குழந்தைகளின் ஞாபக சக்திக்கு இய‌ற்கை வைத்தியம்...

குழந்தைகளின் ஞாபக சக்திக்கு இய‌ற்கை வைத்தியம்...

இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக மாற வேண்டும் என்று நினைக்கின்றனர்.  இதனால் பிறந்து ஒரு வருடம் முடிந்தவுடனே குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கின்றனர்.  ஓடி விளையாட வேண்டிய வயதில் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை மட்டுமே கொடுக்கும் வேலையைத்தான் தற்போது செய்கின்றனர் பெற்றோர்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மைதானத்தில் விளையாட்டு என்பது தற்போது இல்லாமலே போய்விட்டது.  வீடியோகேம், கம்ப்யூட்டர் கேம் தான் விளையாட்டு.

ஆனால் இவை உடலுக்கு பயிற்சி கொடுப்பது இல்லை. போதாக்குறைக்கு மனதிற்கு மேலும அழுத்தத்தைக் கொடுப்பதாகத் தான் இருக்கின்றன.

ஆடி, ஓடி விளையாடினால் தான் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும்.

இதனால்தான் பழங்காலத்தில் குழந்தைகளை ஆடி ஓடி விளையாட முன்னோர்கள் அனுமதித்தனர்.

ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பெரும்பாலும் விளையாடவே அனுமதிப்பதில்லை.  பள்ளியில் முதல் மார்க் வாங்கவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகளுக்கு அதிக பாடச் சுமைகளைக் கொடுக்கிறார்கள்.

இத்தகைய காரணங்களால் குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து மனமும் சோர்ந்து காணப்படுவார்கள்.  இந்நிலையில் குழந்தைகளுக்கு ஞாபக மறதி உண்டாகிறது.  இத்தகைய மறதிக்கு, உளவியல் காரணத்தோடு, இரும்புச்சத்து பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.  குழந்தைகளுக்கு ஏற்படும் இக்குறையைப் போக்க ஒரு எளிய மருத்துவம்.. 

இதற்கு

வல்லாரைக்கீரை    - 1 கைப்பிடி
ஆரைக்கீரை        - 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
மிளகு        - 5
சின்ன வெங்காயம்    - 5
பூண்டுப்பல்        - 2

இவற்றை எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும்.  இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும்.

வல்லாரை சூரணம்

மேலும், வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்துவந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும். இதனால் குழந்தைகள் ஆடி, ஓடி விளையாட முடியும்.  அசதி பறந்தோடிவிடும்.

சரஸ்வதி மூலிகை கலவை
 
வல்லாரைப் பொடி 200 மி.கி. அளவோடு, வசம்பு  200 மி.கி. (பெயர் சொல்லாதது), வெந்தயப் பொடி-500mg, அரிசித் திப்பிலி-500mg, மஞ்சள் தூள்-500m (கொம்பு மஞ்சள்) சேர்த்து சம அளவு எடுத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும். நல்ல நினைவாற்றல் வளரும், மூளைத்திறன் அதிகரிக்கும். மூளை நரம்பு பிரச்சினைகளும் சரியாகும்.