சிறுநீரை கட்டுப்படுத்த முடியவில்லையா?

 சிறுநீரை கட்டுப்படுத்த முடியவில்லையா? 

 

அத்தி ஆலமரய் போல் உயர்ந்து பரவலாக வளரக்கூடும். அத்திமரத்திலுல் விழுதுகள் விடும். எனினும் நீண்டு வளராது. சித்த மருத்துவத்தில் அத்திமரத்தின் பட்டை, அத்திப்பால் அனைத்துமே பயன்படுத்தப்படுகிறது. 

அத்திப்பழத்தின் பலன்களை இப்போது பலரும் உணர்ந்து அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அத்தி மரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

இதை அப்படியே வாங்கி பொடி செய்து வைத்துகொள்ளலாம். அல்லது பொடியாக வாங்கியும் பயன்படுத்தலாம். இதை எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

 

​புண்களை ஆற்ற :

புண்கள் ஆறுவது தாமதமாகிறது. புண்கள் தீவிரமாகிறது என்பவர்கள் அத்திப்பட்டையை 4 அல்லது 5 எடுத்து கொள்ளவும். புண்களின் தன்மைக்கேற்ப எடுத்து சிறிய மண்சட்டியில் சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போது புண்களின் மீது ஊற்றி கழுவி பிறகு மருந்து போடலாம்.

நீங்கள் இயற்கை மருத்துவத்துக்கு மாற்றாக களிம்புகளை பயன்படுத்தினாலும் இந்த அத்திப்பட்டை நீரில் கழுவிய பிறகு பயன்படுத்தினால் புண்கள் வேகமாக ஆறும்.

 

​சீதபேதி, இரத்தபேதி :

சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது அல்லது வயிற்றுக்கோளாறுகளால் இரத்தபேதி சீதபேதி உண்டாகும். இவர்களுக்கு அத்திப்பட்டை நல்ல பலன் தரும். அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவல்லி பட்டை நான்கையும் சம அளவு எடுத்து பொடித்து வைக்கவும். வெந்நீரை கொதிக்க வைத்து இறக்கி 50மில்லி அளவு எடுத்து அதில் 5 கிராம் பொடி கலந்து வைத்து இளஞ்சூடாக ஆகும் வரை வைத்திருந்து பிறகு குடிக்க வேண்டும்.

இதை குடித்த பிறகு அரை மணி நேரத்துக்கு வேறு எதுவும் குடிக்க கூடாது. தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். இரண்டு நாளில் ஓரளவு சீதபேதி, இரத்த பேதி கட்டுக்குள் வரும். படிப்படியாக கட்டுப்படும். குறையாமல் அதிகரித்தால் மருத்துவரை நாடலாம்.

 

​பெரும்பாடு நோய் :

பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு நோய்களுக்கு அத்திமரப்பட்டை மருத்துவம் நன்றாகவே குணப்படுத்தும். அதிகமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பெண்களும் அத்திமரப்பட்டையை பயன்படுத்தலாம். அத்திமரப்பட்டையை அதாவது அடிமரப்பட்டையை சிறிதளவு எடுத்து அதில் பசுமோர் விட்டு உரலில் இட்டு இடிக்கவும். மோரோடு அத்திமரப்பட்டை சேர்ந்து கலந்து அதன் சாறை எடுத்து குடிக்க வேண்டும்.

தினமும் மாலை நேரத்தில் 30 முதல் 50 மில்லி வரை குடித்து வந்தால் பெரும்பாடு குணமாகும். மேக நோய், புண்களை குணமாகும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்.

 

​சிறுநீரை கட்டுப்படுத்த :

சிலருக்கு சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும். சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு வரும் போதே சிறுநீர் வெளியேறிவிடும். இதைக்கட்டுக்குள் வைக்க அத்திமரப்பட்டை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து நசுக்க வேண்டும். இதை சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். இதை இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போதே அரைடம்ளர் குடிக்க வேண்டும்.

இதை காலையிலும் மாலையிலும் என ஐந்து நாள்கள் தொடர்ந்து குடித்துவந்தால் சிறுநீர் கட்டுப்பாடு இயற்கையாகவே கட்டுப்படும். குறிப்பாக இன்று இளம்பெண்கள் தான் இந்த சிறுநீர் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் இதை முயற்சி செய்யலாம். உபாதை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

 

​சொறி சிரங்குகள் குணமாக :

ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை இந்த நான்கும் நால்பாமரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கஷாயம் சாதாரணமானது அல்ல.இது சொறி, சிரங்கு, புண்ணிலிருந்து வடியும் ரத்தம், சீழ், புண்ணில் இருக்கும் கெட்ட ரத்தம், புண்ணின் உள்ளே இருக்கும் கிருமிகள் வெளியேற வேண்டுமெனில் இந்த பொடியை காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் சொறி சிரங்குகளும் குணமாகும். சீழ்வடிந்த புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கும்.

 

மூலம் :

இரத்தமூலத்துக்கு அத்திமரப்பட்டை சிறந்த மருந்தாகும். இரத்த மூலம் இருக்கும் போது மாமரத்தின் உள்பட்டை, கோவைப்பிஞ்சு, சிறு செருப்படை இவற்றை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து இடிக்கவும். இதனுடன் வாழைப்பூவை சேர்த்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து பிழிந்து வாழைப்பூ சாறை இடித்த பட்டையில் விட்டு மை போல் விழுதாக அரைக்கவும்.

இதை சிறு சுண்டைக்காயளவு உருண்டையாக பிடித்து வெயில் படாமல் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். மலச்சிக்கல் தீவிரமாக இருக்கும் போது இரத்த மூலம் வரும் போது காலை, மாலை ஒரு உருண்டையை மாத்திரை போல் நீரில் சேர்த்து விழுங்கினால் இரத்தமூலம், ஆசனவாய்க்கடுப்பு, இரத்த பேதியும் நிற்கும். அத்திமரப்பட்டை மருத்துவ குணங்கள் மிக்கது. ஆனால் இதை கைவைத்தியமாக எடுத்துகொள்ளும் போது சித்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்.