உரை மருந்து

உரை மருந்து

மகத்தான தொலைந்துபோன நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளில் இது முக்கியமான ஒன்று.

பல வகையான தடுப்பூசிகளை வலியுறுத்தும் மருத்துவச் உலகம், நம்மிடையே இருந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது என்பது வேதனையான ஒன்று.

உரசு மருந்து, உர மருந்து நாளடைவில் உரை மருந்தாகிவிட்டது. உரை மருந்து மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்து.சிறப்பான சுத்தி முறை கொண்டு தயாரிக்கும் முறையே சிறந்த பலன் கொடுக்கும்.ஒவ்வொரு பொருளிலும் நஞ்சு கலந்தே இருக்கும். அதை நீக்கி முறையாக தயாரிப்பதே சிறந்த பலனைக்கொடுக்கும்.

குழந்தை குடிக்கின்ற தாய்ப்பால் செரிமானத்துக்கு, இந்த உரை மருந்துதான் திறவுகோல் .பாரம்பர்யமாக கடைபிடித்து வந்த சில நல்ல குழந்தை வளர்ப்பு முறைகளை நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம். 

இன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் பல மடங்கு பின்தங்கியே உள்ளார்கள். குழந்தை பிறந்தநாளை கொண்டாடுவதிலும் கேக் வெட்டுவதிலும், புது உடை வாங்கிக்கொடுப்பதிலும் இருக்கும் உத்வேகம் இதைப்போன்ற பொருளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் போக மறக்கடிக்க செய்ததில் பன்நாட்டு நிறுவனங்களின் பங்கு அதிகம்.

வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், நாட்டு மருத்துவம் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இவற்றைப் பின்பற்றி பயனடையலாம். குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷய அல்ல. அந்த குழந்தையை பெற்றபின் சிறப்பாக வளர்ப்பதே சிறப்பு.

உரை மருந்தை, பிறந்து 30 நாட்கள் முடிந்த குழந்தை முதல் 8 வயது குழந்தைகள் வரை உரை மருந்து கொடுக்கலாம். குழந்தைக்கு தலைக்கு ஊற்றிய நாட்களில், இந்த உரை மருந்தை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.ஆரோக்கியமான பெற்றோர்கள் என்றால் குழந்தை பிறந்த 10நாளில் இருந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

உரைமருந்து கொடுத்த 10 நிமிடம் வரை குழந்தைக்கு எந்த உணவுகளும் கொடுக்க கூடாது 10 நிமிடம் கழித்த பிறகு குழந்தைக்கு அனைத்து உணவுகளும் கொடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரையில் நல்லெண்ணெய் பயன்படுத்தக்கூடாது.

நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகும்,
வயிற்றில் வாய்வை சேராமல் அகற்றும். மாந்தம், கணம், வயிற்றுப்போக்கு தீரும்.

அக்கரகாரம், அதிமதுரம், சிற்றரத்தை, கடுக்காய், சாதிக்காய், மாசிக்காய், வசம்பு கரி, சுக்கு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், திப்பிலி, நெல்லிக்காய், சிறுதேக்கு, வாய்விடங்கம், கண்டங்கத்திரி, மிளகு, சீரகம், ஓமம், மஞ்சள்.. வட்டத்திருப்பி மூலிகையை சேர்த்தால் இன்னும் சிறப்பு..

முதலில் பொது சுத்தி செய்து கொள்ள வேண்டும். அதாவது, நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும். அரை வேக்காடு ஏற்பட்டதும் பொருட்களை வெளியே எடுத்து பின் தனித்தனி பொருளுக்கான சுத்தியை செய்து மேல் தோல் நீக்குவதை நீங்கி நிழலில் உலர்த்தி பின்  சித்தரத்தை சாற்றிலோ அல்லது வட்டத்திருப்பி வேர் கசாயத்திலோ மெழுகு பதமாக அரைத்து பப்பாளி குழாயில் நிறப்பி உலர்த்தி எடுத்துக்கொண்டு தேவைப்படும் போது  உரைக்கல்லில் அரைத்து உபயோகிக்கவும். இது கேரளாவில் தொன்றுதொட்டு வரும் ஒரு முறை மற்றும் சிறந்த சிறப்பான முறை..ஆனால் எல்லோராலும் தயாரித்துவிட முடியாது.

அதில் வாயு, சளி என்றால் வெந்நீரிலும்.சளி, என்றால் வெற்றிலைச் சாற்றிலும், துளசிச் சாறு, தேன் கலந்தும்,
வயிறு மந்தம், வயிற்றுப்போக்குக்கு, தேன், ஓமகஷாயத்திலும்
 ஜூரம், வாந்திக்கு இஞ்சிச் சாறு, தேன் விட்டும், பிரச்சனைக்கேற்ப இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2 அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் சேர்த்துக் கொடுக்கவும்.கொம்புத்தேன் சிறந்தது.

உரை மருந்து கொடுப்பதால் எற்படும் நன்மைகள்;

நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். (ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் இரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.)
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. 

இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.

வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத இரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

 பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.

குழந்தைக்கு குடிக்கும் பாலால் தான் மாந்தம் (வயிறு உபாதைகள்) ஏற்படுகிறது.அதை சீர் செய்தாலே மற்ற உபாதைகள் நெருங்காது.அதனாலேயே உரை மருந்து புகட்டுவது இன்றியமையாதது ஆகிறது.

சித்தர் பாடல்

சார்ந்திடவே பாலனுடல் வெதும்பி வேர்க்கும் சாற்றுமுலையுண்ணாது வாந்திபண்ணுங் கூர்ந்திடவே மதிமயங்குஞ் சீதம்விழும் குணங்கெட்டுமலமாயும் கெட்டபால்போல் தேர்ந்திடவே தெளிந்ததண்ணீர் போல்கழியும் தேகம்வெப்புநாற்றமுங் கால்கைகுளிர்ப்பாம் ஆர்ந்திடவே நாவுலருங்குரலுங்கம்மும் அப்பனே கண்குளிர்ந்து சுழலுமாமே

அறைகிறேன் பால்மாந்தம் வயிறுமூதும் அப்பனே பண்போல நொந்துநாற்றம் நிறைபுளிப்பாய் வயிறுபோகும் செவியுந்தாழும் நேர்விழியுங் குளிர்ந்துவிடுந் தொண்டைகோழை திறைகரமுங் காலவெதும்புங் குளிருங்காணும் திகைத்துமே குழந்தையது பரதவிக்கும் முறைமையாம் பால்மாந்த தோஷந்தன்னை காண்..என்கிறார் கமலமுனி சித்தர்.

அதாவது குழந்தை உடலானது வெதும்பி வியர்க்கும், முலைப்பால் உண்ணாது வாந்தி எடுத்து மயங்கும், சீதமும் மலமுமாய் கெட்ட பால்போலும் தெளிந்த தண்ணீர் போலும் கழியும், வெப்புநாறும், கைகால் குளிரும், நாவுலரும், குரல் கம்மும், கண் குழிந்து சுழன்று சிவக்கும், கால்பின்னும், முகம் பளிங்குப்போல் மின்னும், வயிறூதி புண்போல் நெளியும், செவிதாழும், தொண்டையிற் கோழை கட்டும்.

உரை மருந்து பொருட்களில் ஒவ்வொன்றும் பிரத்தியேக முறையில் சுத்திசெய்து சேர்ப்பதே சிறந்தது.சுவையான ரசம் தயாரிக்க உப்பு,புளி,கடுகு,எண்ணெய்,வெங்காயம்,தக்காளி,ரசப்பொடி,பூண்டு இவைகளை எந்த விகிதத்தில் சேர்த்தால் நல்ல சுவை கொடுக்கும் என்பதை போலவே உரை மருந்தில் எந்த பொருளை எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து சேர்த்தால் தான் நல்ல பலன் கொடுக்கும்.

பொடியை அதிமதுர கசாயத்தில்  மெழுகு பதமாக அரைத்து பப்பாளி மரத்தின் இலைக் குழலில் உற்புறமாக  சிற்றாமணக்கு எண்ணெயை தடவி பின் இந்த உரை மருந்தை செலுத்தி நிழலில் உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டால் எத்தனை வருடமானாலும் கெடாது மற்றும் வீரியமும் குறையாது..