சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ!

சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ!
 
குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப் பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.

குங்குமப்பூ சருமத்திற்கு அழகு சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதமாக்கும், வடுக்களை குணமாக்கும், முகப்பருவை போக்கும், இளமையை தக்கவைக்கும்.. இப்படி குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒரு சில வீட்டு உபயோகப் பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.

குங்குமப்பூ-பால்: 
ஒரு சிட்டிகை குங்குமப்பூவுடன் 4 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக கிளறிவிட்டு, அதனுள் பஞ்சை முக்கி முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம்.

அழகு நன்மைகள்: 
இந்த பேக் சருமத்திற்கு பிரகாசமான நிறத்தை அளிக்கும்.

குங்குமப்பூ-தேன்: 
2-3 குங்குமப்பூ இழைகளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பிரஸையோ, விரலையோ கொண்டு முக்கி முகத்தில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலரவிட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

அழகு நன்மைகள்: 
தேன் ஈரப்பதமாகவும், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகவும் இருப்பதால், முகப்பருவை அகற்றவும், சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க வும் உதவும்.

 
குங்குமப்பூ-வேம்பு, துளசி: 
3-4 குங்குமப்பூ இழைகளுடன் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து சில நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வேப்பம் தூள், ஒரு டேபிள்ஸ்பூன் துளசி தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவிவிட்டு உலர விடவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

அழகு நன்மைகள்: 
இந்த பேக்கில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகப்பருக்கள் எட்டிப்பார்க்காது.

குங்குமப்பூ-ரோஸ் வாட்டர்: 
ஒரு கிண்ணத்தில் 3 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அதில் 4-5 குங்குமப்பூ இழைகளை ஊறவைத்துக் கொள்ளவும். நன்கு ஊறியதும் பஞ்சை அதில் முக்கி முகம் முழுவதும் தடவிவிட்டு 30 நிமிடங்கள் உலர விடவும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

அழகு நன்மைகள்:
சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இளமையை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.

குங்குமப்பூ-சூரியகாந்தி விதைகள்:
ஒரு கப் பாலில் ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ மற்றும் 3 டேபிள்ஸ்பூன் சூரியகாந்தி விதைகள் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். காலையில் இந்த பேக்கை நன்றாக குழைத்து தூரிகையை பயன்படுத்தி முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் உலர விட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிடவும்.

நன்மைகள்: 
இந்த பேஸ் பேக் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சருமத்திற்கு குறைபாடற்ற பிரகாசத்தை அளிக்கும்.