நேச்சுரல் ஹெர்பல் ஹேர் ரிமூவர் Natural Herbal Hair Remover Cream

பெண்கள் அதிகமாக சந்திக்கும் அழகு பிரச்சினைகளில் ஒன்றுதான் முகத்தில் தேவையற்ற இடங்களில் வளரக்கூடிய முடிகள். சில பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை காரணமாக மீசை, தாடி என்று வளரும். அவ்வாறு வளரக்கூடிய முடிகளை நீக்குவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினால், திரும்பவும் முடி முளைக்கும். அடிக்கடி அதை நாம் பின்பற்ற வேண்டியதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் எந்தவித சிரமமும் படாமல் எளிமையாக முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை உதிர வைப்பதற்கு எந்த முறையை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த காலத்தில் பெண்கள் தங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக பியூட்டி பார்லர் செல்கின்றனர். மேலும் சிலர் ரேசர் போன்ற பொருட்களை வைத்து தங்கள் முடிகளை ஷேவ் செய்து கொள்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் முடிகள் மறுபடி மறுபடி முளைக்குமே தவிர அதை நிரந்தரமாக அவர்களால் என்றுமே நீக்க இயலாது.

தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்குவதற்குரிய அற்புதமான பேக்கை இப்பொழுது எப்படி தயார் செய்யலாம் என்று பார்ப்போம். இதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை குப்பைமேனி இலை, வேப்ப இலை மற்றும் விரலி மஞ்சள். குப்பைமேனி இலை அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக தெரு ஓரங்களில் காணப்படக்கூடிய அற்புதமான மூலிகை ஆகும். இந்த இலையை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் மேனியில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் தீர்க்கும் என்பதால் தான் குப்பையாக இருக்கும் மேனியையும் சரி செய்யும் இலை அதனால் குப்பைமேனி என்று பெயர் வந்தது.

வேப்ப இலை இது அனைவருக்கும் தெரியும். இதில் இருக்கும் கசப்புத் தன்மையால் நோய் கிருமிகள் அழிவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அடுத்ததாக விரலி மஞ்சள். இதில் ஆன்டிபயாட்டிக் அதிகம் இருக்கிறது. மேலும் இது சருமத்திற்கு ஒரு பொலிவை ஏற்படுத்தும். மறுபடியும் முடி வளராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மஞ்சளுக்கு இருக்கிறது.

ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை எடுத்து சுத்தமாக தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளுங்கள். அதேபோல் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையும் எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிக்கொள்ளுங்கள். விரலி மஞ்சள் பொடியாக்கி அதிலிருந்து இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் விற்கும் மஞ்சள் தூளை பயன்படுத்துவதற்கு பதிலாக விரலி மஞ்சளை பொடி செய்து பயன்படுத்தினால், அதன் பலன் நமக்கு அதிகமாக கிடைக்கும்.

இப்பொழுது இதை மூன்றையும் அம்மியில் வைத்து நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அம்மியை உபயோகப்படுத்தினால் தண்ணீரை அதிகம் ஊற்ற வேண்டிய தேவை இருக்காது. அதை தவிர்த்து நீங்கள் மிக்ஸியை உபயோகப்படுத்தினால் அதில் தண்ணீர் அதிகமாக சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

நன்றாக மைய அரைத்த இந்த விழுதை தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் தடவி விட வேண்டும். அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரைக்கும் இதை அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு நாம் தினமும் செய்து வந்தால் பத்தே நாளில் தேவையற்ற முடிகள் அனைத்தும் வலுவிழந்து உதிர்ந்து விடும். மேலும் புதிய முடிகள் முளைக்கிறதுக்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

இயற்கையான வழியில் கிடைக்கக்கூடிய இந்த மருத்துவ குணம் வாய்ந்த மூன்று பொருட்களையும் உபயோகப்படுத்து பக்க விளைவுகள் எதுவும் இன்றி நிரந்தரமாக தேவையற்ற முடிகளை நீக்கலாம்.