உடலுக்கு நார்ச்சத்து அவசியமா?

உடலுக்கு நார்ச்சத்து அவசியமா?

நார்ச்சத்துகள் நம் ஆரோக்கியத்துக்கு எந்த அளவிற்கு அவசியமானது என்பது நமக்குத் தெரிந்தது தான். இப்போது அந்த கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன், ஜர்னல் ஆஃப் யூராலஜி உள்பட பல்வேறு மருத்துவ இதழ்களில் நார்ச்சத்து தொடர்பான ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

வழக்கத்தைவிட 10 சதவிகிதம் கூடுதலாக நார்ச்சத்து எடுத்துக் கொண்டால் மரணத்தையே கூட மேலும் பல ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட முடியும் என்பது உள்பட ஆச்சரியமான காரணங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன! 

தினசரி வாழ்வில் 25 கிராம் அளவாவது நார்ச்சத்துகள் நம் உடலுக்கு வேண்டும் என்பதற்காக கீழே 7 ஆய்வுகளின் முடிவுகள் பட்டியல் இடப்பட்டிருக்கிறது.

மூளை:

தினமும் 7 கிராம் அளவு நார்ச்சத்து எடுத்துக்கொள்கிறவர்களுக்கு பக்கவாதம் வருகிற வாய்ப்பு 7 சதவிகிதம் குறைவு.

இதயம்:

தினமும் 7 சதவிகிதம் நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் இதயநோய்கள் வருகின்ற அபாயமும் 9 சதவிகிதம் குறைகிறது. கெட்ட கொலஸ்ட்ராலின் வீரியத்தைக் குறைக்கும் ஆற்றல் நார்ச்சத்துக்கு உண்டு என்பதே இதற்கு காரணம்.

வயிற்றுப் பகுதியின் சதைகள் குறைவதற்கு…

தினமும் 30 கிராம் அல்லது அதற்கும் மேல் நார்ச்சத்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கு வயிற்றுப் பகுதியின் சதைகள் பெரும் அளவு குறைகிறது. டயட் என்ற பெயரில் கலோரி அளவுகளைக் குறைத்துக் கஷ்டப்படுத்திக் கொள்ளும் முறையை விட இது மிகவும் எளிதானது.

சிறுநீரகங்கள்:

தினமும் 21 கிராம் நார்ச்சத்து எடுத்துக் கொள்கிறவர்கள், சிறுநீரகக் கற்கள் வருகிற பிரச்சினையில் இருந்து 22 சதவிகிதம் தப்பிக்கிறார்கள்.

நுரையீரல்:

COPD என்கிற க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் என்ற நுரையீரல் நோயை நார்ச்சத்துகள் தடுக்கின்றன. க்ரானிக் ப்ராங்கைட்டிஸ் மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் வல்லமையும் நார்ச்சத்துகளுக்கு உண்டு.

குடல் பகுதிகள்:

செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை குடல் பகுதியில் தக்க வைக்க நார்ச்சத்து அவசியம்.

சர்க்கரை அளவு:

சர்க்கரை அளவை உடல் கிரகித்துக் கொள்ளும் வேகத்தை நார்ச்சத்துகள் குறைப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதையும், நீரிழிவு நோய் வராமலும் தடுக்கிறது.