த நாள் உடம்பு வலி ஏற்படும்.அந்த நாளே கடினமாக இருக்கும். அன்றாட வேலைகளை செய்யக்கூட உடல் ஒத்துழைக்காது. சோம்பல் எட்டிப்பார்க்கும்.

தூக்கமின்மை: 
தூக்கமின்மைக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது உடற்பயிற்சியாக அமைந்திருந்தாலும், போதுமான தூக்கம் வராமல் இருப்பதற்கு அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதும் காரணமாக அமையும். ஏற்கனவே மன அழுத்தம் அழுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில் உடற்பயிற்சி அளவு அதிகரிப்பது இரவில் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். எனவே உடற்பயிற்சி நேரத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். இரவில் தூக்கமின்மை பிரச்சினையை அனுபவித்தால் உடலை இலகுவாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.

இதய துடிப்பு: 
அதிகப்படியான கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சில சமயங்களில் 4-5 நாட்கள் வரை கூட இதயத்துடிப்பு வேகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை அபாயகரமான அறிகுறியாக உடற்பயிற்சி நிபுணர்கள் கருதுகின்றனர். வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சிகள் அல்லது 75 நிமிடங்கள் சற்று கடினமான ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு மண்டலம்: 
கார்டியோ பயிற்சிகளை அதிகமாக செய்யும்போது கார்டிசோல் எனும் மன அழுத்த ஹார்மோனும் அதிகமாக வெளியிடப்படும். இதனால் இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்க நேரிடும். நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கும். மேலும் நோய்கள் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். பொதுவாக உடற்பயிற்சி மேற்கொள் ளும்போது ஆரம்பத்தில் சற்று சோர்வை உணரக்கூடும். ஆனால் கார்டியோ பயிற்சிகளை அதிகமாக செய்யும்போது களைப்பும், சோர்வும் காணப்படும்.

எடை இழப்பு: 
எடையை குறைப்பதற்கு கார்டியோ பயிற்சி உதவும் என்றாலும் அதிக பயிற்சி மேற்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சுழற்சி குறுக்கீடு காரணமாக கொழுப்பை இழக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் அதிகப்படியான பயிற்சியால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மெதுவான வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றால் எடை இழப்பு விகிதம் குறையும். மன அழுத்தம், உடல்நல பிரச்சினை ஏதேனும் இருந்தால் சரியான ஆலோசனை பெற்று கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.