அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவகுணம் மிக்க கல்யாண முருங்கை...

 அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவகுணம் 

மிக்க கல்யாண முருங்கை...

 

கல்யாண முருங்கையில் இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைப்பார்கள்.

சளி, இருமலுக்கு

கிராமங்களில் இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற  உணவுகளாக செய்து சாப்பிடுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது

முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

தோல் நோய்களுக்கு

இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக் குளித்தால், சொறி, சிரங்கு குணமாகும். இந்த இலைச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், உடல் பருமனும்  குறையும். 

வயிற்றில் கீரிப் பூச்சிகளுக்கு

சளி, வயிற்றுப் பூச்சித் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்துக் கொடுக்க, வாந்தி வாயிலாகவும், காலைக்கடன் கழிக்கும்போதும் கிருமி, சளி வெளியேறிவிடும்.

மாதவிடாய் வலிகளுக்கு

மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர  வேண்டும். அதேபோல் இலையிலிருந்து ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.

 

கறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.