காது பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

 காது பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

 

காது...

இந்த இரண்டு எழுத்து உறுப்பு ஒலியைக் கேட்பதற்கு மட்டுமல்ல… நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும் கூட மிக அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சுத் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

குழந்தைக்கு காது கேட்கத் தொடங்கினால்தான், அது பேசத் தொடங்கும். இல்லையென்றால் அதற்குப் பேச்சும் வராது. மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு, மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல காரணங்களால் இப்போது காது பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.

 

காதுவலிக்குக் காரணம்!

காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும். மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால் கூட காதுவலி வருகிறது. தொண்டையில் சளி பிடித்து புண்  உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியை வரவேற்கும். காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகும்.

 

காதில் சீழ் வடிந்தால்?

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான். இதன் துவக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். இப்போதாவது இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கின்ற `ஈஸ்டாக்கியன் குழல்’ (Eustachian tube)  வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும். பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக் கொண்டு வெளிக்காது வழியாக சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்பநிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். காலம் கடத்தினால், ‘டிம்பனாஸ்டமி’ (Tympanostomy) எனும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.