மருதாணியின் மகத்துவம்

மருதாணி முகம் மற்றும் சருமப்பொலிவுகளை மெருகேற்றி தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் :

மருதாணி போடும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. நம்முடைய முன்னோர் இதன் மருத்துவ பலன் அறிந்து இதை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இன்று வரை விழாக் காலங்கள் மற்றும் திருமண நாட்களில் பெரும்பாலும் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் (கிராமப்புறங்களில்) பெரும்பாலும் மருதாணியை (மெஹந்தி) தனது கைகளில் இட்டுக் கொள்வது வழக்கமாக உள்ளது.

 தாவரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருப்பது போன்று மருதாணிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதனை கூலன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அதாவது, உடல் சூட்டை தணிக்கும் திறன் மருதாணிக்கு உள்ளது. வெயில் காலங்களில் அடிக்கடி இதனைப் பயன்படுத்துவதால் உடல் சூட்டை குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை அளிக்கும். மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால் வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியில் பற்றுப் போட்டுக் கொண்டால் தலைவலி உடனே நீங்கும்.

நகத்தில் உள்ள கண்ணுக்கு தெரியாத நச்சு கிருமிகளை அழிக்க வல்லது. மேலும் நகம் சொத்தையாகாமல் தடுக்கிறது. தோல் நோய், அரிப்பு, படை போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் காக்கும். இளம் வயதிலேயே ஏற்படும் நரையினை போக்குவதில் சிறந்த மருந்தாகும்.
மருதாணியை பேக் போல தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். முடியின் நுனியில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். மருதாணி குளிர்ச்சி என்பதால், சிலருக்கு சீக்கிரம் சளி பிடிக்கும். அதற்கு அவர்கள் நான்கு லவங்கத்தை இலையோடு அரைத்து கையில் இட்டுக் கொண்டால் சளிப் பிடிக்காது.

மருதாணி இலைகளை மைய அரைத்து அடை போல தட்டி நிழலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாட்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வந்தால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி
அடையும். நல்ல தூக்கம் வரும். ஆறு தேக்கரண்டி அளவு புதிதாக அரைத்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளையில் 10 நாட்கள் வரை குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிது சேர்த்து கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால், தலைமுடி பளபளப்பாக இருக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முடி கொட்டுவது குறையும்.மருதாணியை திக்காக அரைத்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து முடியில் தடவி வந்தால் முடி பளபளப்பாகும். மருதாணியுடன் செம்பருத்தி இலை சேர்த்து அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் பேக் போல போட்டு காய்ந்ததும் குளித்தால் முடி கருப்பாக இருக்கும்.

நரை பிரச்சனை இருந்தால் அதற்கான சிறப்பு பேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
மருதாணி இலை பொடி இரண்டு கப் (காயவைத்து பொடித்துக் கொள்ளவும்), டீ டிகாஷன் தேவையான அளவு, எலுமிச்சை சாறு 1 பழம், முட்டையின் வெள்ளை கரு 1, காபி பொடி 2 ேமசைக்கரண்டி, பீட்ரூட் சாறு 1 கப். ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி இலை பொடியுடன், டீ டிகாஷன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும்/. அதில் காபி பவுடர் சேர்த்து ஒரு நாள் அரவு முழுக்க ஊறவைக்கவும். மறுநாள் முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

தற்போது கடைகளில் கிடைக்கும் மெஹந்திகளில் சிவப்பதற்காக கெமிக்கல்ஸ் அதிகமாக கலக்கப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் மட்டுமே இதன் பலன்களை அனுபவிக்க முடியும். அதனால் கடைகளில் கிடைக்கும் மெஹந்தி பாக்கெட்டுகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கைகளில் தோல் உரிய காரணம் இந்த ரசாயன ஒவ்வாமை தான். அதனால் முடிந்த வரை பாக்கெட் மருதாணியை தவிர்த்து இயற்கை முறையில் விளையும் மருதாணியை பயன்படுத்துவது நல்லது.