சிறுநீரகம் வலுப்பெற சிறுகண் பீளை என்ற பாஷாண பேதி...

சிறுநீரகம் வலுப்பெற சிறுகண் பீளை என்ற பாஷாண பேதி...

 
கிராமங்களில் காணும் இடங்களில் எல்லாம் காணப்படும், பொங்கல் பூ எனும் சிறுகண்பீளைச் செடியின் வெண்ணிற மலர்கள் தண்டுகளில் ஒட்டிக்கொண்டு காணப்படும், சிறிய இலைகளைக் கொண்டு, நீண்ட தண்டுகளில் காணப்படும் இதன் பூக்களே, இந்தச் செடியைத் தனித்துக் காட்டும்.

மனிதருக்கு பயன் தரும் மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கும் என்ற அளவில், நம்மைச் சுற்றிக் காணப்படும் மூலிகைகளுள் ஒன்று தான், தேங்காய்ப்பூ கீரை, சிறுகண் பீளை என்று அழைக்கப்படும் சிறுபீளை. நீர்ப்பாங்கான இடங்களில் விளையும் இந்தச் செடியின் அனைத்து பாகங்களும், மருத்துவ குணங்கள் மிக்கது.

சிறுபீளையில் மேலும் இரு வகைகள் உண்டு, பெருங்கண் பீளை, பாஷாண பேதி இவை மூன்றும் மழைக்கால முடிவில் தானாக வளர்ந்து, மார்கழி மாத முடிவில் பெருமளவில் பூப்பவை, இம் மூன்று மூலிகைகளும் ஒரே வகையில், சிறுநீரக பாதிப்புகளுக்கு, நிவாரணம் தரும் ஆற்றல் வாய்ந்தவை.

பயன்படுத்தும் முறை :

இவை அதிகம் விளையும் காலங்களில், செடிகளைப் பறித்து, சுத்தம் செய்து சமூலம் எனும் இலைகள், பூக்கள், வேர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, இடித்து பொடியாக வைத்துக்கொண்டு, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி வரலாம்.

சிறுகண் பீளை செடியின் சிறப்பு :

சசிறுகண் பீளை செடியை, கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்! அதன் காரணம் என்ன தெரியுமா?

காரணம் என்ன?

அந்த காப்பு இலைக்கொத்தில், மாவிலை, ஆவாரை, தும்பை உள்ளிட்ட மூலிகைகளும், சிறுபீளையும் இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, மாவிலை, காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் பிராண வாயுவை சீராக்கும் தன்மை மிக்கது, அதுபோல சிறுபீளை நச்சுத் தன்மை மிக்க பூச்சிகளை விரட்டி, சுற்றுப் புறத்தை விஷப் பூச்சிகள், விஷக் கிருமிகளிடமிருந்து காக்கும் இயல்புடையது.

இதனாலேயே, வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர். அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர்.
இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.

சிறுபீளை சரிசெய்யும் உடல்நல பாதிப்புகள்!

தற்காலத்தில், பரவலாக அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றான சிறுநீரகக் கல் உள்ளிட்ட அனைத்து வகை சிறுநீரக பாதிப்புகளைப் போக்கும், உடல் வெளுத்து இருத்தல், பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் போன்றவற்றை சரிசெய்யும்.

உடல் பாதிப்புகள்:

இன்றைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் வியாதியாகி விட்டது, சிறுநீரக பாதிப்பு. 

என்ன காரணம், எதனால் வருகிறது இந்த பாதிப்புகள்? கைகளால் பிழிந்த கரும்புச்சாற்றில் இருந்து வெல்லம் காய்ச்சியது போய், இயந்திரங்கள் மூலம், கரும்பைச் சக்கையாக்கி, ஆலை சர்க்கரை எனும் சீனி என்ற பெயரில் வந்த கரும்புச்சாற்றில், நிறத்துக்காக, பளீர் தன்மைக்காக நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்பட்டன, அதன் விளைவுகளை நாம் இன்று பார்க்கிறோம்.

நச்சுக்கள் :

பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க, புதிய புதிய கலப்பு ரக அரிசிகள், கோதுமைகள், இரசாயன உரங்கள் அதிகம் இட்டதன் விளைவாக, அவற்றின் நச்சுக்கள் தானியங்களில் கலந்து, மனிதரின் உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாகி விட்டன.

சிறு நீரக பாதிப்புகள் :

இவையெல்லாம், அவை தொடங்கிய ஆண்டுகளில் இருந்து, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளிலேயே, 1980களில் இருந்து பாதிப்புகள் தெரிய ஆரம்பித்து விட்டன அதில் ஒன்றுதான், இன்று நாம் காணும் சிறுநீரக பாதிப்புகள் யாவும். சிறுநீரக பாதிப்புகளில் ஒன்றுதான், சிறுநீரகக் கல் அடைப்பு வியாதியாகும். இந்தக் கல் என்பது, உடலில் உள்ள கால்சியம் உப்புக்களால் உடலில் உண்டாவதாகும்!

சிறு நீர் கற்களை கரைக்க :

இவற்றில் தானே, உடலில் கரையும் வகை, உடையாத வகை என்று இருந்தாலும், இவை அனைத்தையும் சிறுநீரை அதிகரித்து, அவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது, இந்த சிறுபீளை.

உதிரப் போக்கு :

சிறுகண்பீளை இலைகளை அரைத்து சாறெடுத்து, தினமும் இருவேளை பருகி வர, நீர்ச் சுருக்கு மற்றும் அடைப்பு, மாதாந்திரப் போக்கின் போது உண்டாகும் அதீத உதிரப் போக்கு பாதிப்புகள் ஆகியவை நீங்கி விடும்.

கருவைக் காக்கும் சிறுபீளை !

கருவுற்ற மகளிரின் உடல் தளர்ச்சியைப் போக்கி, உடலுக்கு நல்ல ஆற்றலும், வலிமையையும் தரக் கூடியது, சிறுகண்பீளை. சிறுகண்பீளை வேர்களை அலசி நிழலில் உலர வைத்து, அதில் சிறிது எடுத்து, அரிசி அல்லது தானியங்களை உடைத்து செய்யப்படும் கஞ்சியில் இட்டு, வேக வைத்து, அந்த கஞ்சியைப் பருகி வர, கருவுற்ற பெண்களின் உடல் அசதி தீரும், மேலும், கரு தங்காமல் போகும் ஆபத்துள்ள மகளிருக்கும், இந்த கஞ்சி நன்மைகள் செய்து, கருவினைக் காக்கும்!

சிறுநீரக கற்களுக்கு சிறுகண்பீளை !

சிறுகண்பீளை வேரை அரைத்து அதில் பனை வெல்லம் கலந்து பாலில் கலந்து தினமும் இரு வேளை பருகி வர, சிறுநீர் அடைப்பு, சிறுநீர்ப் பாதையில் கற்கள் அடைத்துக் கொண்டு, சிறுநீர் பிரியாமல் இருந்த நிலை, மாறி, சிறுநீர் நன்கு பிரியும்.

சிறுகண்பீளை சமூலம் சேர்ந்த வேர் குடிநீர் !

சிறுபீளை செடியின் இலைகள், தண்டு, வேர், பூக்கள் இவற்றை சேகரித்துக் கொண்டு, பேராமுட்டி வேர், மாவிலங்க வேர், நெருஞ்சில் வேர் இவற்றை சேர்த்து, நீரில் இட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, சிறிதளவு தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரகக் கல் பாதிப்பு மற்றும் சிறுநீரகம் சார்ந்த அனைத்து வியாதிகளும், பாதிப்புகளும் விலகி, உடல் நலமாகும்.