தூக்கத்தின் பொழுது உடலில் நடக்கும் மாற்றங்கள்....

தூக்கத்தின் பொழுது உடலில் நடக்கும் மாற்றங்கள்....

தூக்கம் அவசியம்...

பொதுவாக உடலானது தூக்கத்தின் பொழுதே புதுப்பிக்கப்படுகின்றது. அதாவது உடலுக்கு சக்தி மீளப் பெறப்பட வேண்டுமென்றால் முறையான தூக்கம் மிக அவசியம். 

ஓய்வே இயக்க சக்தி 

உயிரற்ற வாகனங்களுக்கும், இயந்திர சாதனங்களுக்கும் கூட ஓய்வு கொடுத்தால் தான் மீண்டும் அவை சீராக இயங்கும். அதை விட மேலானது மனித உடல்.

கழிவுகள் நீக்கத்திற்கு தூக்கம் அவசியம் 

தூக்கத்தின் பொழுதே மூளையானது புதிய நினைவுகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை செய்கிறது. அத்துடன் மூளையானது அந்தந்த நாளில் தன்னில் சேர்ந்து விட்ட கழிவுகளை களைந்து, தன்னை தானே சுத்தம் செய்யும் வேலையையும் கூட நம் தூக்கத்தின் பொழுதே செய்கிறது. இதனால் தான் எத்தனை கவலையோடு நாம் படுக்க சென்றாலும் விடியும் பொழுது அந்த கவலையின் பாதிப்பு நமக்கு இருப்பதில்லை.

நோய் எதிர்ப்பு சக்திக்கு மெலடோனின்

மெலடோனின் (MELATONIN) ஹார்மோன் இரவு நேர இருட்டின் பொழுது நமது மூளையில் இருந்து சுரக்கும். இதுவே நம்மை உறக்கத்துக்கு தயார் பண்ணுகின்றது. அது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தி, உயர் ரத்த அழுத்தம், பார்வைத்திறன், தோல் வளமை, உடல் வெப்பநிலை போன்றவற்றுக்கும் மெலடோனின் ஹோர்மோன் மிக அவசியமாகிறது.

வளரும் குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் அவசியம் 

இரவு உறக்கத்தின் பொழுது தான் GROWTH HORMONE நமது உடலில் சுரக்கும். இதுவே உடலின் வளர்ச்சிக்கும், உடல் களங்களை புதிப்பித்தலுக்கும் காரணமாக அமைகின்றது. இதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு உறக்கம் இன்றி அமையாததாக அமைகிறது.

காயங்களை ஆற்ற, உடலைப் புதுப்பிக்க

இதே போல் இரவு உறக்கத்தின் பொழுதே நமது எதிர்ப்புசக்தி மண்டலம் CYTOKINES எனும் புரோடீனை உற்பத்தி செய்கிறது. இதுவே நமது உடலின் நோய் பாதிப்புக்களை குணமாக்குகிறது. நமது உடலில் உண்டாகும் காயங்கள் எல்லாம் விடியும் பொழுது ஆறி விட்டிருப்பதை காண்கிறோம். அதே போல் நோயின் வீரியம் குறைந்திருப்பதையும் காண்கிறோம். அதற்கு காரணம் நம் எதிர்ப்புசக்தி மண்டலத்தின் இரவு நேர பணியாகும்.

நல்ல செரிமானத்திற்கு தூக்கம் அவசியம்

சீரான தூக்கம் நமது உணவு தொகுதியின் சீரான செயல்பாடுகளுக்கு மிக இன்றியமையாததாகும். இரவு நேரத்திலேயே குடலின் தொழில்பாடு மிக அதிகமாக இருக்கும். இரவு தூக்கம் சீராக இல்லாது போகுமிடத்து அதன் செயல்பாடு தவிர்க்கப்பட்டு நெஞ்செரிவு, உணவு எதுக்களித்தல், உணவு செரிக்காமை போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.

நரம்பு மண்டலம் நன்கு செயல்பட தூக்கம் அவசியம் 

இரவு தூக்கத்தின் பொழுதே நரம்பு மண்டலம் முழுதுமாக ஓய்வுக்கு வருகிறது. இதன் பொழுது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் சீராகும்.

அதே போல் விடிய காலை நேரத்தில் தான் நமக்கு ஆன்டி இன்சுலின் ஹோர்மோன் (anti-insulin hormone) சுரக்கும். இது நமது விடியும் பொழுதை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்காக உடல் செய்யும் முன்னேற்பாடாகும். சாதாரணமான ஒருவரை விட நீரிழிவு நோயாளர்களுக்கு காலை நேரத்தில் சீனியின் அளவு அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

ஆகவே உடலின் அற்புதமான கட்டமைப்பை புரிந்து கொண்டு இரவு தூக்கத்தை தவிர்க்காது அதற்கு ஒத்துழைத்தால் நாம் நோயற்ற வாழ்வை பெறுவோம்.
வாழ்க வளமுடன்!