கருத்தரித்தல் பரிசோதனை

 கர்ப்பிணிக்கு என்ன என்ன பரிசோதனைகள்?

 

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ‘கருவுறுதல்’ தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல்.

நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது. இக்காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் என்ன?

 

1. சிறுநீரில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Pregnodex test):

வழக்கமாக வரும் நாளிலிருந்து ஒரு வாரம்வரை மாதவிலக்கு தள்ளிப் போனாலோ, அந்த காலத்தில் லேசாக தலைச்சுற்றல் இருப்பது போல் உணர்ந்தாலோ, கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிகாலைச் சிறுநீரைப் பரிசோதிப்பது நல்லது. ஆனால், கட்டாயமில்லை. சிறுநீரில் ‘ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஹார்மோன்’ (Human Chorionic Gonadotropic Hormone-hCG) இருக்கிறதா என்று சோதிக்கும் பரிசோதனை இது. இந்த ஹார்மோன் சிறுநீரில் காணப்பட்டால், பாசிட்டிவ் என்று கூறுவார்கள். இது கர்ப்பத்தை உறுதி செய்யும்.

2. இரத்தத்தில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Blood hCG test):

சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் அடைந்திருப்பதில் சந்தேகம் வரும்போது, இரத்தத்தில் மேற்சொன்ன ஹார்மோன் அளவைப் பரிசோதித்து உறுதிசெய்வது வழக்கம். இது 5 mIU/ml க்குக் கீழே இருந்தால் கர்ப்பம் இல்லை. அதற்கு மேல் இருந்தால் கர்ப்பம் உறுதி.

இரத்தத்தில் hCG அளவு

கருத்தரித்து mIU/ml

7 நாட்கள் 0 5

14 நாட்கள் 3 426

21 நாட்கள்18 7340

28 நாட்கள்1080 56500

35 42 நாட்கள் 7650 - 229000

 

3. இரத்த அழுத்தப் பரிசோதனை:

கர்ப்பம் உறுதியானதும், கர்ப்பிணிக்கு இரத்த அழுத்தத்தை அளந்துகொள்ள வேண்டும். இது 120/80 மி.மீ. மெர்குரி என்று இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை மருத்துவரிடம் போகும்போதும் இதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இது 140/90-க்கு மேல் இருந்தால், உயர் இரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். அப்போது சிகிச்சை தேவைப்படும்.

 

4. உடல் எடை:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ஒவ்வொரு மாதமும் அரை கிலோ முதல் ஒரு கிலோவரை எடை கூடலாம். கருத்தரித்ததில் இருந்து பிரசவம் ஆகும்வரை மொத்தமாக 10 முதல் 12 கிலோவரை எடை கூடலாம். ஏற்கெனவே உடல் எடை அதிகமாக இருந்தால், 8 கிலோவரை கூடலாம். உடல் எடை மிக அதிகமென்றால், பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். எனவே, எடைக் கட்டுப்பாடு அவசியம்.

 

5. அடிப்படை இரத்தப் பரிசோதனைகள்:

*ஹீமோகுளோபின் மற்றும் ஹிமட்டோகிரிட் பரிசோதனைகள்:

இவை கர்ப்பிணியின் உடலில் தேவையான அளவுக்கு இரத்தம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. இந்த அளவுகள் குறைவாக இருந்தால், இரத்தசோகை உள்ளதாக அர்த்தம். அதற்கும் சிகிச்சை தேவைப்படும்.

*தட்டணுக்கள் பரிசோதனை:

இரத்தத்தில் தட்டணுக்கள் (Platelets) குறைவாக இருந்தால் பிரசவ நேரத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். இச்சோதனை மூலம் இந்த ஆபத்தைத் தவிர்க்கலாம்.

*இரத்த வகை மற்றும் ஆர்ஹெச் பிரிவுப் பரிசோதனைகள்:

கர்ப்பிணிக்குத் தீவிர இரத்தசோகை இருக்கும்போதும், பிரசவத்தின்போது உதிரப்போக்கு மிக அதிகமாக ஏற்பட்டாலும், இரத்தம் செலுத்த வேண்டி வரும். அதற்குத் தாயின் இரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.

*குழந்தைக்கு இரத்தம் ஆர்ஹெச் பாசிட்டிவ், தாய்க்கு இரத்தம் ஆர்ஹெச் நெகட்டிவ் என இருந்தால், இரண்டாவது பிரசவத்தில் குழந்தைக்குப் பிரச்சினை (Rh incompatibility) ஏற்படலாம். அதைத் தவிர்க்க தாய், சேய் இருவருக்கும் ஆர்ஹெச் பிரிவு தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க கர்ப்பிணிக்கு ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ (Indirect Coomb’s test) செய்யப்படும். இது நெகட்டிவ் என்று முடிவு தெரிவித்தால், குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ‘ஆர்ஹெச் இமுனோகுளோபுலின்’ (Anti - D) ஊசி மருந்தைச் செலுத்த வேண்டும்.

*இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை:

கர்ப்பிணிக்கு ஏற்கெனவே நீரிழிவு இருந்தாலும், கர்ப்ப காலத்தில் புதிதாக ஏற்பட்டாலும், இரத்தச் சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். ஏற்கனவே நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிக்கு, வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை 90 மி.கி./டெ.லி. எனவும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 மி.கி./டெ.லி, மற்றும் ஹெச்பிஏ1சி (HbA1C) அளவு 6.5%க்கும் கீழே இருந்தால், நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம். இல்லையென்றால், இன்சுலின் சிகிச்சை தேவைப்படும். சிலருக்குக் கர்ப்பகாலத்தில் மட்டும் நீரிழிவு ஏற்படும். இதைத் தெரிந்துகொள்ள மருத்துவரின் முதல் சந்திப்பு அன்றும், 4-வது, 7-வது கர்ப்ப மாதங்களிலும் கர்ப்பிணியை 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச்செய்து, 2 மணி நேரம் கழித்து இரத்தச் சர்க்கரையைப் பரிசோதிக்கும்போது 140 மி.கி./டெ.லி.க்குக் கீழே இருந்தால், அவருக்கு நீரிழிவு இல்லை; இதற்கு அதிகமென்றால், கர்ப்ப கால நீரிழிவு என்று அர்த்தம். இதற்கு சிகிச்சை பெற வேண்டும்.

*தைராய்டு பரிசோதனை:

கர்ப்பிணிக்குத் தைராய்டு பிரச்சினை இருந்தால், அது குழந்தையையும் பாதிக்கும். இந்த ஆபத்தைத் தவிர்க்க கர்ப்பிணிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

*ஹெபட்டைடிஸ் பி பரிசோதனை:

கர்ப்பிணிக்கு ஹெபட்டைடிஸ் பி வைரஸ் கிருமிகள் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அது பரவிவிடும். இதைத் தடுக்க, குழந்தை பிறந்தவுடன் ஹெபட்டைடிஸ் பி இமுனோகுளோபுலின் தடுப்பு மருந்தைக் குழந்தைக்குப் போடவேண்டும். இத்துடன் வழக்கமான ஹெபட்டைடிஸ் பி தடுப்பூசியையும் முறைப்படி போட வேண்டும்.

*வி.டிஆர்.எல். பரிசோதனை (VDRL test):

சிபிலிஸ் எனும் பால்வினைநோய் கர்ப்பிணிக்கு உள்ளதா எனத் தெரிந்துகொள்ளும் பரிசோதனை இது. கர்ப்பிணிக்கு இது இருந்தால், குழந்தைக்குப் பிறவிக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பிணிக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

*ஹெச்ஐவி பரிசோதனை:

கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளும் பரிசோதனை இது. அப்படி இருந்தால், குழந்தைக்கும் பரவ வாய்ப்புண்டு. எனவே, கர்ப்பிணிக்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து, குழந்தைக்கு இது பரவாமல் தடுக்க வேண்டும்.

*சிறுநீர்ப் பரிசோதனை:

சிறுநீரில் புரதம் மற்றும் சர்க்கரை உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். புரதம் இருந்தால், சிறுநீரகம் சார்ந்த பாதிப்பு அல்லது இரத்தக்கொதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. அப்போது சிகிச்சை தேவைப்படும். சர்க்கரை இருந்தால், நீரிழிவுக்கான சிகிச்சை தேவைப்படும்.

 

6. நோய் பிரித்தறியும் பரிசோதனைகள் (Screening tests):

*அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்:

கர்ப்பமான 11 முதல் 14 வாரத்துக்குள் அல்ட்ரா சவுண்ட் மற்றும் நியூக்கல் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். இதில் கருவில் இருப்பது ஒற்றைக் குழந்தையா, ஒன்றுக்கும் மேற்பட்டதா, பொய் கர்ப்பமா எனப் பல விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியையும் இதயத் துடிப்பையும் அறியலாம். பிரசவ தேதியைக் கணிக்கலாம். குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம், ட்ரைசோமி 18 போன்ற பிறவிக் கோளாறுகள் ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளதா என அறியலாம். இது பாசிட்டிவ் என்றால், தாயின் ரத்தத்தில் PAPP-A மற்றும் hCG அளவுகளைச் சரிபார்த்து, அந்த சாத்தியத்தை உறுதிசெய்ய வேண்டும்.

*கர்ப்பமான 20-லிருந்து 22-வது வாரத்தில் மீண்டும் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். இதில் குழந்தையின் வளர்ச்சி ஒழுங்காக இருக்கிறதா அல்லது இதயம், சிறுநீரகம், மூளை, முதுகுத்தண்டு உள்ளிட்ட உறுப்புகளில் குறைபாடு உள்ளதா என அறியலாம்.

*32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவை. இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். இரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை போதும்.

 

7. சிறப்புப் பரிசோதனைகள்:

முவ்வகை பிரித்தறியும் பரிசோதனைகள் (Triple Screening tests):

கர்ப்பமான 11 முதல் 14 வாரத்துக்குள் எடுக்கப்படும் நியூக்கல் ஸ்கேனில் குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம், ட்ரைசோமி 18 போன்ற பிறவிக் கோளாறுகள் இருப்பதாகச் சந்தேகம் வந்தால், ஈஸ்டிரியால் (Estriol) ஹார்மோன் அளவு, ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஹார்மோன் அளவு, பனிக்குடநீர்ப் பரிசோதனை (ஆம்னியோசின்டெசிஸ்), கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங் பரிசோதனை, ஆல்பா பீட்டா புரோட்டீன் பரிசோதனை ஆகியவற்றைச் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

*இரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினை உள்ளவர்கள், இரட்டைக் குழந்தை உள்ளவர்கள் அல்லது 40 வயதைக் கடந்து கருத்தரித்தவர்கள் ஆகியோருக்கு 28-வது வாரத்தில் ஒரு ஸ்கேன் தேவைப்படும்.

*பிரசவ தேதி நெருங்கியும் பிரசவ வலி வராதபோது, பனிக்குட நீர் போதுமான அளவு இருக்கிறதா, சுகப்பிரசவத்துக்குச் சாத்தியமா, பிரசவத்துக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவது உண்டு.

*இப்போதெல்லாம் ‘சோதனைக் குழாய் குழந்தை’ போன்ற சிறப்பு சிகிச்சை முறையில் கரு உருவாக்கம் செய்யப்படுவதால், இப்படிப்பட்டவர்களுக்கு கர்ப்பமான 6-லிருந்து 7-வது வாரத்திலேயே ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும். குழந்தையின் ஆரம்பகட்ட வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் ஸ்கேன் இது.

*கருக் குழந்தையின் இதயத்துடிப்பை ஸ்டெதாஸ்கோப் கொண்டு 5-வது மாதத்தில்தான் கேட்க முடியும். ஆனால், ‘டாப்ளர் டிவைஸ்’ எனும் கருவியைக் கொண்டு கருவுற்ற 3-வது மாதத்திலிருந்தே குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்க முடியும்.

*மரபணு சார்ந்த குறைபாடுகளை அறியும் பரிசோதனை (Carrier Screening): குடும்ப வழியில் தலசீமியா, ஹீமோபிலியா, தசைஅழிவு நோய் போன்றவை குழந்தைக்குக் கடத்தப்படுவது உண்டு. இந்த வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய பெற்றோர் இருவரின் இரத்தமும் பரிசோதிக்கப்படும். இதை கருவுறுவதற்கு முன்போ, பின்போ செய்யலாம்.

*டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: நச்சுக்கொடியிலும் குழந்தையின் ரத்தக்குழாய்களிலும் எந்த அளவுக்கு ரத்தம் பாய்கிறது என்பதை அறியும் பரிசோதனை இது.

*3டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: நவீன மென்பொருளின் உதவியுடன் இது செய்யப்படுகிறது. குழந்தைக்குப் பிளவுபட்ட உதடு போன்ற உடலமைப்பு சார்ந்த குறைபாடுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள இது உதவுகிறது.

*4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: இதில் குழந்தையின் அசைவுகள் துல்லியமாகத் தெரியும்.

*குழந்தைக்கு எக்கோ பரிசோதனை: குழந்தைக்குப் பிறவியிலேயே தோன்றக்கூடிய இதயக் கோளாறுகளைத் துல்லியமாக அறிய இது உதவுகிறது.

 

அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். உதாரணத்துக்கு, குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போகலாம். அந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம். இப்படிச் சந்தேகம் உள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.

கருப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மறுபடியும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்திருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகத் தெரியும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கு குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமன் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.

 

குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்

சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)

மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.

 

மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள

Office Address 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.