மருதம்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்...

மருதம்பட்டை பொடியின் அற்புத மருத்துவ குணங்கள் :

மருதம்பட்டை கிருமி நாசினியாக செயல்படும் பண்பு கொண்டது. இது ஒரு ஆன்டி ஆக்சிடென்ட். ஒவ்வாமைக்கு எதிராக செயல்படக்கூடியது. மருதம்பட்டையை நாட்டு மருந்து கடைகளிலும், மூலிகை மருந்துகளை விற்பனை செய்யும் இடங்களிலும் கிடைக்கும். அதனை வாங்கி பொடி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மருதம் பட்டை பொடி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெரிகோஸ் வெயின் :

கால்களின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நரம்புகள் புடைத்துக்கொண்டு அவதிப்படுவோர், மருதம் பட்டை பொடியை கொண்டு டிகாஷன் தயாரித்து, அதை வெரிகோஸ் வெயின் பாதிப்பு உள்ள கால்களில் மீது ஊற்றி ஊறவிட்டு, கால்களை நன்கு பிடித்து மசாஜ் செய்ய வேண்டும். இது போல தினமும் செய்து வந்தால் வெரிகோஸ் வெயின் பாதிப்பு குறையும்.

காயங்கள் :

உடலில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டாலும், முதலில் காயம்பட்ட இடத்தை சுத்தமான நீரில் கழுவி விட்டு, அதன் மீது மருதம் பட்டை பொடியை வைத்து கட்டு போடவும். இதனால் ரத்த ஒழுக்கு நிற்பதுடன் காயமும் விரைவாக குணம் அடையும்.

தொண்டை கமறல் :

வாய் புண், தொண்டை கமறல் போன்றவற்றால் அவதிப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை இரண்டு கப் நீரில் கலந்து 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கமறல் நீங்கும். வாய்ப்புண் குணமாகும்.

வாதம் குறைய :

அரை லிட்டர் நல்லெண்ணெய் அடுப்பில் கொதிக்க விட்டு அதில் 100 கிராம் மருதம்பட்டையை போட்டு கொதிக்கவிடவும். 30 நிமிடம் கொதித்த பிறகு ஆற விட்டு அந்த எண்ணையை முகவாதம், பக்கவாதம் ஏற்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெயை மூட்டுவலி, இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.

பல் ஈறு பாதிப்பு :

இரத்த கசிவு, வீக்கம், வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருதம் பட்டை பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பல் தேய்க்க வேண்டும். இதேபோல் ஒரு வாரம் செய்து வந்தால் பற்கள் சுத்தமாவதுடன், பல் ஈறு தொடர்பான பிரச்சினைகளும் மறையும்.

பேதி நிற்க :

உணவு ஒவ்வாமை, அஜீரணம் போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதை சரி செய்ய ஒரு டம்ளர் மோரில் 5 கிராம் மருதம் பட்டை பொடியை கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு தொந்தரவும், செரிமான பிரச்சனைகளும் நீங்கும்.

ஆஸ்துமா :

நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் குறையும்.