இளநரைக்கு மூலிகை எண்ணெய்...

இளநரைக்கு மூலிகை எண்ணெய்...

இன்றைய நவீன காலத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. 

ஆனால் நம் முன்னோர்கள் எல்லாம் 60 வயதுக்கு மேலும் கூட தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். 

அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே காரணம். இன்றைய உணவு முறையில் நாக்கின் சுவைக்காக மட்டுமே ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை ருசிக்காக மட்டுமே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு கலப்பட எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதாலும் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டு பண்ணுகிறது.

இத்தகைய பிரச்சினையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளையும், மீன் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.

பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட கலப்பட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாரம் ஒருமுறை ஆண், பெண் இருபாலரும்  கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் நல்ல தரமான தேங்காய்  எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. கலப்படமில்லாத சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கொத்தமல்லலி - சிறிதளவு
நெல்லி வற்றல் - 10 கிராம்
வெட்டிவேர் - 5 கிராம்

மேற்கண்டவற்றை……
ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

* நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள். இதனுடன் 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்து வந்தால் இளநரை நெருங்காது.

* இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழம், ஆம்லா எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

* நெல்லிக்காய், கறிவேப்பிலை, பிஞ்சு கடுக்காய் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து இடித்துக்கொள்ளுங்கள். இவை மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயை லேசாகச் சூடு செய்து, தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். இளநரையும் இருந்த இடம் தெரியாது. முடியும் கறுப்பாகும்.

* நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்), கறிவேப்பிலை, வேப்பங்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பு, பிஞ்சு கடுக்காய், அவுரி விதை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து நைசாகப் பொடிக்கவும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெய்யிலில் வைத்து எடுக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவி வந்தால், இளநரை மறைந்து, கருகருப்பாக முடி வளரும்.

* முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.