செண்பகப் பூவின் மருத்துவக் குணங்கள்...

 செண்பகப் பூவின் மருத்துவக் குணங்கள்...

 

கண்ணைக் காக்கும் செண்பகம்... செண்பகப் பூவின் மருத்துவக் குணம்

 

உடல் பலம் பெற:

உடல் பலமாகவும், புத்துணர்வுடனும் இருந்தால் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் வலுவடைய செண்பகப் பூ மிகச்சிறந்த மருந்தாகும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

 

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

 

பித்தம் குறைய:

மனிதனின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களே. இவை அதனதன் நிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

சிலருக்கு பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும். மேற்கண்ட உபாதைகளும் நீங்கும். செண்பக இலையில் நெய்யை தடவி, அதில் ஓமத்தை பொடி செய்து தூவி, அதை தலையில் வைத்து கட்டி வர வெப்பத்தினால் உண்டாகும் தலை வலியும் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

 

ஆண்மை குறைவு நீங்க:

ஆண்மைக் குறைவு என்பது பல காரணங்களால் உண்டாகிறது. இந்தக் குறை உடையவர்கள் செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

 

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் தொல்லையில் இருந்து விடுபட தினமும் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. 10 செண்பகப்பூவை 100 மி.லி நீர்விட்டு காய்ச்சி 50 மி.லி காலை, மாலை ஆகிய இருவேளை குடித்துவர வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், கணச்சூடு, நீர்சுருக்கு, சிறுநீர் சிவந்து எரிச்சலுடன் வெளிப்படுதல் போன்றவை குணமாகும்.

 

வயிற்றுவலிக்கு:

செண்பகப்பூவை நீரில் ஊறவைத்து, 30 மி.லி அளவு குடித்து வர சுரம், வயிற்றுவலி, குமட்டல் ஆகியவை குணமாகும். செண்பக இலையை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுவலி குணமாகும்.

 

காய்ச்சல் குணமாக:

பருவநிலை மாற்றத்தால் சிலரின் உடலில் பல பாக்டீரியாக்கள், வைரஸ்களின் தாக்கம் உண்டாகி பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

 

கண் பார்வை ஒளிபெற:

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் வெகு விரைவில் பார்வை மங்கும். இவர்களின் பார்வை நரம்புகளில் நீர் கோர்த்துக்கொள்ளும். இதற்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.

 

சிறுநீர் பெருக்கி:

சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

 

பாலியல் நோய்களைக் குணப்படுத்த:

ஒழுக்க சீர்கேட்டால் வைரல் டிசிஸஸ் (Viral diseases) என்ற பாலியல் நோயின் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.

 

குளிர் சுரம் நீங்க:

செண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு எடுத்து இடித்து, 4 மடங்கு நீர்விட்டு, காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை குடித்துவர குளிர் சுரம் தீரும்.

 

அல்சர் குணமாக:

செண்பக மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 20 பங்கு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர நாட்பட்ட குன்மம் (வயிற்றுப்புண்) குணமாகும்.

 

செண்பக பூவில் இருந்து நறுமண எண்ணெய், அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன. இந்த பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால் பூ உலர்ந்த பின்னரும் இதனை பூச்சிகள் அரிக்காது.

 

தோல் நோய்களுக்கு:

செண்பக மொட்டு, கார்போகரிசி, வெந்தயம், அருகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதை தலையில் தேய்த்து வர பொடுகு, சொறி, சிரங்கு போன்ற தொல்லைகள் தீரும்.

 

குளிர்க் காய்ச்சலுக்கு:

செண்பகப்பூ, சாத்திரபேதி, வெட்டிவேர், விலாமிச்சுவேர், தக்கோலம், நெற்பொரி, சுக்கு ஆகியவற்றை தலா 5 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் மாதுளம் பழச்சாற்றில் அரைத்து கலக்கி சாப்பிட குளிர் சுரம் நீங்கும்.

 

மூட்டு வலிகள், வாதத்திற்கு:

செண்பகப்பூ எண்ணெய் கண் நோய்க்கு சிறந்த மருந்து. இது, மூட்டு வாதத்தையும் குணமாக்கும். பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இது செயல்படுகிறது.

 

செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும். மேலும் தலைவலி, கண்நோய்கள் குணமாகும்.மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை குணமாக்கும்.