சமையலுக்கு உகந்த எண்ணெய்கள்

 சமையலுக்கு உகந்த எண்ணெய்கள்:

 

இன்று மலிவு விலையில் பல எண்ணெய்கள் சந்தையில் வந்து குவிந்து கிடக்கின்றன. அவைகள் மலிவு என்பதால் மக்களும் அவற்றை அதிகமாக உபயோகம் செய்து வருகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள கலப்படங்கள் மற்றும் ரசாயனங்கள் உடலுக்கு பெரும் கேடுகளை சத்தமில்லாமல் விளைவித்து வருகிறது.

 

இவற்றில் உள்ள ஒமேகா 6 அமிலமானது உடலில் அதீதமாக சேரும் பொழுது உடலுக்கு அது பல ஒவ்வாமைகளை தோற்றுவிக்கிறது. ஏனெனில் உடலுக்கு தேவையானது ஒமேகா 3 அமிலமே. அத்தோடு கழிவு எண்ணெய்களை கூட சுத்திகரித்து இவற்றோடு கலந்து விடுவதாக அந்த எண்ணெய் ஆலையில் வேலை செய்த ஒரு நண்பர் கூறினார்.

 

இவற்றினால் இதய நோய்கள், நீரிழிவு, உடல் பருமன், ஜீரண உறுப்புகளில் பாதிப்பு, கண் பார்வை சீர் கெட்டு போதல், முடக்குவாதம், ஆஸ்துமா, கர்ப்பப்பை பிரச்சினைகள், மாத விடாய் கோளாறுகள், மனநிலை சீர்கேடு போன்ற பல பிரச்சினைகள் சத்தமில்லாமல் உருவாகும் என ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.

 

சமையலுக்கு உகந்த எண்ணெய்கள் என்றும் நமது பாரம்பரிய எண்ணெய் வகைகளே. அதுவும் செக்கு எண்ணெய்களை ஆட்டும் இடத்திலேயே நேரடியாக பெற முடிந்தால் மிகச் சிறந்தது.

 

நல்லெண்ணெய்...

 உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்க கூடிய ஆற்றல் நிறைந்தது. அதில் உள்ள சேசமோல் இதயத்துக்கு மிக உகந்தது. உயர் இரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும்.  எலும்புகள் பலம் பெறும். தோல் வளம் சிறப்புறும். மலச்சிக்கல், ஜீரண பிரச்சினை போன்றவற்றுக்கு  அரு மருந்து. உடலுக்கு குளிர்ச்சியையும், கண்களுக்கு தெளிவையும் தரும். மலச்சிக்கல், மூலம் உள்ளவர்கள் காலையில் தினமும் வெறும் வயிற்றில் அருந்தி வருவது மிகுந்த பலனை கொடுக்கும்.

 

தேங்காய் எண்ணெய்..

தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுமில்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது. உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும் capric acid மற்றும் lauric acid போன்றன நிறைவாக உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இதயத்தை பாதுகாக்கும். சிறுநீரகத்தில் சேரும் கால்சியம் சத்துக்களை குறைக்கும் வல்லமை கொண்டது.

 

கடலை எண்ணெய்...

உடலுக்கு தேவையான கால்சியம் சத்து நிறைவாக உள்ளது.  இதயத்துக்கு சிறப்பானது. தோல் இளமையை பாதுகாக்கும். கெட்ட கொழுப்பை கரைக்கும். உடலின் எதிர்ப்புசக்தியை மேம்படுத்துவதோடு இதில் வைட்டமின் E சத்தும் நிறைவாக உள்ளது. போலிக் ஆசிட் குறைவாக உள்ளவர்களுக்கு மிகச் சிறப்பான ஒரு எண்ணெய். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இன்னும் நன்மைகள் ஏராளம்.

 

ஆலிவ் எண்ணெய்..

இதில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது. ஆனால் சமையலுக்கு உகந்தது அல்ல. ஏனெனில் வெப்பமூட்டும் பொழுது அதில் உள்ள நன்மைகள் அப்படியே மாறி எதிர்மறையாக வினையாற்றும். கெட்ட கொழுப்பை உண்டு பண்ணும். ஆலிவ் எண்ணெய்யை வெறும் வயிற்றில் பச்சையாக குடிப்பது மூலம் நீரிழிவை கட்டுப்படுத்தலாம். அதே போல் உடலுக்கு தேவையான ஒமேகா 3 அமிலத்தை பெற்றுக் கொள்ளலாம். சாலட் போன்றவற்றில் பச்சையாக ஊற்றி உண்பதே சிறந்தது.

 

சிக்கனத்தை உணவில் காட்டி நல்லவற்றை ஒதுக்கி  விடாதீர்கள். ஏனெனில் தரமற்ற உணவுகளால் வரும் நோய்களுக்கு கொட்டி கொடுக்க வேண்டிய நிலை தோன்றும்.