ஜடா மாஞ்சில் – மருத்துவம் :
ஜடா மாஞ்சில் – மருத்துவ பயன்கள் :
ஜடா மாஞ்சில் வேர் காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.மிகுந்த மணமுள்ளது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; மூச்சு இரைப்பைக் கட்டுப்படுத்தும்; சிறு நீர் பெருக்கும்; கோழையகற்றும்: சிலந்தி, நஞ்சு, காய்ச்சல், உட்சூடு, வாய்வு, கழிச்சல், கண் நோய்கள், இருமல், இரைப்பு போன்றவற்றை குணமாக்கப் பயன்படுகின்றது.
ஜடா மாஞ்சில் காக்கை வலிப்பு, குஷ்டம், பேதி முதலியவற்றையும் கட்டுப்படுத்தும். இதய துடிப்பைச் சீராக்கும். வேர் எண்ணெய், முடியைக் கருமையாக்கும் தன்மை கொண்டது. பல பதிவுரிமை செய்யப்பட்ட கூந்தல் தைலங்களில் இது சேர்கின்றது.
இமய மலையின் 3000 முதல் 4500 மீ உயரமான பகுதிகள், வட காஷ்மீர், பூட்டான், பர்மா, இலங்கை முதலிய பகுதிகளில் விளைகின்ற ஒரு பூங்கோரை இனத்தைச் சேர்ந்த செடி வகைத் தாவரம். 60 செமீ வரை உயரமானவை.
இந்த செடிக்கு நீண்ட ஆணிவேரும் பல சல்லி வேர்களும் உண்டு. வேர் முண்டுகள் தடித்தும் நீண்ட தாடி போலவும் காணப்படும். வேர்களே மருத்துவத்தில் உபயோகப்படுகின்றன. இலைகள், இலைக் காம்புகள் ஆகியவை வாடிப்போன தோற்றத்துடன் காணப்படும். அடிமட்டக் கீழ் இலைகள் 20 செமீ நீளத்திலும் இலைக் காம்பில் இருந்து குறுகியும் இருக்கும். மேற்பகுதி இலைகள் சிறியவையாகவும் பெரும்பாலும் நீள்வட்ட வடிவிலும் காணப்படும்.
ஜடா மாஞ்சில் பூக்கள் சிறு கொத்துகளில் சிறியதாகக் காணப்படும். பழங்கள் சிறியவை. மெல்லிய மயிரிழைகள் சூழக் காணப்படும். சடாமாசி, சடாமஞ்சி, பைகாசி தகரம் ஆகிய பெயர்களும் உண்டு.
செடியிலிருந்து வேர்கள் சேகரிக்கப்பட்டு காய வைக்கப்பட்டு நாட்டு மருந்து கடைகளில் ஜடாமாஞ்சில் என்கிற பெயரில் பொதுவாகக் கிடைக்கும். இவை அதிக மணம் கொண்டவை. வேரிலிருந்து ஒரு வித மஞ்சள் நிறமான எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.
கூந்தல் அடர்த்தியாக வளரவும், இரவில் ஆழ்ந்த உறக்கம் உண்டாகவும் சடாமாஞ்சில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து கூந்தல் எண்ணெயாக தலையில் தேய்த்து வரலாம்.
வாதவலி கட்டுபட வேரைப் பொடித்து ¼ தேக்கரண்டி அளவு தேனில் உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.
கோழை வெளியாக 1கிராம் அளவு பொடியை நீரில் கலந்து, நாள் ஒன்றுக்கு இரண்டு முறைகள் வீதம் உட்கொள்ள வேண்டும்.
செரிமானத்தைச் சீராக்கவும், பேதி மருந்தாகவும், இசிவு நோய்களுக்கும் பயன்படும் ஜடாமாஞ்சில், காஷ்மீரின் (2500 மீ உயரத்தில்) சில பகுதிகளில் மட்டும் வளரும் சடாவல்லி அல்லது வாலெரியானா எனப்படும் பதிவுரிமை செய்யப்பட்ட தாவர மருந்துக்கு மாற்று மருந்தாகவும் உபயோகமாகின்றது.