உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்

உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்.:

நாம் உண்ணும் உணவுகள் கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம்.

அந்தக் கழிவுகள் அல்லது நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம். 

காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். இரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும். 

இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர் காலையில் அருந்தும் டீயில்  இஞ்சி சேர்த்து அருந்துவதால் அவை உடலைச் சுத்தமாக்கும். 

இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும். 

வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்; உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. 

கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிது நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள் குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.

கடுக்காய் நல்லதொரு கழிவகற்றி மட்டுமல்ல, நச்சகற்றி. ஐந்து கிராம் கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்; மலம் எளிதாக வெளியேறும். மற்றும் திரிபலா சூரணமும் கழிவுகளை அகற்றும்.