சியாட்டிகா என்றால் என்ன, சியாட்டிகா அறிகுறிகள்

 கால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை...

 

“சியாட்டிக்கா” (Sciatica)... கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்சினை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது... தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, குதிங்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

“சியாட்டிக்கா” என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது, சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அண்மைக்காலமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பிரச்சினைக்கு ஆளாவது அதிகமாகியிருக்கிறது. கால் மரத்துப்போவது இதன் மிக முக்கியமான அறிகுறி. இந்தப் பிரச்சினை இருப்பதை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம். பிரச்சினையின் வீரியத்தைப் பொறுத்து, சிகிச்சை முறைகளும் மாறும்.

 

சியாட்டிக்கா வருவதற்கான காரணங்கள்...

* முதுகெலும்பின் அசையும் மூட்டுகளில் வீக்கம் உண்டாவது.

* எலும்புகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வு விலகி பாதிப்படைவது.

* கருவுற்றிருக்கும் பெண்களின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது.

* வயது முதிர்வு காரணமாக ஏற்படும் டிஸ்க் ஸ்பாண்டிலோஸிஸ் (Disc spondylosis).

* எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்கள்.

* தசைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்கள்

இந்தப் பிரச்சினைகளில் ஏதோ ஒன்று ஒருவருக்கு ஏற்படும்போது தண்டுவடத்தை ஊடுருவும் நரம்புகள் அழுத்தம் பெற்று சுருங்கத் தொடங்கும். இரத்த ஓட்டம் பாதிப்படையும். இதனால், நரம்பு வலுவிழந்து, தன் வேலையைச் செய்ய முடியாமல் திணறும். நாளாக ஆக, இந்த நரம்பில் வலி எடுக்கத் தொடங்கும்.

 

சியாட்டிக்கா ஏற்படுத்தும் வலி...

* ஏதோவொரு காலின் பின்பகுதியில் வலி, எரிச்சல் உணர்வு ஏற்படும். சில நேரங்களில், இரண்டு கால்களிலும் வலி ஏற்படலாம்.

*எழுந்திருப்பதற்கும் அமர்வதற்கும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். நிற்கும் நேரத்தைவிட, உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வலி அதிகமாக இருக்கும்.

* ஆரம்ப நாள்களில், முதுகின் கீழ்ப் பகுதியில் வலி எடுக்கும். பலரும் இதனைச் செரிமானக் கோளாறு எனவும், வாயுப் பிரச்னை எனவும் நினைத்துக் கடந்துவிடுவார்கள். இந்தப் பிரச்சினை தொடர்ந்தால், காலில் வலி அதிகமாக ஆரம்பிக்கும். நரம்பை இழுப்பது போன்ற உணர்வு மேலிருந்து கீழ்வரை இருக்கும். அப்போதும் கவனிக்காமல் விட்டுவிட்டால், தொடைப்பகுதி மரத்துப்போகும். பிரச்சினை மோசமான நிலையை அடைந்து விட்டதற்கான அறிகுறிதான் இது. இவையெல்லாம் ஏதாவது ஒரு காலில்தான் ஏற்படும். சிலருக்கு, இரண்டு காலிலும் ஏற்படலாம்.

* முதுகு எலும்பு முடியும் இடத்திலும், கால்களின் பின்புறத்திலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.

 

சிகிச்சைகள்...

பல காரணங்களால் இந்தப் பிரச்சினை ஏற்படும் என்பதால், எம்.ஆர்.ஐ மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்வார்கள். அப்போதுதான் உடலில் என்ன பிரச்சினையால் இது ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியலாம். பெரும்பாலும் ஃபிஸியோதெரபிதான் இதற்கான சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தீர்க்க முடியாத, குணப்படுத்த முடியாத பிரச்சினையாக இது உருவெடுக்காது. உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்வது, கைவைத்தியம் தான் சில நேரங்களில் கைகொடுக்கும்.

உதாரணமாக, ஒத்தடம் தருவது, தேவையான அளவுக்கு ஓய்வு எடுப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது முதலியவை இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும், வலி குறைய வேண்டும் என்பதற்காக வெந்நீர் ஊற்றுவது, அதிகச் சூட்டில் ஒத்தடம் கொடுப்பது போன்ற சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது. வெகுநேரம் நின்றுக்கொண்டே வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கும். அவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால், இந்தப் பிரச்சினையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம் பெறலாம்.