ஜவ்வரிசி பற்றி அறிவீர்களா???

ஜவ்வரிசி பற்றி அறிவீர்களா???

நாம் பயன்படுத்தி வரும் ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்பட்டது. அது ஒரு போலி என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஜவ்வரிசி வரலாற்றில் ஒரு போலியை அசலாக, அரசாங்கமே அங்கீகாரம் தந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட வேடிக்கை நிகழ்ந்தது.

ஜவ்வரிசியின் ஆங்கிலப் பெயர் சேகோ. இது ஸாகு என்ற ஒரு வகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சி, இறுதியில் கிடைக்கும் மாவு போன்ற பொருளை சிறு சிறு குருணைகளைப் போல் உருட்டித் தயாரிக்கப்படுகிறது. 

இந்தோனேசியாவின் ஜாவா தீவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் ஜாவா அரிசி என அழைக்கப்பட்டு, அதுவே பின்னர் ஜவ்வரிசி என மருவியது. 

ஆனால், நாம் இன்றைக்கு பயன்படுத்துவது இந்தோனேஸிய பனைமரத்து ஜவ்வரிசிக்கு மாற்றாக உள்நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு
செய்யப்பட்டதாகும். 

ஆம்...

ஜாவா அரிசிக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட போலியையும் பின்னாளில் ஜவ்வரிசி என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சுவாரசியமான வரலாற்றை பார்ப்போம். 

தொடக்கத்தில் அசலான இந்தோனேசிய ஜவ்வரிசியே பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்த பின் மைதா மாவையும், ஜவ்வரிசியையும் கூட இறக்குமதி செய்ய முடியாமல் போனது. 

இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் மைதாவுக்கு மாற்றாக கேரளப் பகுதிகளில் இருந்து மரவள்ளிக் கிழங்கு வாங்கி மாவாக்கி விற்று விற்று வந்துள்ளனர். இதனையறிந்த மலேசிய ஜவ்வரிசி வியாபாரி போப்பட்லால் ஷா என்பவர் மாணிக்கம் செட்டியாரைச் சந்திக்க, ஜவ்வரிசிக்குஒரு டூப்ளிகேட் செய்து பார்க்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். பெரும் முயற்சிகளுக்குப் பின் மாணிக்கம் செட்டியாரும் போப்பட்லால் ஷாவும் இணைந்து மரவள்ளிக் கிழங்கு மாவை தொட்டிலில் இட்டு, அதைக் குலுக்கி குருணையைத் திரட்டி பாத்திரத்தில் இட்டு வறுத்து அதை ஜவ்வரிசி போல மாறச் செய்து போலி ஜவ்வரிசியைக் கண்டு பிடித்தனர். 

1943 வாக்கில் இந்த மாற்று ஜவ்வரிசியினை சேலத்தை மையமாகக் கொண்டு உற்பத்தியைத் தொடங்கிய பின் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இதற்கு முக்கியக் காரணம், அசல் ஜவ்வரிசிக்கும், மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவையில் எந்த வேறுபாடும் காண முடியாத அளவுக்கு ஒன்றாக இருந்ததே!

அதன் பின்னர் 1944 -ல் அசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 'இது உண்ணத் தகுந்ததல்ல ' என தடை விதிக்கப் பட்டதும், மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியும் உண்ணத் தகுந்தது என நிரூபித்தபின் தடைகள் தளர்த்தப்பட்டு, மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியையும் ஸாகோ என்ற பெயரில் விற்பனை செய்ய அரசு அனுமதி தர, ஒரு போலியே அசலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்கு தடை விதிக்க, போலியே அசலென மக்கள் மேனதில் நிலைத்து விட்டது.