எத்தனை முறை குளித்தால் வெப்பம் தணியும்?

எத்தனை முறை குளித்தால் வெப்பம் தணியும்?

பாத் டப்’ நீரில் அவசரமாக மூழ்கிவிட்டு எழுவதோ, ஷவரில் மேலோட்டமாகக் குளிப்பதோ, பறவைகள் இறக்கைகளைப் படபடவென அடித்துவிட்டு நகர்வதைப் போலக் காக்காய் குளியல் போடுவதோ முறையான குளியல் அல்ல! செந்தமிழுக்கு இருப்பதைப்போல, குளியலுக்கும் அழகான ஓர் இலக்கணம் உண்டு.

குளியல் முறைகள் மூலமாகவே பல்வேறு நோய்களைத் தடுக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்துள்ளனர். ஆற்று நீரிலும், குளிர்ந்த தடாகங்களிலும் குளித்து, உடலை உற்சாகமாகவும் நோயின்றியும் பாதுகாத்து வந்த நாம், இப்போது சிறிய குளியலறைக்குள் முட்டிக்கொண்டு நிற்கிறோம். உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் இருப்பதில் காட்டும் அவசரம் தொடங்கி, குளிப்பதற்குக்கூடத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியாத அவசர யுகத்தில் வாழ்ந்துவருகிறோம். குளிப்பதைப் பொறுமையாக ரசித்துச் செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை நம்மிடம் அடைக்கலம் புகும். அனல் உமிழும் வேனிற் காலத்தில் குளியல் தரும் பலன்கள் என்ன?

உடல் சூட்டைக் குறைக்க :

காலைக் குளியல் அழுக்குகளை நீக்குவதோடு மட்டுமில்லாமல், இரவில் உறக்கத்துக்குப் பின் உடலில் உண்டான வெப்பத்தைக் குறைக்கவும், உடலுக்குச் சுறுசுறுப்பை உண்டாக்கவும் பயன்படுகிறது.

காலைக் குளியல், உடலின் வெப்பச் சீர்மையை (Temperature regulation) நாள் முழுவதும் முறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதுடன் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. வேனிற் காலத்தில், பகல் நேர வெப்பத்தால் உண்டான வியர்வையின் பாதிப்புகளை நீக்கக் காலை, மாலை என இரு வேளையும் குளிப்பது அவசியம். மாலையில் குளிப்பதால் மனதுக்கு உற்சாகமும் நல்ல உறக்கமும் கிடைப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த `வால்வர் ஹாம்ப்டன்’ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நூல்கள் அறிவுறுத்தும் குளியல் :

கோடைக் காலத்தில் செரிமானத்தை முறைப்படுத்த மிக எளிய வழி காலைக் குளியல். ‘காலைக் குளிக்கில் கடும்பசி நோயும் போம்’ என்ற பாடல், சூரிய உதயத்துக்கு முன் குளிப்பதால் செரிமானம் சீராகும் என்றும், உடலுக்குத் தேவையான குளிர்ச்சி கிடைக்கும் என்றும் கூறுகிறது. எப்போது, எப்படிக் குளிக்க வேண்டும் என்பது போன்ற நெறிமுறைகளையும் ஒழுக்கநெறி நூல்கள் விளக்குகின்றன. நீருக்கு மனதைச் சாந்தப்படுத்தும் தன்மை இருப்பதால், கெட்ட கனவுகளின் தாக்கம் குறையும் என்பது அக்கால நம்பிக்கை. அத்துடன் உணவுக்கு முன், வாந்தி எடுத்த பின், மயிர் களைந்த பின், நீண்ட நேர உறக்கத்தால் உண்டான வெப்பம் போக்க, உடலுறவுக்குப் பின்னும் நீராட அறிவுறுத்துகின்றன.

குளிர்ச்சி தரும் எண்ணெய் குளியல் :
வெப்பத்தைச் சமாளிக்கவும், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கவும் இயற்கை முறையிலான எண்ணெய்க் குளியல் உதவுகிறது. சீரகத்தை நல்லெண்ணெயோடு சேர்த்து லேசாகக் காய்ச்சி, தலை மற்றும் உடல் முழுவதும் தடவிக் குளித்துவந்தால் வெப்ப நோய்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. உடலுக்குக் குளிர்ச்சி உண்டாக்கும் அரக்குத் தைலம், சந்தனாதி தைலம் போன்ற சித்த மருந்துகளையும் வேனிற் காலத்தில் நீராடப் பயன்படுத்தலாம். குறிப்பாகப் பித்த உடல் கொண்டோரின் உடல் சூட்டைக் குறைக்கப் பசு நெய்யை நீராடப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாத மாதவிடாயும் முடிந்தவுடன், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், பெண்களின் உடல் வெப்பம் சீரடைந்து முறையான மாதவிடாய் சுழற்சி உண்டாகும்.

தலை தவிர்த்துக் குளிக்காதே :

குளிர்ந்த நீரில் குளிக்கும்போது, தலைக்கும் சேர்த்துக் குளிப்பதே சிறந்தது. பொதுவாக எண்ணெய் தேய்த்த நாளன்று மட்டும் தலைக்குக் குளிப்பதே பலருடைய வழக்கம். ஆனால் அக்கால மக்கள், எண்ணெய் தேய்க்காத நாளில்கூடத் தலைக்குக் குளிக்காமல் இருக்க மாட்டார்கள் எனத் தலைமுழுகலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ‘காய்ந்தது எனினும் தலை ஒழிந்து ஆடாரே’ எனும் ‘ஆசாரக்கோவை’ வரி. எண்ணெய் குளியல் செய்யும்போது மிதமான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும் (வேனிற் காலத்தில் குளிர்ந்த நீர்தான்). அதேநேரம், குளிர்காலத்தில் சூடான வெந்நீரை நேரடியாகத் தலையில் ஊற்றக் கூடாது.

செலவில்லா மூலிகைக் குளியல் :

மூலிகைச் சாரமுள்ள நீரோட்டங்களில் குளிக்க அன்றைக்கு வாய்ப்பு இருந்தது. இன்று நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான சாத்தியம் குறைவு. அதற்குப் பதிலாக நீரில் மூலிகைகளைப்போட்டுக் குளிப்பதால் நல்ல பலன்களைப் பெறலாம். உடல் சூட்டைக் குறைக்கக் கருங்காலிப் பட்டை, நெல்லிக்காய் மற்றும் அதன் இலைகள், வேம்பு, புங்க இலைகள், வெட்டிவேர் ஆகியவற்றைக் குளிக்கும் நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் குளிக்கலாம். மேலும் நொச்சி, மாவிலை மற்றும் துளசி இலைகளையும் நீரில் கலந்து குளிக்கலாம்.

குழந்தைகளுக்கு வெப்பம் தாக்காமல் இருப்பதற்காக விளா மர இலைகளை நீரில் கலந்து குளிக்க வைக்கும் வழக்கம் கிராம மருத்துவத்தில் உண்டு. வெப்பத்தைக் குறைக்கக் களிமண்ணை உடலில் தேய்த்துக் குளிப்பதும் பழமையான சிறந்த உத்தி.

சூட்டைக் குறைக்கும் நுரைப்பான் :

பொடுகு குறைய, முடி வளர்ச்சிக்கு, கூந்தல் வனப்புக்கு, முடியின் அடிக்கும் நுனிக்கும் எனப் பல வேதிக் கலவைகள் நிறைந்த ஷாம்பு (நுரைப்பான்) நம் தலைமுடியைப் பதம் பார்த்துவருகிறது. சற்றுச் சிந்தித்தால், ஷாம்பு இல்லாத காலத்திலேயே அடர்த்தியான, நீளமான, உறுதியான வளமான கேசம் பெரும்பாலான மக்களிடம் இருந்திருக்கிறது. உடலைக் குளிர்விக்கவும் கூந்தலின் ஆரோக்கியத்துக்கும் சோற்றுக் கற்றாழை அல்லது முட்டை வெண்கருவை இயற்கை ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.

மாதம் இரு முறை மருதாணி இலைகளை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்து வருவதன் மூலம் உடல் குளிர்ச்சி பெறும். ‘எலுமிச்சையைத் தலையில் தேய்த்துக் குளிக்கப் பித்தம் தெளியும்’ என்பது மறந்துவிட்ட அற்புதமான இயற்கை அறிவியல். எலுமிச்சை குளியல் வெப்பத்தைக் குறைப்பது மட்டுமில்லாமல், தெளிவையும் கொடுக்கும். வெந்தயத்தை நீரில் ஊறவைத்துப் பசைபோல் ஆக்கி தலையில் தடவிக் குளிக்க, உடலும் உள்ளமும் குளிரும்.

இயற்கை சோப்புகள் :

பாசிப்பயறு பொடி, கடலைமாவு, ஏழு மூலிகைகள் சேர்ந்த `நலங்கு மாவு’, ஐந்து மூலிகைகள் கொண்ட பஞ்சகற்பக் குளியல் கலவை, பெண்களுக்கு மஞ்சள் பொடி, என இயற்கை மூலிகைக் கலவைகள் நிறையவே உண்டு. இவற்றை `ஸ்கிரப்’களாக பயன்படுத்தினால் தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். வியர்வைத் துளைகள் திறக்கப்படும். குளிப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தினால், உடலுக்கு நல்ல வாசனை உண்டாவதுடன், கிருமிகளையும் அழிக்கின்றன. பஞ்சகற்பக் குளியல் பொடியைப் பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க, எந்த நோயும் எளிதில் தாக்காது.

நலங்கு மாவு, பாசிப்பயறு பொடி, கடலைமாவு போன்றவற்றைப் பயன்படுத்தினால் உடலுக்குக் குளிர்ச்சி உண்டாகும்; வியர்வையால் உண்டாகும் துர்நாற்றம் நீங்கும். வெயில் காலம் மட்டுமன்றி அனைத்துப் பருவகாலங்களிலும் மூலிகைப் பொடி (அ) கலவைகளைப் பயன்படுத்தலாம்.

நாம் பயன்படுத்தும் சோப்புக் கட்டிகள், தோலுக்கும் உடல்நலனுக்கும் ஏற்புடையதா? நோய்க் கிருமிகளை அழிக்கிறதா? சமீபத்தில் பிரபலப் பவுடர் நிறுவனத்தின் தயாரிப்பில் புற்றுநோய்க் காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். ரசாயனம் கலந்த சோப்புகளுக்குப் பதிலாக இயற்கையை நாடுவதே சிறந்தது.

இயற்கை அளித்த `ஏ.சி.’ :

கோடைக் காலத்தில் வியர்வை வெளியேறுவது, நம் உடலுக்கு இயற்கையே வடிவமைத்துக் கொடுத்த `ஏ.சி.’ கட்டமைப்பு. வெப்பம் அதிகரித்த நிலையில் வியர்வையை வெளியேற்றி, நம் உடலின் மைய வெப்பநிலை (Core Temperature) பாதுகாக்கப்படுகிறது. சிலர் வியர்வையே சுரக்காமல் இருக்கும் `Anhidrosis’ நோயால் கோடை காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே வேனிற் காலத்தில் வியர்ப்பதைப் பற்றி கவலைப்படாமல், வியர்வையால் தோலில் உள்ள உப்புகள் மற்றும் கிருமிகள் நீங்க முறையான குளியலைக் கடைப்பிடித்தால் குளிர்ச்சி கிடைப்பது நிச்சயம்.

தென்னை மரங்களின் கீழ் `பம்பு செட்’ குளியல், நீச்சல் பயின்ற `கிணற்றுக் குளியல்’, ஆற்று நீரை எதிர்த்து நீந்திய `குதூகலக் குளியல்’ போன்றவை காலப்போக்கில் தொலைந்துவிட்டன. இருந்தபோதும் காலம்காலமாகத் தொடர்ந்துவரும் குளியலின் நுணுக்கங்களைப் பின்பற்றினால் வேனிற் பருவம் மட்டுமல்ல, அனைத்துப் பருவங்களும் இனிமையானவைதான்!