நீளமான கூந்தல் வளர உதவும் இயற்கை மூலிகை ஷாம்பு...

நீளமான கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை...

இயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும். சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும் மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மரம்தான் பூந்திக்கொட்டை மரம் எனும் மணிப் பூவந்தி மரம்.
கிராமங்களில், பூந்திக்கொட்டை மரம், பூவந்தி மரம், சோப்புக்காய் மரம் என்று அழைக்கப்படும் மணிப்பூவந்தி மரம், அடர்ந்த மலைப் பகுதிகளில் பரவலாக வளரக் கூடியது. தமிழகத்தின் ஆனைமலை, பழனி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளின் உயரமான இடங்களில் காணப்படும் மணிப்பூவந்தி மரம், பல ஆயிரம் ஆண்டு கால தொன்மையான பாரம்பரியம் கொண்ட, பழம்பெரும் மரங்களில் ஒன்றாகும்.

இந்த மரத்தின் இலைகள் சற்றே நீண்ட வடிவம் கொண்டவை, வெண்மை வண்ண மலர்கள் கொத்தாகப் பூத்துக் குலுங்கும். கோடைக் காலத்தில் காய்க்கும் இந்த மரத்தின் காய்கள் மற்றும் பழங்கள், மிக்க மருத்துவ நன்மைகள் கொண்டவை.
பன்னெடுங்காலம் முன்னரே, மணிப்பூவந்தி மரம், தமிழர்களின் குளியலில் முக்கிய இடம் பெற்ற, ஒன்றாகத் திகழ்ந்து வந்திருக்கிறது.
இந்த மரத்தின் பழங்களை, கொட்டை நீக்கிவிட்டு, கைகளால் நன்கு பிசைந்து நீரில் இட்டு, ஊறிய சற்று நேரத்தில் எடுத்தால், நல்ல மணத்துடன் கூடிய நுரை உண்டாகும். இந்த நீரை, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் காலங்களில், தலையில் உள்ள எண்ணெயை நீக்க, தலையில் தேய்த்துக் குளிக்க, எண்ணெய் முற்றிலும் நீங்கி விடுவதோடு மட்டுமல்லாமல், தலையில் உள்ள அழுக்குகளையும் வெளியேற்றி தலைமுடியை, பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆக்கும் தன்மை படைத்ததாகும்.
இதனாலேயே அக்காலங்களில், அரப்புத் தூளுடன் மணிப்பூவந்தி பழங்களை கலந்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து, எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கும் இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தி வந்தனர்.
மேலும், உடல் அழுக்கை நீக்கும் இயற்கை சோப் போலவும், இதனை அக்கால மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மனிதர்களின் புற அழுக்கை நீக்குவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் அகத்தில் ஏற்படும் வியாதிகளையும் போக்க வல்லவை, இந்த மணிப்பூவந்தி பழங்கள்.
   
1. வலிப்பு மயக்கம் போக்கும் மணிப்பூவந்தி.
காக்காவலிப்பு, திடீரென மயங்கி விழுதல், இதனால் சிலருக்கு பற்கள் கிட்டித்துக் கொள்ளும். பற்கள் கிட்டித்துக் கொள்வதென்றால், வாயைத் திறக்க முடியாது, மிகக் கடினமாக மாறி விடும், இதனால், அது போன்ற சூழ்நிலைகளில், வாய் வழியே, மருந்துகள் அளிப்பது என்பது இயலாத காரியமாக இருக்கும்.
மணிப்பூவந்தி பழங்களின் கொட்டைகளில் இருக்கும் மென்மையான பருப்பை சிறிது எடுத்து, அதை நன்கு அரைத்து விழுதாக்கி, அந்த விழுதை சிறிது தாய்ப்பாலில் கலந்து ஊற வைத்து, சற்று நேரம் கழித்து வடிகட்டி, ஓரிரு துளிகள் மூக்கில் இட, மூக்கு மற்றும் வாயின் வழியே, சளி வெளியேறும். சற்று நேரத்தில், காக்கா வலிப்பு, மயக்கம், பல் கிட்டிப்போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்புகள் விலகி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.
   
2. பல் வியாதிகளைப் போக்கும் :
மணிப்பூவந்தி கொட்டைகளை உடைத்து அதைப் பொடியாக்கி, இந்துப்பு சேர்த்து நன்கு வறுத்து, வழக்கமாக பல் தேய்க்க உபயோகிக்கும் பற்பொடியுடன் கலந்து, தினமும் பல் துலக்கி வர, பற்களை பாதிக்கும் வியாதிகளின் பாதிப்புகள் நீங்கி விடும்.
  
3. சோப் அலர்ஜி :
என்னதான், வாசனை சோப்கள், உடலுக்கு நன்மை தருவது, மிருதுவானது, இயற்கையானது என்று சினிமா நடிகைகள், விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் சமூகத்தில் புகழ்பெற்ற பெண்களை வைத்து விளம்பரங்கள் மூலம், தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் கொடுத்துக் கொண்டாலும், அந்த சோப்களில், வாசனை மற்றும் நுரை தருவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள் யாவும் இரசாயனங்கள் கலந்தவையே.
இதனால், சிலருக்கு சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும், இதன் காரணமாக அதுவரை பயன்படுத்திய சோப்பை விட்டுவிட்டு, வேறொரு சோப்பைப் பயன்படுத்த ஆரம்பிப்பர், அதுவும் சில நாட்களில் உடலுக்கு ஒவ்வாமையைத் தரும், அதன் பின்னர், சந்தனம் கலந்தது, மூலிகைகள் சேர்ந்தது, ஆலு வேரா என்று பலப்பல, இப்படி சோப் தான் மாறுமே தவிர, உடலின் பாதிப்புகள் நீங்காது.
மேலும், அடிக்கடி சோப்பை மாற்றி வருவதால், சருமத்தில் பாதிப்புகள் அதிகமாகி விடும். இது போன்ற பாதிப்புகளை நீக்க, சிலர் எப்போதும் சோப்பை பயன்படுத்தாமல், உடலுக்கு நன்மைகள் தரும் குளியல் பொடிகளை, இயற்கை ஷாம்பூக்களை வீட்டில் தயாரித்து, குளியலில் பயன்படுத்தி உடல் சரும பாதிப்பின்றி, உபயோகித்து வருகின்றனர்.
   
4. பூந்திக் கொட்டை குளியல் பொடி :
ரோஜாப் பூக்கள், செம்பரத்தை பூக்கள், ஆவாரம் பூக்கள், உசிலை மரத்தின் இலைகள், செம்பரத்தை இலைகள், வெந்தயம், சீயக்காய், பூலாங் கிழங்கு, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், இலுப்பம் புண்ணாக்கு, பூவந்திக் கொட்டைகள் போன்ற இவற்றை ஒரே அளவாக எடுத்துக் கொண்டு, இள வெயிலில் காய வைத்து, நன்கு உரலில் இட்டு இடித்து, சலித்து, மாவாக்கி, ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குளிக்கும் நேரங்களில், இந்த மாவை சிறிதளவு எடுத்து, தண்ணீரில் சற்று நேரம் ஊற வைக்க வேண்டும், பின், தலை மற்றும் உடலில் நன்கு தேய்த்து சற்று நேரம் ஊறவைத்த பின் குளிக்க, பூவந்தியின் வழுவழுப்பும், நுரைக்கும் தன்மையும், முழுமையாகக் குளித்த உணர்வை உண்டாக்கி, தலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்குகள், அழுக்குகள் போன்ற வற்றை நீக்கி, தலைமுடியை பொலிவாக விளங்க வைக்கும், உடலில் உள்ள கிருமிகள், அழுக்குகள் எல்லாம், இந்த பூவந்தி பொடியின் ஆற்றல் மிக்க நுரையில் கலந்து வெளியேறி விடும். உடலும், மனமும் புத்துணர்வு அடையும். உடலில் நல்ல நறுமணம் உண்டாகும்.

5. சரும பாதிப்பு :
பூவந்தி பழத்தில் உள்ள ஆற்றல் மிக்க தாதுப் பொருட்கள், உடலில் உருவாகும் பூஞ்சை பாதிப்பை தடுத்து, சருமத்துக்கு பொலிவையும் மிருதுவையும் அளிக்கின்றன. இதன்மூலம், தலையில் ஏற்படும் பேன், பொடுகு சிரங்கு போன்ற பாதிப்புகள் முதல், முகத்தில் ஏற்படும் பருக்கள், சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, புண்கள் போன்ற அனைத்து பாதிப்புகளையும் உடலில் இருந்து நீக்கும் வல்லமை மிக்கது.
   
6. கூந்தல் மிளிர :
இது போல, அனைத்துப் பொருட்களையும் சேகரித்து இந்த குளியல் பொடியை உருவாக்க வாய்ப்பு இல்லாதவர்கள், பூவந்திக் கொட்டைகளை இளஞ்சூட்டில் வறுத்து, அதை நன்கு இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, சீயக்காய்த்தூள் அல்லது சாதம் வடித்த கஞ்சியுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தேய்த்துக் குளித்து வர, தலைமுடிகள் அழுக்கு நீங்கி, மிருதுவாகி பளபளப்பாக மாறி விடும்.
இப்படி மனிதரின் உடல் பாதிப்புகளை, அழுக்குகளைக் களைந்து புத்துணர்வு தரும், மணிப்பூவந்தி, மனிதரின் ஆடை அணிகலன்களுக்கும் தூய்மையைத் தருவதாகவும் அமைகிறது, எப்படி என்று பார்க்கலாமா?
   
7. பூவந்தி நேச்சுரல் நகை பாலிஷ் :
பெண்கள் அனு தினமும் அணிந்திருக்கக் கூடிய நகைகளான, தோடுகள், மூக்குத்தி, கழுத்துச் சங்கிலி, கை வளையல் மோதிரம் போன்ற தங்க நகைகள் தினசரி பயன்பாடுகளால், காலப் போக்கில் நிறம் மங்கலாகும்.
இது போன்ற நகைகளை, பூவந்திக் கொட்டைகளை இட்ட நீரில், சற்று நேரம் ஊற வைத்து, அதன் பின்னர், கைகளால், அந்த நகைகளை நீரிலேயே அலசிவிட்டு வெளியில் எடுக்க, நகைகள் புதுப் பொலிவுடன் மின்னும்.
   
8. பட்டுப்புடவைகளை, புதிதாக்கும் பூவந்தி:
பட்டுப்புடவைகளை பாதுகாப்பது என்பது, வீட்டில் உள்ள பெண்களின் ஒரு பெரிய வேலையாகி விடுகிறது. அந்தப் புடவைகளைக் கட்டிக்கொண்டு விஷேசங்களுக்குச் செல்லும் சமயங்களில், புடவைகளில், ஏற்பட்டுவிடும் உணவு மற்றும் காபி பட்ட கறைகள் அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடும். எப்படி இந்தக் கறைகளைப் போக்குவது? டிரை வாஸில் கொடுத்தாலும், சமயத்தில் இந்தக் கறைகளை போக்க முடியவில்லை என்று சொல்லி விடுகிறார்களே, என்று நொந்து போய் இருப்பார்கள்.
   
9. பட்டுப்புடவைகளின் கறைகளைப் போக்க :
நீண்ட நாட்கள் வெளியில் எடுக்காத பட்டுப் புடவைகள் மற்றும் கசங்கிய கறைகள் உள்ள பட்டுப் புடவைகளை ஒவ்வொன்றாக, நுரைத்த பூவந்தி நீரில் முக்கி எடுக்க வேண்டும், சிலமுறை நன்கு அலசி, பிறகு சாதாரண தண்ணீரில் இதே போல ஓரிரு முறைகள் செய்து, நிழலில் உலர்த்த, ஈரம் உலர்ந்து, கறைகள் போய், புடவைகள் நன்கு காய்ந்து விடும்.
   
10. சோப் :
இவற்றை சலவை செய்து வைத்தால், நல்ல நறுமணத்துடன், புத்தம்புது மினுமினுப்பும் மெருகும், இந்தப் புடவைகளில் தோன்றும்,
வெளிநாடுகளில் சோப் பெர்ரி எனும் பெயரில், பக்க விளைவுகள் இல்லாத இயற்கை சோப் என்று மணிப்பூவந்தியின் பழங்களை பதப்படுத்தி, விற்பனை செய்து வருகிறார்கள்.