வால்நட் அறிவுத்திறனின் குறியீடு!!!

வால்நட் அறிவுத்திறனின் குறியீடு!!!


வால்நட்டில் உள்ள ஊட்டச் சத்துக்கள் :

இக்கொட்டை த‌ன் எடையில் 65 சதவீதம் நிறைவுறா கொழுப்பினையும், 15 சதவீதம் புரதத்தினையும் கொண்டுள்ளது.

ஏனைய கொட்டைகளை விட இக்கொட்டையே அதிகளவு பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது.

இதில் மிக அதிகளவு விட்டமின் இ, அதிகளவு விட்டமின் பி6 (பைரிடாக்ஸின்), பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவை உள்ளன. மேலும் இதில் விட்டமின் ஏ, பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), சி, கே போன்றவையும் காணப்படுகின்றன.

இதில் மிக அதிகளவு காப்பர், மாங்கனீஸ், அதிகளவு பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவையும், செலீனியம், கால்சியம், பொட்டாசியம் முதலியவையும் உள்ளன.

இது மிக அதிகளவு பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து ஆகியவையும் உள்ளன.

வால்நட்டின் மருத்துவ பண்புகள் :

மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு
இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.

இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது.

இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

ஆரோக்கியமான இதயத்திற்கு :

இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.

மேலும் இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எண்டோடெலியல் செல் செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆரோக்கிய இதயத்திற்கு இதனை அளவோடு உண்ணலாம்.

எலும்புகளின் பலத்திற்கு :

வால்நட்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகிறது. இது உடலானது கால்சியம் உறிதலை ஊக்குவிக்கிறது.

உடலின் எடையை பராமரிக்க :

இதனை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், கொழுப்புகள் கிடைப்பதால் இடைவேளை உணவாகவும் உட்கொள்ளலாம்.

இதனை அதிகமாக உட்கொண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் இதனை அளவோடு உட்கொள்வது அவசியம்.

ஆன்டி ஆக்ஸிஜென்ட் மையம் :

ஆன்டி ஆக்ஸிஜென்ட் அதிகமுள்ள உணவுப்பொருட்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மிகவும் அரிதான ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான குயினோன் ஜுக்லோன், டானின் டெல்லிமாக்ராண்டின் மற்றும் ஃபிளாவனோல் மோரின் ஆகியவை இக்கொட்டையில் உள்ளன.

இந்த ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது.

உடல் வளர்சிதை மாற்றம் மேம்பாடடைய :

இதில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவை உடலின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

செரிமானம், நியூகிளிக் அமில தொகுப்பு உள்ளிட்ட சீரான உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வால்நட்டினை உண்ணலாம்.

உணவுப் பாதையின் ஆரோக்கியத்திற்கு :

இது உட்புற செரிமான மண்டலத்தின் நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவுகிறது.

இதனை சீராக உட்கொள்ளும்போது லாக்டோபாசில்லஸ், ரூமினோகாக்கஸ் மற்றும் ரோஸ்புரியா போன்ற குடலின் ஆரோக்கியத்திற்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

சரும பாதுகாப்பிற்கு :

இதில் உள்ள விட்டமின் இ ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் இதனை உண்ணும் போது சருமச் சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் உண்டாவது தடுக்கப்படுகிறது.

கண்களுக்கு அடியில் கருவளையத்தை நீக்க வால்நட் உள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். பளபளக்கும் இளமையான சருமத்தைப் பெற இக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கூந்தலைப் பெற :

இக்கொட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் மயிற்கால்களை வலிமையடையச் செய்து பொடுகு உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் அடர்த்தியான, நீளமான, வலிமையான கூந்தலையும் வழங்குகிறது.

முறையான உறக்கத்திற்கு :

இக்கொட்டையினை உண்ணும்போது மெலட்டோனின் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. மெலட்டோனின் தூக்கத்தைத் தூண்டுவதோடு அதனை முறைப்படுத்துகிறது.

முறையான ஆழ்ந்த தூக்கத்திற்கு இக்கொட்டையினை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

வால்நட்டினைப் பற்றிய எச்சரிக்கை :

ஒருநாளைக்கு ஏழு முதல் ஒன்பது வால்நட்டுகளை உண்ணலாம். இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை உண்டாகும். அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலின் எடையை அதிகரிக்கும்.