குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பது சரியா? தவறா?

0-2 மாத குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் தரக்கூடாது…

   👉 பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது?

அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள்...

பசும்பால் சிறிய குழந்தைகளுக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 

👉 ஒரு வயது முடியாத குழந்தைகளால் பசும்பாலை செரிமானம் செய்ய முடியாது. 

👉புரோட்டீனும் தாதுக்களும் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் தன்மை இருக்காது. இதனால் சிறுநீரக பாதிப்புகள் வரலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு பிரச்னையும் கூட வரக்கூடும். 

👉பசும்பாலில் உள்ள அதிக அளவு புரோட்டீன் மற்றும் தாதுக்கள், குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு ஓவர் லோட் வேலையாக மாறும். 

👉பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து, விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால், குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும், விட்டமின் சி, இ, காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம். 

👉பசும்பாலில் உள்ள புரோட்டீன், குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். சில குழந்தைகளுக்கு, மலத்தில் ரத்தம் வெளியேறும் அபாயம்கூட நேரலாம். வளரும் குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேராமல் போகலாம். 

👉பசும்பாலில் உள்ள விலங்கின புரோட்டீன், சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றது அல்ல. 6-12 மாத குழந்தைகளுக்கு, அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இச்சத்து உடலில் சேராமல் தடை ஏற்படும். குழந்தைக்கு நீங்கள் அன்றாடம் தரும் காய்கறி மற்றும் பழப்பூரி, அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள், கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை ஆகியவை வரலாம்.

எப்போது பசும்பால் தரலாம்?

ஒரு வயதுக்கு மேல், பசும்பால் கொடுக்கலாம். கால்சியம், புரதம், விட்டமின் டி ஆகியவை இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும்.

பசும்பால் கொடுக்க தொடங்கிய பின் தாய்ப்பால் கொடுக்கலாமா?

நிச்சயம் கொடுக்கலாம். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பது நல்லது. ஒரு குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் தாராளமாகக் கொடுக்கலாம். தாய்ப்பாலில் DHA கிடைக்கும். தாய்ப்பால் தர முடியாதவர்கள், DHA உள்ள ஃபார்முலா மில்க் கொடுக்கலாம். இதை மருத்துவர் பரிந்துரைப்பின் படி கொடுப்பது நல்லது. DHA சப்ளிமென்ட் கொடுக்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குழந்தைக்கு தரலாம்?

ஒரு நாளைக்கு 1- 1 ½ கப் அளவுக்கு பசும்பால் கொடுக்கலாம். யோகர்ட், தயிர், மோர் போன்றவையும் கொடுக்கலாம். பசும்பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மோர், யோகர்ட், தயிர், சீஸ் கொடுத்துப் பாருங்கள். ஒரு குழந்தைக்கு 3-4 கப் அளவுக்கு பசும்பால் தரக்கூடாது.

குழந்தைக்கு கொழுப்பு இல்லாத பால் கொடுக்க வேண்டுமா?

1-3 வயது குழந்தைகளுக்கு கொழுப்பு நிறைந்த பால் தரலாம். 4 வயதுக்கு மேல், கொழுப்பு நீக்கப்படாத பால் தரலாமா எனத் தங்களின் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். ஏனெனில், சர்க்கரை நோய், உடல்பருமன் ஆகியவை மரபியல் வழியாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வது நல்லது.

பசும்பால் குடிக்காத குழந்தைகளுக்கான தீர்வு…

சில குழந்தைகளுக்கு பசும்பாலின் சுவை பிடிக்காமல் போகலாம். பசும்பால், ஃபார்முலா மில்க், தாய்ப்பால் ஆகியவை கலந்து கொடுக்கலாம். எல்லாம் கால் கப் என்ற அளவு வைத்துக் கலந்து கொடுத்துப் பாருங்கள். பாலாக குடிக்கவில்லை என்றால் பால், அவல் சேர்த்த பாயாசம் செய்து தரலாம். யோகர்ட், சீஸ், மில்க் ஷேக் போன்ற முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பால் சேர்த்த இனிப்பு ரெசிபிகளை செய்து கொடுக்கலாம். குழந்தைநல மருத்துவரிடம் சொல்லி குழந்தைக்கு தேவையான கால்சியம் சப்ளிமென்ட்களை பரிந்துரைக்க சொல்லி பயன்படுத்தலாம். பாதாம் பால் கொடுக்கலாம். எள்ளு பாலும் நல்லது.

ஆர்கானிக் பசும்பால் நல்லதா?

ஆர்கானிக் பால் அதிக விலை இருக்கும். உங்களால் வாங்கி கொடுக்க முடிந்தால் பயன்படுத்துங்கள். ஆர்கானிக் பால் வாங்க முடியாதவர்கள், சாதாரண பாக்கெட் பாலை நன்கு காய்ச்சிக் கொடுக்கலாம்.

பால் அலர்ஜி குழந்தைக்கு இருக்குமா?

ஒரு வயது வரை தாயிடம் நன்கு தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளுக்கு பால் அலர்ஜி பெரும்பாலும் வராது. பாலை முதல் முதலாகக் கொடுக்கும்போது, கால் டம்ளர் அளவுக் கொடுத்துப் பாருங்கள். 
3 நாளைக்கு கால் டம்ளர் மட்டுமே கொடுத்துப் பார்த்து, அலர்ஜி ஏற்படவில்லை என்றால் நீங்கள் பசும்பால் தரலாம். முதல் நாள் அன்று, கால் டம்ளர் பசும்பால் கொடுத்த போதே, அலர்ஜி ஏற்பட்டால் பசும் பாலை கொடுக்க வேண்டாம்.

பால் ஒத்துக்கொள்ளாத குழந்தைக்கு என்னென்ன அலர்ஜி வரலாம்?

அரிப்பு முகம், கன்னத்தில் சிவந்து போதல் வயிற்றுப்போக்கு வாந்தி வீக்கம் எரிச்சல் உணர்வு மூச்சுத்திணறல் இருமல் வீசிங் போன்றவை ஏற்படலாம்.

பசும்பால் மலச்சிக்கலை ஏற்படுத்துமா?

பசும்பால் கொடுக்க தொடங்கிய பின், குழந்தையின் மலம் கழிக்கும் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள் வரலாம். குழந்தையின் மலம் சற்று திக்காக இருக்கலாம். மலம் கழிக்க கொஞ்சம் சிரமப்படலாம். பாலாக ஒரு டம்ளர் அளவுக்குக் கொடுத்து விட்டு, யோகர்ட், தயிர், மில்க் ஷேக், சீஸாக கொடுப்பது நல்லது.