மருதமரம் ஒரு மருத்துவ மரம்...

மருத மரத்தின் அற்புதங்கள் தெரியுமா?

உயரிய மூலிகை மருத்துவ குணங்களால், திருமருது என சங்ககாலத்தில் போற்றப்பட்ட மருத மரம், மனிதர்க்கு உடற்பிணி தீர்க்கும் அருமருந்தாக, சித்த மருத்துவத்தில் பயன் தருகிறது.

ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்ட செழிப்பான மரமான மருத மரத்தில் உள்ள பல வகைகளில், பெரும்பாலான மரங்கள் மனிதருக்கு நன்மை தருவனவாகவும், சிலவகை மரங்கள் வீடுகளுக்கு வாசல் நிலைக்கதவுகள், ஜன்னல் கதவுகள் செய்யவும் உதவுகின்றன. ஆயினும் தற்காலத்தில் வெகு அரிதாகவே, சில இடங்களில் மட்டும் காணப்படுகின்றன.

சிவந்த நிற மலர்களையும், வழவழப்பான பட்டைகளையும் கொண்ட, சிவந்த நிறமுடைய மருத மரத்தின் செழுமையான நிழலில் இளைப்பாற, உடல் அசதி மற்றும் நோய்கள் அகன்று, உடலில் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.

தமிழகத்தில் உள்ள கோயமுத்தூர் மாநகர் அருகே, மருதமரங்கள் நிறைந்து சோலைவனமாகத் திகழ்ந்த, தமிழ்க்கடவுள் முருகன் குடியிருக்கும் மலையே, மருதமலை என இன்றும் அழைக்கப்படுகிறது.

வைகை ஆற்றின் கரையோரம் மிக அதிக அளவில் காணப்பட்டதால், மருதத்துரை எனும் பெயரில் அழைக்கப்பட்ட அந்நாள் நகரமே, இன்று மருவி, மதுரை என வழங்கப்படுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்த மருதமரமே, மனிதர் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருத்துவ மரமாக, உடல் வியாதிகளைப் போக்கும் அருமருந்தாகப் பயன் தருகிறது.
   
உடலில் உள்ள வெடிப்புகள் மறையும் :
மருத மரத்தின் இலைகளை விழுதாக அரைத்து, தினமும் காலை வேளைகளில் ஒரு நெல்லிக்காயளவு சாப்பிட்டுவர, உடலில், பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் யாவும் மறையும்.
 
துவர்ப்பு தன்மை மிக்க மருதமரத்தின் பட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துமிக்க டானிக், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள காரணத்தால், மருதம் பட்டைகளே, அதிக அளவில் மூலிகை மருந்தாக, பயன்படுகின்றன.

இதய நோய்கள் ;

இதயம் தொடர்பான வியாதிகளுக்கு மருதம்பட்டை சிறந்த தீர்வாகிறது,  நன்கு பொடியாக்கிய மருதம் பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, குடிநீராக பருகிவர, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, இதய வியாதிகளை போக்குகிறது.
இன்று வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் பாதித்து, சமயங்களில் உயிரையும் பறித்துவிடும் கொடிய வியாதியாக, மாரடைப்பு காணப்படுகிறது.

உடலின் இரத்த நாளங்களில், உணவு நச்சுக்களால் ஏற்பட்ட கொழுப்புகள் சேர்ந்து, அவற்றால் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் இரத்தம் சுத்திகரிக்கும் தன்மை பாதிப்படைகிறது. இத்தகைய அடைப்பை சரிசெய்யும் வல்லமை, மருதம் பட்டைக்கு உண்டு, இதயத்தை இந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்து, இதய இயக்கத்தை சீர்செய்யும் ஆற்றல் வெண் தாமரை மலருக்கு உள்ளது.
மருதம் பட்டை பொடி, வெண் தாமரை பொடி இரண்டையும் கலந்து தினமும் இருவேளை நீரில் கலந்தோ அல்லது பாலில் கலந்தோ தொடர்ந்து பருகிவர, இரத்த நாள அடைப்புகள் நீங்கி, இதயம் வலுவடைந்து, இரத்த ஓட்டம் சீராகும், இதுவரை அச்சுறுத்திய மாரடைப்பு பாதிப்புகள் நீங்கி, உடல் நலமுடன் வாழலாம்.

இந்த மருதம் பட்டை வெண் தாமரை பொடிக்கலவையை டீனேஜ் எனப்படும் வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும், சில காலம் தொடர்ந்து சாப்பிட்டுவர, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை அவர்கள் தவிர்த்து விடலாம். அதோடு மட்டுமல்லாமல், இதய பாதிப்புகளை, இரத்த நாள அடைப்புகளை சரி செய்ய, ஆஞ்சியோ உள்ளிட்ட எந்தவித அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய தேவை ஏற்படாமல், உடல் நலனை இயற்கை வழியிலேயே காத்து வரலாம்.

ஆயினும், இள வயதினர், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் அதிக கொழுப்பு சேர்ந்த துரித உணவு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அவசியம் தவிர்க்கவேண்டும்.
உணவில் காய்கறி, பழங்கள், கீரை, பூண்டு வகைகள் மற்றும் ஆவியில் வேகவைத்த உணவுகளான இடியாப்பம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டுவர, உடல் நலமாகி, வளமுடன் வாழலாம்.

நுரையீரல் :
மருதம் பட்டை பொடியுடன், ஆடாதோடை இலைச்சாறு சிறிது சேர்த்து, ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர, நுரையீரலில், உடலின் முக்கிய உறுப்புகளில் ஏற்படும் உள் இரணங்கள் ஆறிவிடும்.

மருதம் பட்டை கரிசலாங்கண்ணி பொடிகளை தேனில் ஊறவைத்து உட்கொள்ள, கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் சரியாகும். மேலும் குடல் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் முதன்மையான மூலிகை மருத்துவ தீர்வாக, மருதம் பட்டை அமைகிறது.

 மருதம் பட்டையுடன் ஒவ்வொன்றும் பாதி அளவில் மஞ்சள், சீரகம், மற்றும் சோம்பு சேர்த்து, நன்கு பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் காய்ச்சி பருகிவர, இரத்த அழுத்த பாதிப்புகள் குணமாகும்.

மாதவிடாய் பாதிப்புகள் :
மன அழுத்தத்தால் அல்லது வியாதிகளின் பாதிப்பால், சரியான தூக்கமின்றி மனச் சோர்வு, மனப்பதட்டம் இவற்றால் அவதிப்படுவோர், மருதம் பட்டை பொடியுடன் சிறிது வறுத்த கசகசாவை சேர்த்து அரைத்து, பாலில் சேர்த்து பருகிவர, தீராத துன்பங்கள் தந்து வந்த மன பாதிப்புகள் யாவும் விலகி, நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், மனமும் இலகுவாகி, புத்துணர்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு அதிக அளவில் இன்னல்கள் தரும் மாதவிடாய் பாதிப்புகள், உதிரப்போக்கு, ஹார்மோன் பாதிப்புகள் இவையாவும் நீங்கிட, மருதம் பட்டை மற்றும் சீரகத்தை ஒன்றுக்கு கால் பங்கு என்ற விகிதத்தில், நீரிலிட்டு கொதிக்க வைத்து பருகிவர, தொல்லைகள் தந்த இன்னல்கள் நீங்கி, உடல் நலமடையலாம்.

மருதம் பட்டை, வில்வம் மற்றும் துளசி இந்த மூலிகைகளை பொடியாக்கிக் கொண்டு, தினமும் இருவேளை, நீரில் நன்கு கொதிக்க வைத்து பருகிவர, மனதில் உண்டாகும் இனம் புரியாத அச்சங்கள், காரணம் இல்லாமல் வரும் கோபங்கள், மனப் பதட்டங்கள், இந்த மன பாதிப்புகளால் இரவில் தூக்கமில்லாமல் சிரமப்படுவது போன்ற, அனைத்து மன பாதிப்புகளும் முற்றிலும் நீங்கி, உடலும் மனமும் நலமாகி, நல்ல வளத்துடன் வாழலாம்.
பெண்கள், தனியாக மருதம் பட்டை பொடியை காய்ச்சி, குடிநீராக பருகிவந்தாலும், மேற்படி பலன்கள் கிடைக்கும். மேலும் இதுவே, இதய பாதிப்புகளை சரியாக்கி, கொழுப்புகள் அதிகம் சேர்ந்த இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, மனக் குறைபாடுகளை போக்கி, நல்ல உறக்கத்தையும் வரவழைக்கிறது.

உடல் நலம் தேறி, புத்துணர்ச்சி பெற, மருதம் பட்டை குடிநீர்

மருதம் பட்டைகளை, தினமும் இரவில் குடிக்கும் நீரிலிட்டு, மறுநாள் முழுவதும் பருகிவர, இரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, இதய குறைபாடு, உள் உறுப்புகள் பாதிப்பு மற்றும் தூக்கமின்மை குறைபாடுகள் போன்றவை விலகி, மருதம் பட்டையின் வியாதி எதிர்ப்பு தன்மைகளால், உடலும் மனமும் புத்துணர்வாகி, உடல் நலம் சீராகும். இந்தக் குடிநீரை தொடர்ந்து ஒரு மண்டலம், 48 நாட்கள் பருகிவர, பூரண குணமடையலாம்.